SOURCE :- BBC NEWS

33 நிமிடங்களுக்கு முன்னர்
ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மக்களுக்கு எதிராக அவர்களது வீடுகளை இடிக்கும் நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்கும் வகையில், ஆமதாபாத் குற்றப் பிரிவு அதிகாரிகள் சரோஜ்நகர் பகுதியில் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனர்.
“சியாசத் நகர் பெங்கால் வாஸில் உள்ள வீடுகளில் ஆமதாபாத் மாநகராட்சி (AMC) ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த ஆய்வில், சில வீடுகள் குளத்தில் மண் கொட்டி கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது,” என்று ஆமதாபாத் குற்றப் பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷரத் சிங்கால் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
“ஆமதாபாத் மாநகராட்சி(ஏஎம்சி) இங்கு வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மொத்தம் 50 ஜேசிபிகளும் 2,000 காவல்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் வங்கதேசத்தினர்” என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

நள்ளிரவில் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. பிபிசி குஜராத்தி குழு அன்று இரவு தாமதமாக சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தது.
சந்தோலா ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்லாமியர்கள் வசிப்பதாக பிபிசி குஜராத்தி நிருபர் ராக்ஸி காக்டேகர் சாரா கூறினார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “பொதுவாக, அரசாங்க ஆவணங்களின்படி, இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வங்கதேசத்தினர். அதனால், அந்தப் பகுதியில் குழப்பம் நிலவியது.
இங்கு வசிக்கும் மக்கள் இரவில் இருந்து தங்கள் வீடுகளைக் காலி செய்யத் தொடங்கினர். விரைவில் வீடுகள் இடிக்கப்படும் என்று நிர்வாகம் மக்களிடம் கூறியது. இங்கிருந்து சிறிது தூரத்தில் புல்டோசர்கள் நிற்கின்றன” என்றார்.
இந்த மக்கள் இரவில் தாமதமாக வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியதாகவும் ராக்ஸி காக்டேகர் சாரா கூறுகிறார்.
வீடுகளை இடிப்பதை நிறுத்தக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது

வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துவிட்டதால், வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
“எங்கள் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்திருக்கலாம், ஆனால் இந்திய குடிமக்களாக இருக்கும் மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கு வீடுகளை வழங்கும் செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அரசிடம் கூறியுள்ளது,” என்று சந்தோலா ஏரியைச் சுற்றியுள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பினா ஜாதவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த மனு குறித்து வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சந்தோலா ஏரியைச் சுற்றி வசிக்கும் மக்களில் சில வங்கதேசத்தினர் இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. யாராவது வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றால், அவரை மரியாதையுடனும் சட்டபூர்வ முறையிலும் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
“ஆனால் குஜராத் அரசு கடந்த நான்கு நாட்களில் 1200-1500 பேரை அழைத்துச் சென்று, பின்னர் அவர்களில் 90 சதவிகிதம் பேரை விடுவித்த விதம் சரியல்ல. ஏனென்றால் அவர்கள் இந்தியாவை சேர்ந்த இஸ்லாமிய குடிமக்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இப்போது அவர்களின் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது. விடுவிக்கப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் பணியும் தொடங்கிவிட்டது. இந்த வீடுகள் சட்டவிரோதமானவை என்று கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”

“இந்த விஷயத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன.
முதலாவதாக, அவர்கள் வங்கதேச மக்கள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களின் வீடு இடிக்கப்பட வேண்டுமா இல்லையா?
இரண்டாவதாக, அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டி விட்டு, பிகார், உத்தர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு சென்றுள்ளவர்களின் வீடுகள் இடிக்கப்பட வேண்டுமா இல்லையா?”
“மூன்றாவதாக, குஜராத்தில் உள்ள சந்தோலா ஏரிக்கு அருகில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் சியாசத் நகரைச் சேர்ந்த 26 பேர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஏரியின் கரையில் அவர்கள் சட்டவிரோதமாக வசித்து வந்தாலும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் அவர்களது வீடுகளை இடிக்க வேண்டும் என்றும் கூறினர். அவர்களுக்கு எந்த நோட்டீஸும் கொடுக்கப்படவில்லை.”
இந்த விவகாரத்தில் உள்ள மூன்று அம்சங்கள் இவைதான் என வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
‘எங்கே செல்வது என்றே தெரியவில்லை’

இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்களிடையே கடும் கோபம் நிலவியது. பிபிசி குஜராத்தியிடம் அந்த மக்கள் கூறுகையில், தாங்கள் அங்கேயே பிறந்ததாகவும், பல ஆண்டுகளாக அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெற்று வருவதாகவும் கூறினர்.
இது குறித்துப் பேசிய ஒருவர், “நாங்கள் இங்கே காய்கறிகளை விற்கிறோம். 30-35 வருடங்களாக இங்குதான் வசித்து வருகிறோம். இப்போது எங்கள் பொருட்களை உறவினர் வீட்டில் விட்டுச் செல்கிறோம்” என்றார்.
“நாங்கள் 40-45 வருடங்களாக இங்கு வசித்து வருகிறோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை. நாங்கள் எங்கு செல்வோம் என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை,” என்று ஒரு பெண் பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.
ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மூன்று குஜராத்திகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானை ‘குற்றம் சாட்டியது’ மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது உள்பட பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை ரத்து செய்தது.
அடக்குமுறையைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை ஆமதாபாத் மற்றும் சூரத்தில் உள்ள உள்ளூர் போலீசார் 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில் வங்கதேசத்தவர்கள் என்று கூறப்படுவோர் உள்பட, அந்த மக்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை கூறியது.

வெள்ளிக்கிழமையன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலாளர் ஆகியோர் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களைத் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறையினர் குஜராத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த ‘வங்கதேசத்தவர்களையும்’ ஆண்கள் மற்றும் பெண்கள் உள்படப் பிற ‘சட்டவிரோத’ வெளிநாட்டினரையும் ஒரு பெரிய காவல் படையின் முன்னிலையில் கைது செய்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இந்த காணொளியில், இருபுறமும் வரிசையாக காவல்துறை அதிகாரிகள் நின்றிருந்தனர். காவலில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மக்கள் நடுவில் இருந்தனர். அவர்கள் காவல்துறை வாகனங்களுக்கு நடுவே நடந்து செல்வதைக் காண முடிந்தது.
காவல்துறையினரால் குஜராத்தின் ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பிற இடங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் வங்கதேசத்தினர் உள்பட சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆமதாபாத் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) பாரத் படேல் ஏப்ரல் 27 அன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “சுமார் 900 பேர் விசாரணைக்காக ஆமதாபாத்தில் உள்ள குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் சுமார் 600 பேர் இந்திய குடிமக்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
மேலும், “இதுவரை 104 வங்கதேச குடிமக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வங்கதேச குடிமக்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்று ஏசிபி பாரத் படேல் கூறினார்.
ஆமதாபாத்தின் சந்தோலாவில் வங்கதேச மக்கள் உள்ளார்களா?

வங்கதேசத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போது ஆமதாபாத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சந்தோலா ஏரிக்கு அருகில் வசித்து வந்த மக்கள். ஆமதாபாத்தின் டானிலிம்டா பகுதியில் அமைந்துள்ள சந்தோலா ஏரி, சுமார் 1200 ஹெக்டேர் பரப்பளவில் நீண்டுள்ளது.
ஆமதாபாத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினர், குறிப்பாக வங்கதேச நாட்டினர் பற்றிய பிரச்னை விவாதிக்கப்படும் போதெல்லாம், டானிலிம்டா, ஷா ஆலம், மணிநகர் மற்றும் இசான்பூர் இடையே அமைந்துள்ள சந்தோலா ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் பெயர்கள் நிச்சயமாக விவாதத்தில் இடம்பெறும்.
முன்னதாக காவல்துறை அதிகாரிகள் அங்கு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி, குஜராத் காவல்துறை அதுபோன்ற ஒரு தேடுதல் வேட்டையின்போது, சுமார் 48 பேரைக் கைது செய்து, அவர்களை வங்கதேசத்திற்கு அனுப்பும் பணியைத் தொடங்கியது.
இந்த மக்கள் அனைவரும் போலி ஆதார் அட்டைகள், போலி ரேஷன் கார்டுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில் சட்டவிரோத வீடுகளில் வசித்து வருவதாக அப்போது காவல்துறை கூறியிருந்தது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சந்தோலா பகுதியில் வேலை செய்கின்றன.
“காவல்துறையினர் விசாரணை நடத்தி, வங்கதேச மக்களைக் கண்டுபிடித்து அவர்களது நாட்டுக்கு அனுப்ப வேண்டும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போக்கில் யாரையும் கைது செய்வது சரியல்ல” என்று குஜராத் ஆளுமைப் போராட்டக் குழுவின் நிறுவனரும், சந்தோலா தலாப் பகுதியில் மக்களுடன் பணியாற்றி வருபவருமான பினாபென் ஜாதவ், கடந்த ஆண்டு பிபிசி குஜராத்தி நிருபர் ராக்ஸி காக்டேகரிடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சந்தோலா குளம் பகுதியில் வசிக்கும் பலர், பல ஆண்டுகளாக வங்கதேசத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU