SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
அந்நாள், 1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி இரவு.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் மக்கள், புத்தாண்டை, புதிய நூற்றாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தனர்.
அதேசமயம், கடந்த ஏழு நாட்களாக விமானக் கடத்தலால் ஏற்பட்ட பதற்றம் அந்த நாளில் தான் முடிவுக்கு வந்ததால், டெல்லியில் இருந்த மத்திய அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த முழு சம்பவத்திலும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பின்னிருந்து முக்கிய பங்காற்றினர்.
மே 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த தாக்குதலில், ‘ஐசி-814 விமானக் கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக’ இந்தியா தெரிவித்தது.
அத்துடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் 1999-ஆம் ஆண்டு கந்தஹார் விமான கடத்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட மௌலானா மசூத் அசாருக்கும் இடையிலான அத்தியாயம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
கந்தஹார் விமான கடத்தல்

1999ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று, நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 176 பயணிகள் மற்றும் 15 விமான குழுவினருடன் ஐசி 814 எனும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் லக்னௌவுக்கு புறப்பட்டது.
விமானி தேவி சரணால் வழிநடத்தப்பட்ட அந்த விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்த போது, முகமூடிய அணிந்த ஒருவர் எழுந்து, விமானி அறைக்குள் நுழைந்தார்.
விமானத்தை லக்னௌவுக்கு பதிலாக லாகூருக்கு திருப்புமாறு அவர் மிரட்டினார், அப்படி செய்யவில்லையென்றால் விமானத்தை குண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என்றும் மிரட்டினார். பின்னர், முகமூடி அணிந்த இன்னும் 4 பேர் எழுந்து, விமானத்தின் வெவ்வேறு பகுதிகளில் நின்றனர்.
கேப்டன் தேவி சரண் லாகூரை நோக்கி விமானத்தைத் திருப்பினார், ஆனால் அதை அடைவதற்கான போதுமான எரிபொருள் விமானத்தில் இல்லை. அதனால், அந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
எரிபொருளை மீண்டும் நிரப்பும் போது இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சத்தால், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பாமலேயே விமானத்தை லாகூருக்குத் திருப்புமாறு கடத்தல்காரர்கள் கட்டாயப்படுத்தினர்.
லாகூரில் அந்த விமானம் தரையிறங்கிய பின் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது, அவசர சூழல் காரணமாக, பாகிஸ்தான் வான்வெளியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
கடத்தல்காரர்கள் அந்த விமானத்தை அங்கிருந்து துபைக்குத் திருப்பினர். அங்கு, 27 இந்தியர்கள் விமானத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
துபை விமான நிலையத்தில் கடத்தல்காரர்களிடமிருந்து விமானத்தை மீட்க ‘நடவடிக்கை எடுக்க’ அனுமதிக்குமாறு இந்தியா கோரிய நிலையில், அதை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மறுத்தது.
அந்த விமானம் பின்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடத்தல் சம்பவம் முடியும் வரை அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.
கந்தஹாருக்கு அஜித் தோவல் சென்ற போது…

பட மூலாதாரம், Getty Images
விமானத்தை விடுவிக்க 100 கைதிகளை விடுவிக்கவும் 200 மில்லியன் டாலர் பணயத்தொகை தரவும் கடத்தல்காரர்கள் கோரியுள்ளனர். அந்த கைதிகள் இந்தியாவால் ‘பயங்கரவாதியாக’ கருதப்படுபவர்கள் ஆவர்.
விமானத்தில் கமாண்டோ நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கை என சில வாய்ப்புகளை இந்திய அரசு ஆலோசித்க்தது.
இதனிடையே, கூடுதல் நேரம் கிடைக்க ஏதுவாக கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவும் அனுப்பப்பட்டது.
அஜித் தோவல் உட்பட 3 பேர் இந்த குழுவில் இருந்தனர். அதில் ஒருவர் தோவலைப் போன்றே உளவு முகமையில் ஃபீல்ட் ஏஜென்ட்டாக இருந்தார், மற்றொருவர் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளருக்கு இணையான பதவியை வகித்தவர்.
இந்த விமானம் கடத்தப்படுவதற்கு சில காலத்துக்கு முன்புதான் ஜஸ்வந்த் சிங் வெளியுறவு அமைச்சராக ஆனார். எனவே, அவர் உடனடியாக ராஜ்ஜிய ரீதியிலான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது.
அந்த சமயத்தில் இந்தியாவின் ‘ரா’ (RAW) உளவு அமைப்பின் தலைவராக அமர்ஜித் சிங் துலாத் தலைவராக இருந்தார்.
துலாத் கூறுகையில், “கந்தஹாரிலிருந்து என்னுடன் தொடர்ச்சியாக தோவல் தொடர்பில் இருந்தார். அவரது பலம்தான் பணயக்கைதிகளை விடுவிக்க கடத்தல்காரர்களை ஒப்புக்கொள்ள வைத்தது. ஆரம்பத்தில், இந்திய சிறைகளில் உள்ள 100 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் கேட்டனர், ஆனால் முடிவில் மூன்று பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்” என்றார்.

பட மூலாதாரம், ANI
கந்தஹாரில் இருந்து இந்த முழு சம்பவம் குறித்தும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் ஷாஹ்ஸதா ஸுல்ஃபிகர் கூறுகையில், கடத்தல்காரர்களை நம்பாமல் இருக்க இந்திய அதிகாரிகள் கடும் முயற்சி செய்தனர், அனால் நடந்ததை பார்த்தபோதுதான் அது சாத்தியமல்ல என்பதை உணர்ந்தனர். தாங்கள் சிக்கிக்கொண்டதை இந்திய அதிகாரிகள் உணர்ந்தனர், அவர்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. அதன் விளைவாக, கடத்தல்காரர்களுக்கு பணிந்து, பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டியிருந்தது,” என்றார்.
கடத்தல்காரர்கள் கேட்டுக்கொண்டபடி, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் மௌலானா மசூத் அஸார், முஷ்டக் ஸர்கர் மற்றும் அகமது உமார் சயீத் ஷேய்க் ஆகியோரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
ரா தலைவர் துலாத் கூற்றின்படி, ஸர்கர் மற்றும் அஸார் ஆகியோர் கல்ஃப்ஸ்ட்ரீம் விமானம் மூலமாக ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.
“நாங்கள் புறப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர், டெல்லிக்கு உடனடியாக வருமாறு எங்களுக்குத் தகவல் வந்தது. ஏனெனில், பயங்கரவாதிகளை கந்தஹாருக்கு அழைத்துச் செல்ல டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் விமானம் காத்துக்கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.”
அவர்களுடன் யார் கந்தஹார் செல்வது என்ற நீண்ட விவாதம் நடைபெற்றது. தேவைப்படும் சமயங்களில் உடனடியாக முடிவுகலை எடுக்க முடிபவர் தான் அனுப்பப்பட வேண்டும் என, கந்தஹாருக்கு சென்ற இந்திய அதிகாரிகள் குழு கூறியது. அதனால்தான், வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடன் சென்றார்.

பட மூலாதாரம், Getty Images
கந்தஹார் விமான நிலையத்தில் ஜஸ்வந்த் சிங்கின் விமானம் தரையிறங்கியவுடன், நீண்ட நேரத்துக்கு தாலிபன் பிரதிநிதி யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை.
அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த சிங் தன் சுயசரிதையில், ‘எ கால் டூ சர்வீஸ்’ எனும் புத்தகத்தில், “விவேக் கட்ஜு (இந்திய குழுவை சேர்ந்தவர்) என்னிடம் வந்து, விமானத்தில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டுமா என என்னிடம் கேட்டார். அதற்கு ஒப்புக்கொள்வதை தவிர எனக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.” என எழுதியுள்ளார்.
ஜஸ்வந்த் சிங் எழுதுகையில், “மூன்று பேரும் விமானத்திலிருந்து இறங்கினர். அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்கள் இறங்கியவுடன் விமானத்தின் படிக்கட்டுகள் நாங்கள் இறங்க முடியாத வண்ணம் அகற்றப்பட்டது,” என எழுதியுள்ளார்.
“கீழே நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். நாங்கள் சரியானவர்களைத்தான் அழைத்து வந்திருக்கிறோமா என்பதை உறுதி செய்ய, பாகிஸ்தானிலிருந்து கந்தஹாருக்கு அந்த மூன்று பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை ஐ.எஸ். அமைப்பினர் அழைத்து வந்தனர்.”
“இதை உறுதி செய்த பின் தான் மீண்டும் விமானம் அருகே படிக்கட்டுகள் வைக்கப்பட்டன. அப்போது இருட்டிவிட்டது, குளிர் ஆரம்பித்துவிட்டது.”
ஷாஹ்ஸதா ஸுல்ஃபிகர் கூறுகையில், “விமானத்தின் ஓடுதளத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. பயங்கரவாதிகள் அதில் ஏறினர்.” என்கிறார்.
அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சியில் இருந்த தாலிபன் அரசாங்கம், இரண்டு மணிநேரத்துக்குள் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அதன்பின் ஆம்புலன்ஸில் ஏறியவர்கள் எங்கு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
2000-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆ1ம் தேதி, பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினர், ஆனால், ருபின் கடியால் என்பவர் மட்டும் திரும்பவில்லை, ஏனெனில் கடத்தல்காரர்கள் அவரை கொன்று விட்டனர்.
கந்தஹார் கடத்தலுக்குப் பின் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஜஸ்வந்த் சிங் தனது புத்தகத்தில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியா திரும்பியது, இந்த சம்பவத்தில் தன்னுடன் இருந்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை வீட்டுக்கு வரவழைத்து ஷாம்பெயின் அருந்தியதாக எழுதியுள்ளார்.
கடத்தல்காரர்கள் தங்களுக்குள் சீஃப், போலா, ஷன்கர், பர்கர், டாக்டர் என குறிப்புப் பெயர்களை வைத்தே அழைத்தனர்.
எனினும், 2000-ஆம் ஆண்டு ஜனவரின் 6-ம் தேதி, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் உளவு முகமையான ஐ.எஸ்.ஐ-க்கு (இண்டர்-சர்வீசஸ் இண்டலிஜென்ஸ்) கந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘ஹர்கத்-அல்-முஜாஹிதீன் (முன்னதாக ஹர்கத்-அல்-அன்சார் என அழைக்கப்பட்டது) அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்கள் இந்த கடத்தலை நிகழ்த்தினர்,’ என தெரிவித்தது.
‘அவர்களுள் இப்ராஹிம் அத்தர் (பஹவல்பூர்), ஷாஹித் அக்தர் சையத் (கராச்சி), சன்னி அகமது காஸி (கராச்சி), மிஸ்திரி ஸாஹுர் இப்ராஹிம் (கராச்சி) மற்றும் ஷாகிர் அனும் ராஜேஷ் கோபால் வர்மா (சுகார்) ஆகியோர் அடங்குவர்.’
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒமர் ஷேக் என்பவர் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பர்ல் என்பவரை கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டார்.
சில ஊடக செய்திகள் ‘1999-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட மூன்றாம் தீவிரவாதி முஷ்டக் அகமது ஸர்கர் தான் பஹல்காம் தாக்குதலை நிகழ்த்த உதவியதாக’ கூறுகின்றன.
கந்தஹார் விமான கடத்தலைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மௌலானா மசூத் அஸார் ‘ஜெய்ஷ்-இ-முகமது’ எனும் அமைப்பை நிறுவினார்.
கந்தஹார் விமானக் கடத்தல் – பஹல்காம் தாக்குதல் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2005-ஆம் ஆண்டில் உளவு முகமையின் இணை இயக்குநராக அஜித் தோவல் ஓய்வு பெற்றார். எனினும், உளவுத்துறையில் உள்ளவர்கள் மற்றும் தன் பணியுடனும் தொடர்பிலேயே இருந்தார்.
2005-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியான விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின்படி (WikiLeaks cables), தோவல் ஒரு கட்டத்தில் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.
எனினும், மும்பை காவல் துறை அதிகாரிகள் சிலரால், இதை கடைசி நிமிடத்தில் நடத்த முடியாமல் போனது. ஆனால், அப்படியான திட்டம் இருந்ததாக கூறப்படுவதை தோவல் மறுத்தார்.
2014-ஆம் ஆண்டில் நரேந்திர மோதி அரசு ஆட்சியமைத்த போது, அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டார்.
2016-ஆம் ஆண்டில் ,பஞ்சாபின் பதான்கோட் விமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது, அதில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் மௌலானா மசூத் அஸாரின் பெயரை இந்திய அரசு மேற்கோளிட்டது.
அப்போது, சீன பிரதிநிதியுடன் எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகளை தோவல் ரத்து செய்தார். இதற்காக தோவல் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.
தோவல் ஆக்ரோஷமாக பேசக் கூடியவர் என்றும், முறையற்ற விதத்தில் பேசக் கூடியவர் என்றும் அவருடைய விமர்சகர்கள் தெரிவித்தனர்.
2016-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம், உரியில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்த 19 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பல பத்தாண்டுகளில் இந்திய ராணுவம் மீது நிகழ்த்தப்பட்ட பெரிய தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.
இந்திய ராணுவ அதிகாரிகள், ‘ஜெய்ஷ்-இ-முகமது’ இந்த தாக்குதலை நடத்தியதாக கூறினர். அதன்பின், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாமில் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக இந்தியா அறிவித்தது.
2019-ஆம் ஆண்டில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயிற்சி முகாமில் ‘வான்வழித் தாக்குதலை’ நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.
1971-ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு முதன்முறையாக இந்திய வான் படை எல்லை தாண்டி நடவடிக்கையை எடுத்தது.
இந்தாண்டு ஏப்ரல் மாதம், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இது, லஷ்கர்-இ-தொய்பாவின் அமைப்பிலிருந்து உருவானது என இந்தியா தெரிவித்தது.
இந்தாண்டு மே மாதம் பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இந்தியா அறிவித்தது.
பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் மற்றும் பஹல்காம் தாக்குதல் ஆகியவற்றில் உளவுத்துறையின் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
ஒரு நாட்டின் பாதுகாப்பு முயற்சிகளில் வெற்றி அல்லது தோல்வி, தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனேயே இணைத்துப் பார்க்கப்படுகிறது. அவர் பாதுகாப்புப் படைகள், உளவு முகமைகள், அரசின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
2022-ஆம் ஆண்டில் விமானக் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட மிஸ்திரி ஸாஹுர் இப்ராஹிம், கராச்சியில் அடையாளம் தெரியப்படாதவர்களால் கொல்லப்பட்டார். அவர்தான், ருபின் கடியால் எனும் பயணியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர். அந்த கடத்தலின் போது மிஸ்திரி ஸாஹுர் ‘டாக்டர்’ எனும் குறிப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
கேப்டன் தேவி ஷரண் இந்தாண்டு ஜனவரி மாதம் விமானியாக ஓய்வு பெற்றார்.
இந்தாண்டு மே மாதம், இந்திய ராணுவத்தின் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எம்.ஓ) லெப்டினன்ட் ராஜிவ் கய் , செய்தியாளர் சந்திப்பில் “மே 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது, இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களுள் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரௌஃப் மற்றும் முதாசிர் அகமது போன்றவர்களும் அடங்குவர்” என்று தெரிவித்தார்.
“இந்த மூன்று பேரும் ஐசி 814 விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள்.”
கந்தஹார் விமான கடத்தலுக்குப் பின் இத்தனை ஆண்டுகளில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இந்தியா பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிலிருந்து, இந்தியாவில் எந்தவொரு கடத்தல் சம்பவமும் நடைபெறவில்லை.
1999-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இருக்கிறார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, ஆயுதப் படைகள், பாதுகாப்பு முகமைகள் மற்றும் உளவு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புப் பணிகளில் பங்காற்றி வருகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU