SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணி, லீக் ஆட்டங்களின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசி கட்ட போட்டிகளில் சொதப்புவது, அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 இடங்களில் வர முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரில் 65வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டு 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இன்னும் ஒரு போட்டி மட்டுமே ஆர்சிபி அணிக்கு இருப்பதால், டாப்-2 இடங்களில் வருவதற்கு பெரிய வெற்றியும், மற்ற அணிகளின் தோல்வியையும் ஆர்சிபி எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது.
ஆட்டநாயகன் இஷான் கிஷன்
சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற இஷான் கிஷன் தனது முதல் ஆட்டத்தில் சதம் அடித்ததைத் தொடர்ந்து அதன்பின் 10 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே சேர்த்து பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்தார். ஆனால், நேற்று 48 பந்துகளில் 94 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோருக்கு செல்லக் காரணமாக இருந்தார். சன்ரைசர்ஸ் அணி கடைசியாக சேர்த்த 86 ரன்களில் 54 ரன்கள் இஷான் கிஷன் பேட்டிலிருந்து வந்தவையாகும். சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணியில் இஷான் கிஷனைத் தவிர்த்து பெரிதாக எந்த பேட்டரும் பெரிய ஸ்கோர் செய்யவில்லை. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் என அதிரடியாகச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் மீண்டும் சொதப்பலாக பேட் செய்து 17 ரன்னில் வெளியேறினார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அடுத்துவந்த பேட்டர்கள் அதிரடியை மட்டுமே மாற்றவில்லை.
கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள், அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள், என கேமியோ ஆடி வெளியேறினர். ஆனால் மற்ற பேட்டர்களை களத்தில் தனக்கு ஒத்துழைப்பாக வைத்துதான் இஷான் கிஷன் தனிநபராக இருந்து ஸ்கோரை உயர்த்தினார்.
12-வது ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என வலுவாக இருந்தது. கேப்டன் பாட் கம்மின்ஸுடன் 12 பந்துகள் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷன் கிஷன் 43 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் என்ற ஒற்றை பேட்டரால் மட்டுமே நேற்று சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்டியது. இஷான் கிஷன் நேற்று சொதப்பி இருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஃபார்முக்கு வந்த கம்மின்ஸ்
கடந்த சில போட்டிகளில் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டுவந்தார், லைன் லென்த் கிடைக்காமல் கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்தார்.
ஆனால், நேற்றைய ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே விராட் கோலி, பில் சால்ட்டை திணறவிட்டார். கம்மின்ஸ் மின்னல் வேக பவுன்சரில் சால்ட்டின் ஹெல்மெட் மீது பந்து பட்டு பவுண்டரி சென்றது, கோலிக்கும் இதே போன்று தொடையில் அடி விழுந்தது. 4 ஓவர்கள் வீசிய கம்மின்ஸ் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடங்கும் நேரத்தில் கம்மின்ஸ் மீண்டும் இயல்பான பந்துவீச்சுக்கு திரும்பியுள்ளார்.
மலிங்கா 4 ஓவர்கள் வீசி 37ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி, ஹர்சல் படேல், உனத்கட், துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
ஹேசல்வுட் வெற்றிடம்
ஆர்சிபி அணி லீக் சுற்றுகளில் பெரிய வெற்றி பெற்றதற்கு ஹேசல்வுட்டின் பந்துவீச்சு பிரதான காரணமாக இருந்தது. ஐபிஎல் ஒருவாரம் நிறுத்தப்பட்ட போது, தோள்பட்டை காயத்தால் ஆஸ்திரேலியா சென்ற ஹேசல்வுட் மீண்டும் வருவது குறித்து தெளிவாக தெரியவில்லை.
அவர் இல்லாத வெற்றிடம் ஆர்சிபி பந்துவீச்சில் தெளிவாகத் தெரிந்தது. இங்கிடி, யாஷ் தயால், புவனேஷ்வர், சூயஷ் சர்மா என 4 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை வாரி வழங்கினர். குர்னல் பாண்டியாவும், ஷெப்பர்டும் கூட பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பட மூலாதாரம், Getty Images
3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்தே 11 ஓவர்கள் வீசி 130 ரன்களை வாரி வழங்கினர், 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். ஆர்சிபியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களின் திறமையற்ற செயல்பாடும் முக்கியக் காரணமாகும். கட்டுக்கோப்பாக பந்துவீசி 30 முதல் 40 ரன்களை சுருக்கி இருந்தால், ஆர்சிபிக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
இந்த ஆட்டத்தில் மட்டும் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் 15 சிக்ஸர்களையும், 16 பவுண்டரிகளையும் சன்ரைசர்ஸ் பேட்டர்களை அடிக்க அனுமதித்தனர். அதாவது 166 ரன்களை எளிதாக பவுண்டரி, சிக்ஸரிலேயே வழங்கியுள்ளனர்.
வலுவான தொடக்கம் கிடைத்தும் சறுக்கிய ஆர்சிபி
ஆர்சிபி அணிக்கு பில் சால்ட், விராட் கோலி இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து பவர்ப்ளே முடிவில் 80 ரன்கள் சேர்த்து, கோலி(42) ஆட்டமிழந்தார். அதன்பின் பில் சால்ட்(62) அரைசதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.
ஆர்சிபி அணி 173 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை நோக்கித்தான் நகர்ந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கடைசி வரிசை பேட்டர்கள் சொதப்பியதால், 16 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களில் ஆர்சிபி அணிசுருண்டது. விராட் கோலி, பில் சால்ட் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளம் வீணாகிப் போனது. நடுவரிசை பேட்டர்கள் மயங்க் அகர்வால் (11), பட்டிதார் (18), ஜிதேஷ் (24), ஷெப்பர்ட் (0), குர்னல் பாண்டியா (8), டிம் டேவிட் (1), புவனேஷ்வர் குமார் (3) என ஏமாற்றம் அளித்தனர்.
ஏற்கெனவே ஆர்சிபி அணி கடந்த கால சீசன்களில் ப்ளேஆஃப் சுற்றுவரை வந்து அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற முடியாமல்தான் வெளியேறியிருக்கிறது. கடந்த 6 சீசன்களில் 5 சீசன்களில் ப்ளேஆஃப் சுற்றில் இடம் பிடித்த ஆர்சிபி ஒருமுறை மட்டுமே 3வது இடத்தைப் பிடித்தது, மற்றவற்றில் ப்ளே ஆஃப் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியிருக்கிறது.
ஆனால், இந்த முறை அந்த துரதிர்ஷ்டத்தை உடைக்கும் வகையில் லீக் சுற்றில் ஆடினாலும், நேற்றைய ஆட்டம் மீண்டும் ஆர்சிபிக்கு “பழைய நினைவுகள்” வந்துவிட்டதை காண்பிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது.
அது மட்டுமல்லாமல் ஸ்கோர் போர்டு அழுத்தம் ஆர்சிபி பேட்டர்கள் தோல்வி அடைய காரணமாக இருந்தது. பெரிய ஸ்கோர், பெரிய வெற்றி இலக்கு, பேட்டர்கள் களமிறங்கும்போது, வெற்றிக்குத் தேவையான ரன்கள் பெரிதாகத் தெரியும்போது, அது பேட்டர்களுக்கு பெரிய அழுத்தத்தை தருகிறது.
அதனால், பேட்டர்கள் வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று சீராக விக்கெட்டுகளை இழந்தனர். விராட் கோலி, சால்ட் இருவரும் திட்டமிட்டு நிகர ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் அணியைக் கொண்டு சென்ற நிலையில் வெற்றிக்கு அருகே வந்துவிட்டு, கடைசி 16 பந்துகளில் ஆர்சிபி சொதப்பியதற்கு தேவையற்ற அழுத்தத்தை தலைக்குள் திணித்ததுதான் காரணம்.

பட மூலாதாரம், Getty Images
“தோல்வி நல்லதுதான்”
ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா பேசுகையில் “கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் கொடுத்துவிட்டோம். சன்ரைசர்ஸ் அணியினர் சிறப்பாக ஆடினர். அவர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கு பந்துவீச்சில் எங்களிடம் பதில் இல்லை. சில நேரங்களில் தோல்வி்யும் நல்லதுதான், அப்போதுதான் நம்மைப் பற்றி தீவிரமாக பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் முடியும்.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன் எங்களை ஆய்வு செய்ய கிடைத்த வாய்ப்பு. எங்களின் பாதகமான அம்சங்களை ஆய்வு செய்வோம், அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
ஆர்சிபிக்கு பின்னடைவு
இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. 13 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருக்கிறது.
அதேசமயம், ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் இருக்கிறது, இந்தத் தோல்வியால் ஆர்சிபியின் நிகர ரன்ரேட் கடுமையாகச் சரிந்து, 0.255 எனக் குறைந்ததால், 3வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே இருப்பதால் அதில் வென்றால் 19 புள்ளிகள் வரை பெற முடியும், நிகர ரன்ரேட்டை எவ்வளவு உயர்த்தினால் 2வது இடத்துக்கு முன்னேறலாம் என்பது பஞ்சாப் அணியின் வெற்றி தோல்வியில்தான் முடிவாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி 2வது இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்
ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்துக்கு முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் அடைந்த தோல்வி, குஜராத், பஞ்சாப் அணிக்கும் கீழே சறுக்க வைத்துவிட்டது. லக்னெள அணிக்கு எதிராக ஆர்சிபிக்கு கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் லக்னெளவிடம் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால்,டாப்-2 ரேஸிலிருந்து வெளியேறி, 3 அல்லது 4வது இடத்துக்கு சரியும்.
ஒருவேளை ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 19 புள்ளிகள் பெறும். ஆனாலும் இது டாப்-2 இடத்துக்கு ஆர்சிபி வருவதற்கு போதாது. ஏனென்றால் குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றுவிட்டால் 20 புள்ளிகள் பெறும், பஞ்சாப் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் போட்டிகளிலும் வென்றால் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடிக்கும், 20 புள்ளிகளுடன் குஜராத் 2வது இடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி 19 புள்ளிகளுடன் 3வது இடத்தையே பிடிக்க முடியும்.
ஆதலால், சிஎஸ்கே அணியிடம் குஜராத் அணி தோற்க வேண்டும், அவ்வாறு நடந்தால் ஆர்சிபி அணி லக்னெளவை வென்றால் டாப்-2 இடத்தில் வரலாம். ஒருவேளை குஜராத் அணி சிஎஸ்கே அணியை வென்றால், பஞ்சாப் அணி தனது கடைசி இரு லீக் போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும்.
அவ்வாறு பஞ்சாப் தோற்றால், பஞ்சாப் நிகரரன்ரேட்டைவிட எவ்வளவு ரன்கள் அதிகமாக எடுத்தால் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தில் இடம் பெற முடியும் என்பது ஆர்சிபிக்கு தெரிந்துவிடும். ஆதலால் ஆர்சிபி அணி 2வது இடத்துக்கு முன்னேற, குஜராத் தோல்வி அல்லது பஞ்சாப் தோல்வி என்பது கண்டிப்பாகத் தேவை.

முக்கிய ஆட்டங்களின் பட்டியல்
இன்றைய ஆட்டம்
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
இடம்: ஜெய்பூர்
நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
நாள் – மே 26
இடம் – ஜெய்பூர்
நேரம்- இரவு 7.30 மணி
சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்
குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே
நாள் – மே 25
இடம் – ஆமதாபாத்
நேரம்- மாலை 3.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs லக்னெள
நாள் – மே 27
இடம் – லக்னெள
நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)
சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)
நீலத் தொப்பி
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)
நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)
டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU