SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
மே 8ஆம் தேதி இரவு, பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாக இந்தியா கூறியது.
இதனையடுத்து, வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிலும் குறிப்பாக இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு பற்றி பரவலாக பேசப்படுகிறது.
ஆனால், இந்தியாவின் கூற்றை மறுத்துள்ள பாகிஸ்தான், தங்கள் ராணுவம் இந்தியாவில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் என எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களை அழிக்கும் தொழில்நுட்பம், நவீன போரில் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லையில் அடிக்கடி பதற்றங்கள் ஏற்படும் சூழலில், இந்த அமைப்புகளின் பங்கு அதிமுக்கியத்துவம் பெறுகிறது
ஒரு நாட்டைப் பாதுகாக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு, போர் போன்ற சூழ்நிலைகளில் மூலோபாய நன்மையைப் பெறுவதற்கும் உதவுகிறது.
கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் வார்த்தைகளில் ‘வான் பாதுகாப்பு அமைப்பு’ என்பதும் இடம் பெற்றிருக்கும் நிலையில், வான் பாதுகாப்பு அமைப்பு (Air Defence Systems) என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்வோம்.
வான் பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாட்டின் வான்வெளியை எதிரி விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் அமைப்பை வான் பாதுகாப்பு அமைப்பு என்று அழைக்கிறோம்.
வான் பாதுகாப்பு அமைப்பானது, ரேடார், சென்சார்கள், ஏவுகணை மற்றும் துப்பாக்கி அமைப்புகளைப் பயன்படுத்தி வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் எதிர்கொள்ளும் பணியைச் செய்கிறது.
வான் பாதுகாப்பு அமைப்புகள், நிலையானவை (permanently stationed) அல்லது நகரக்கூடியவை (movable) என இரண்டு வகையாக பயன்படுத்தப்படலாம். சிறிய டிரோன்கள் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்டவை இவை.
மக்கள் வசிக்கும் பகுதிகள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள் கட்டமைப்புகளை, வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதே வான் பாதுகாப்பு அமைப்புகளின் முக்கிய நோக்கமாகும்.
வான் பாதுகாப்பு அமைப்பு நான்கு முக்கிய பகுதிகளாக செயல்படுகிறது. எதிரி விமானங்களை கண்டறியும் ரேடார்கள் மற்றும் சென்சார்களுடன் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கண்டறியும் பணியை இவை செய்கின்றன. வான் பாதுகாப்பு அமைப்பு கொடுக்கும் தரவுகளை செயலாக்கி, முன்னுரிமைகளை முடிவு செய்யும் பணியை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மேற்கொள்ளும்.
ஆயுத அமைப்புகள் அச்சுறுத்தல்களைத் தடுக்கின்றன. அதே நேரத்தில் மொபைல் அலகுகள் விரைவாக வரிசைப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றன. ஏனெனில் போர்க்களத்தில் துரிதமாக செயல்படுவது மிகவும் அவசியமானதாகும்.

பட மூலாதாரம், Getty Images
அச்சுறுத்தலைக் கண்டறிதல், அச்சுறுத்தலைக் கண்காணித்தல் மற்றும் அச்சுறுத்தலை அகற்றுதல் என பல கட்டங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் நவீன தொழில்நுட்பமும் செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானவை.
முதல் கட்டத்தில், ரேடார் மற்றும் பிற சென்சார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வான்வழி அச்சுறுத்தல்கள் கண்டறியப்படுகின்றன. இங்கு ரேடார் என்பது, மின்காந்த அலைகளை அனுப்பி, எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் திரும்பும்போது அவற்றின் நிலையைக் கண்டறியும் முதன்மை சாதனமாகும்.
தொலைதூர ரேடார்கள், நடுத்தர தூர மற்றும் குறுகிய தூர ரேடார்கள், மின்னணு உணரிகள் (electronic sensors) மற்றும் அகச்சிவப்பு உணரிகள் (infrared sensors) போன்ற உபகரணங்கள் எதிரி விமானங்கள் வெளியிடும் சிக்னல்களைக் கண்டறிந்து, அவற்றின் சரியான இருப்பிடத்தைக் கண்டறியும்.
இந்தக் கட்டத்தில், அச்சுறுத்தலாக இருக்கும் பொருளின் (ஏவுகணை, விமானம் அல்லது டிரோன்) இயக்கம், தாக்குதலில் எந்த வகையான டிரோன்/விமானம் அல்லது ஏவுகணை பயன்படுத்தப்பட்டது போன்றவை கண்டறியப்படுகின்றன.
அச்சுறுத்தல் கண்காணிப்பு என்னும் இரண்டாம் கட்டத்தில், அவற்றின் இயக்கம், பாதை மற்றும் பிற செயல்பாடுகள் தொடர்பான துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும்.
ரேடார், லேசர் ரேஞ்ச்ஃபைண்டர்கள் (laser range finders) மற்றும் தரவு இணைப்பு நெட்வொர்க் மூலம், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் வேகம், பறந்து வரும் உயரம் மற்றும் திசையைக் கண்காணிக்க முடியும்.
தாக்குதல் அல்லது போரின் போது, எதிரியால் ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன்கள் அல்லது போர் விமானங்களை மட்டுமல்ல, அதன் சொந்த போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளையும் இது கண்காணிக்கும் என்பதால் அச்சுறுத்தலை கண்காணிப்பது என்பது மிகவும் முக்கியமானது.
இதற்கு கண்காணிப்பு அமைப்பு சீரானதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் சொந்த நாட்டு உபகரணங்கள், ஏவுகணைகள் அல்லது போர் விமானங்கள் சேதமடையாமல் இருக்கும்.
தொடர்ச்சியான கண்காணிப்புக்குப் பிறகு, எதிரி நாட்டிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் உரிய நேரத்தில் அகற்றப்பட வேண்டும்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது?
‘சுதர்சன சக்ரம்’ என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு S 400 பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, அதன் பல அடுக்குகள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளுக்கு பெயர் பெற்றது. இது ரஷ்ய, இஸ்ரேலிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் கலவையாக உருவாக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளில் ஐந்தை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. S-400 ஏவுகணை அமைப்பானது, அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே 5.43 பில்லியன் டாலர்களுக்கு செய்யப்பட்டது.
S-400 என்பது ஒரு நகரும் வான் பாதுகாப்பு அமைப்பு, அதாவது சாலை வழியாக கொண்டு செல்ல முடியும். உத்தரவிடப்பட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, S-400ஐத் தவிர, இந்தியாவிடம் பாரக்-8 மற்றும் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை அமைப்புகளும் உள்ளன. இவை வான் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறுகிய தூர அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஸ்பைடர் மற்றும் இக்லா போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
“இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமலேயே இதைக் கூறுகிறேன்” என்று ஓய்வு பெற்ற மேஜர் டாக்டர் முகமது அலி ஷா, பிபிசியிடம் கூறினார்.
“நமது படைகளால் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், பல இடங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும், ஜம்முவில் பறந்த டிரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்துள்ளது… ரஷ்யாவிடமிருந்து S-400 வாங்கும் போது அந்த முயற்சி தடைபடும் அபாயம் இருந்தது, ஆனால் இன்று அதே அமைப்புதான் எண்ணற்ற இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

மே 8ஆம் தேதி, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பல ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றதாகவும் அவை இந்தியாவால் முறியடிக்கப்பட்டன என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்த பாகிஸ்தான், இந்தியா மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.
இரு நாடுகளின் கூற்றுகளையும் பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
2019-க்குப் பிறகு, ரஷ்ய S-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்கியது. அதேநேரத்தில் சீனாவிடமிருந்து HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் வாங்கியது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு சீனா மற்றும் பிரான்சின் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் முக்கிய பகுதி HQ-9 ஆகும், இது 120 முதல் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறன் கொண்டது.
பிரான்சிடம் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஸ்பாடா வான் பாதுகாப்பு அமைப்பு, விமான தளங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களைப் பாதுகாக்க பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை விமான மார்ஷல் இக்ரமுல்லா பட்டி பிபிசி உருதுவிடம் கூறுகையில், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூர, நடுத்தர தூர மற்றும் நீண்ட தூர தரையிலிருந்து தரைக்கு பாயும் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனைக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
குறுகிய தூர, நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரை இலக்குகளைத் தாக்கும் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை விமான மார்ஷல் இக்ரமுல்லா பட்டி தெரிவித்தார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-16 FE பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தனது பாதுகாப்பு அமைப்பில் இணைத்துள்ளது. இது ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
இருப்பினும், வானிலிருந்து தரை இலக்குகளை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்பு எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக மேம்பட்டிருந்தாலும், அவை பல சவால்களையும் எதிர்கொள்கின்றன. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் திரளான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவது போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களால், இந்த அமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டியதற்கான தேவை அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் லேசர் அடிப்படையிலான ஆயுதங்கள் வான் பாதுகாப்புக்கான செலவை குறைப்பதுடன், மிகவும் திறமையானதாகவும் மாற்றக்கூடும். அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிக்க செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உதவும். அதே நேரத்தில், லேசர் தொழில்நுட்பம் ஆபத்தான தாக்குதல்களின் போது துல்லியமாக செயல்படுவதை உறுதிப்படுத்தும்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU