SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty/x.com/TararAttaullah

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல் தொடர்பான அச்சங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டுமென உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

திங்களன்று (ஏப்ரல் 28), சீனா, அமெரிக்கா, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தன. இருப்பினும், கடந்த பல நாட்களாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LOC) இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் போரின் விளிம்பில் நிற்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் நடவடிக்கையும் எடுக்க முடியுமா?

இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது சமீபத்திய அறிக்கையில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் (சாத்தியமான) தாக்குதல் குறித்த அவரது அறிக்கை, இந்திய நேரப்படி அதிகாலை 3:09 மணிக்கு வெளியானது. தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றிய அவர் உருது மொழியிலும் ஒரு பதிவை வெளியிட்டார்.

அவரது அறிக்கைகளுக்குப் பிறகு, புதன்கிழமை (ஏப்ரல் 30) அதிகாலையில், பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்குள் இந்தியா பாகிஸ்தானை தாக்கக்கூடும்’ என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியது என்ன?

பாகிஸ்தான் மீது இந்தியா ‘உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடும்’ என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

திங்கள் கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “உடனடியாக ஏதாவது நடக்கலாம் என்பதால் எங்கள் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இத்தகைய சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அவை எடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.

இந்தியாவின் சாத்தியமான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம், அரசை எச்சரித்துள்ளதாகவும் கவாஜா ஆசிப் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பேட்டியில், ‘பாகிஸ்தானின் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால், அந்தச் சூழ்நிலையில் மட்டுமே பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்’ என்றும் கவாஜா ஆசிப் கூறினார்.

இதில் மூலோபாய முடிவுகளை எடுப்பது பற்றி கவாஜா ஆசிப் பேசியுள்ளார். இது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

ஆனால், இந்த நேர்காணலுக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் டிரிப்யூனுக்கு அளித்த பேட்டியில், ‘அடுத்த இரண்டு-நான்கு நாட்களில் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தனது அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக’ கவாஜா ஆசிப் கூறினார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலான சாமா டிவியிடம் பேசிய கவாஜா ஆசிப், “நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். போர் அச்சுறுத்தல் எழுந்து வருகிறது” என்றார்.

ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், “அடுத்த இரண்டு-மூன்று அல்லது நான்கு நாட்களில் நாம் போரில் இறங்க வாய்ப்புள்ளது” என்றார்.

பின்னர் அவர் ஜியோ நியூஸிடம் பேசுகையில், “போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. எனவே அடுத்த இரண்டு-மூன்று நாட்கள் முக்கியமானவை என்று நான் சொன்னேன். ஏதாவது நடக்க வேண்டுமெனில், அது அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் நடக்கும்” என்று கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

தனது அறிக்கையை, ‘ஒரு போர் நடக்கப் போகிறது என்ற கணிப்பாகக் கருதக்கூடாது’ என்றும், அடுத்த இரண்டு-மூன்று நாட்கள் முக்கியமானவை என்பதையே தான் குறிப்பிட்டதாகவும் கவாஜா ஆசிப் கூறினார்.

பதற்றங்களைத் தணிக்க நட்பு நாடுகளை பாகிஸ்தான் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

வளைகுடா நாடுகள் மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் பேசியுள்ளதாகவும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து விளக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கவாஜா ஆசிபின் இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

“பஹல்காம் சம்பவத்தை ஒரு சாக்காகக் கொண்டு அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்குள் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எந்தவொரு தாக்குதலுக்கும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கப்படும். பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான விளைவுகளுக்கு இந்தியாவே பொறுப்பாகும்” என்று தரார் தெரிவித்திருந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், ANI

ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உள்ளூர் காஷ்மீரி ஒருவர் உLபட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியா அறிவித்தது.

இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கான விசாக்களை ரத்து செய்வது ஆகியவை அடங்கும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் இந்திய குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சிந்து நதியின் நீரை இந்தியா நிறுத்தினால், பாகிஸ்தான் அதை ஒரு ‘போர் நடவடிக்கையாகக்’ கருதும் என்று கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு தனது முதல் பொது அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ‘குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இருப்பினும், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டனவா?

சமீப காலமாக, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதில் இந்தியா முனைப்போடு இருந்தது. இந்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நிலைமை மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். “பஹல்காம் தாக்குதல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று நியூஸ்வீக்கில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் தெரிவித்திருந்தார்.

“கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது. தாக்குதல்களின் இலக்கு மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியா பலமாக பதிலடி கொடுக்கும் என்பது உறுதி” என்று அவர் கூறியிருந்தார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

‘தி கார்டியன்’ பத்திரிகையிடம் பேசிய மைக்கேல் குகல்மேன், “இந்தியாவின் பார்வையில், பொதுமக்களின் அழுத்தம் மற்றும் தாக்குதலின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒருவித ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு அதிகம். இது நடந்தால், பாகிஸ்தான் பலவீனமாகத் தோன்ற விரும்பாது. பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என்பது உறுதி” என்றார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா அல்லது பாகிஸ்தானின் எந்தவொரு தவறான மதிப்பீடும் மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“ஒரு வலுவான எதிர்வினையை நாம் காண முடிகிறது. இந்தியாவின் உறுதியை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் செய்தியை அனுப்பக்கூடிய ஒரு எதிர்வினை” என்று ராணுவ நிபுணர் ஸ்ரீநாத் ராகவன் பிபிசியிடம் கூறினார்.

2016 செப்டம்பரில் ஜம்மு காஷ்மீரின் யூரியில் உள்ள ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக இந்தியா கூறியது.

இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனத் தொடரணி மீதான தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019இல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா கூறியது.

“2016 முதல், குறிப்பாக 2019 வரை, பதிலடி கொடுக்கும் அளவு என்பது எல்லை தாண்டிய தாக்குதல் அல்லது வான்வழித் தாக்குதல்களை எட்டியுள்ளது. எப்போதும் போல, ஆபத்து என்னவென்றால் இரு தரப்பிலிருந்தும் தவறான கணக்கீடுகள் இருக்கலாம்” என்று ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார்.

பாகிஸ்தானில் பதற்ற நிலையா?

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், YouTube/@ISPR

போர் அச்சங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானிடம் இருந்து வரும் அறிக்கைகள் பாகிஸ்தானில் பயம் அல்லது அமைதியின்மை சூழல் நிலவுவதைப் பிரதிபலிக்கின்றனவா?

இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் காட்ட முயல்வதே இந்த அறிக்கைகளின் அர்த்தம் என்று ராணுவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“பாகிஸ்தான் இதுபோன்ற அறிக்கைகள் மூலம், தனது அரசாங்கமும் ராணுவமும் மட்டம் அனைத்திற்கும் தயார் நிலையில் உள்ளது என்பதையும், பாகிஸ்தான் தாக்கப்பட்டால், அந்நாடு அமைதியாக இருக்காது, பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்பதையும் இந்தியாவுக்கு சொல்ல விரும்புகிறது” என்று ராணுவ நிபுணர் அஜய் சுக்லா கூறுகிறார்.

இந்தியாவுடன் ராணுவ மோதலில் ஈடுபடும் திறன் தங்களுக்கு இருப்பதாகக் காட்டவும் பாகிஸ்தான் முயல்வதாக அஜய் சுக்லா கூறுகிறார்.

“பாலகோட் தாக்குதலின்போது, ​​பாகிஸ்தான் இந்திய விமானப் படையின் ஒரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. தங்களது ராணுவத் திறன் குறித்த எந்தச் சந்தேகமும் வேண்டாம் என்பதைக் காட்ட பாகிஸ்தான் முயல்கிறது” என்று அஜய் சுக்லா கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான் படைகளுக்கு இடையிலான சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், “இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது” என்றார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை குறித்துப் பேசிய அஜய் சுக்லா, “பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் அறிக்கைகளை நாம் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினால், நாம் பின்வாங்கப் போகிறோம் என்று நினைக்கக் கூடாது” என்றார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு அதிகம் என்று அஜய் சுக்லா நம்புகிறார்.

“இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானும் இந்தியாவும் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளும் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்பதையும், பஹல்காம் உயிரிழப்புகளுக்குப் பழிவாங்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. பாலகோட் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இவ்வளவு பதற்றம் இருந்ததில்லை” என்று அவர் கூறுகிறார்.

அஜய் சுக்லாவின் கூற்றுப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு ராணுவ மோதல் நடக்கவிருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன.

மறுபுறம், பாகிஸ்தானின் காயிதே ஆசாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ராணுவ விவகாரங்களில் நிபுணருமான டாக்டர் சல்மா மாலிக், “பாகிஸ்தானில் பயமோ, அமைதியின்மையோ, பீதியோ இல்லை. வரவிருக்கும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதைத்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்” என்று கூறுகிறார்.

“பாகிஸ்தான் மக்களிடம் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாங்கள் எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார். இந்தியா நட்புக்கரம் நீட்டினால், அது நட்புக்கானதாக இருக்கும். தாக்குதல் நடந்தால், அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்” என்று அவர் கூறுகிறார்.

“பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்புகிறது, ஆனால் போர் ஏற்பட்டால், அது அதற்கு முழுமையாகத் தயாராக உள்ளது. பாகிஸ்தான் பயப்படுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாகிஸ்தான் போர் குறித்துப் பேசவில்லை, இந்தியா தரப்பில் ஏதேனும் நடவடிக்கை இருந்தால், பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்றுதான் கூறுகிறது” என்கிறார் சல்மா மாலிக்.

“பாலகோட் தாக்குதல் நடந்தபோதும், பாகிஸ்தான் பின்வாங்கவில்லை. எனவே இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தாலும், பாகிஸ்தானும் அதே வழியில் பதிலடி கொடுக்கும்” என்று அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU