SOURCE :- BBC NEWS

பிரமாண்ட வெற்றியுடன் விடை பெற்ற சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பெறுவதை தவறவிட்டுள்ளது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் குஜராத் அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் மாறாமல் இருந்தாலும், பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட்டைவிட மோசமாக 0.254 எனச் சரிந்துள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், வெற்றியுடன் சீசனை முடித்துள்ளது.

மும்பை, ஆர்சிபி முதலிடம் பிடிக்க வாய்ப்பு

பிரமாண்ட வெற்றியுடன் விடை பெற்ற சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

குஜராத் அணியின் தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றில் 3 அணிகளில் முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை அணி பஞ்சாப்பை வீழ்த்திவிட்டால் 18 புள்ளிகளுடன் வலுவான நிகரரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேசமயம், பஞ்சாப் அணி மும்பையிடம் தோற்கும்பட்சத்தில் 17 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடிக்கும்.

கடைசி லீக்கில் லக்னெள வென்றுவிட்டால் தற்போது 17 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

17 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்திவிட்டால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும், ஆர்சிபியும் கடைசி லீக்கில் வென்றுவிட்டால் 19 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் யாருக்கு முதலிடம் என்பது தெரியவரும். இவ்வாறு நடந்தால், மும்பை அணி கடைசி இடத்திலும், குஜராத் அணி 3வது இடத்தைப் பிடிக்கும்.

ஆக, தற்போது ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை முதலிடம் பிடிக்க ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தோற்க வேண்டும், ஆர்சிபி முதலிடம் பிடிக்க பஞ்சாப் தோற்று, ஆர்சிபி கடைசி லீக்கில் வெல்ல வேண்டும்.

ஆனால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணி இனிமேல் முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை.

இளம் வீரர்களின் காட்டாற்று ஆட்டம்

சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அடித்தளமிட்டது தொடக்க வீரர் மாத்ரே(34), உர்வில் படேல்(37), பிரெவிஸ் (57) ஆகியோர்தான்.

கான்வே அரைசதம் அடித்தாலும் மிகவும் மெதுவாக ஆடினார். இளம் வீரர்கள் அதிரடியாக பேட் செய்து ரன்களைக் குவித்துவரும்போது அனுபவ வீரர் கான்வே படுமந்தாக பேட் செய்தது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது.

ஜடேஜா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி ஆட்டமிழந்திருந்தால் கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும் ஆனால் டி20 ஆடுகிறோம் என மறந்து டெஸ்ட் போட்டியைப் போன்று ஜடேஜா பேட் செய்தார். சீனியர் வீரர்கள் இருவருமே பேட்டிங்கின் ஸ்வாரஸ்யத்தையும், ரன் வேகத்தையும் மட்டுப்படுத்தினர்.

இதில் உர்வில் படேல், மாத்ரே இருவருமே சிஎஸ்கே அணியின் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படவில்லை. காயத்தால் மாற்றுவீரர்களாக அணிக்குள் வந்த இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரீவிஸ் 57 ரன்கள் அடித்தார்

பட மூலாதாரம், Getty Images

அம்பலமான குஜராத்தின் பலவீனம்

ஏற்கெனவே லக்னெள அணியிடம் 230 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் தோற்ற குஜராத்தின் பலவீனத்தை அறிந்து சிஎஸ்கே பெரிய ஸ்கோரை இலக்காக வைத்தது.

சிஎஸ்கே விரித்த வலையில் குஜராத் பேட்டர்கள் கச்சிதமாக விழுந்தனர். இந்த ஆட்டத்தில் குஜராத் வென்றிருந்தால், அனைத்துமே தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் குஜராத் தோல்வியால், லீக் சுற்றில் போட்ட வெற்றி நடை வீணாகிப்போனது.

லீக் சுற்றில் குஜராத் அணியின் 9 வெற்றிகளுமே பெரும்பாலும் டாப்-3 பேட்டர்களால் பெறப்பட்டவை.

அது சேஸிங்காக இருந்தாலும், முதலில் பேட்டிங்காக இருந்தாலும் சுதர்சன், கில், பட்லர் ஆகிய 3 பேருமே ஆதிக்கம் செய்தனர்.

இதனால் நடுவரிசையை குஜராத் அணியால் பரிசோதித்து பார்க்க முடியவில்லை. ஆனால், பின்பகுதி லீக் போட்டிகளில் நடுவரிசை பேட்டர்கள் அணியை வழிநடத்திச் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது,அணியின் உண்மையான நிலைமை என்னவென்று அம்பலமானது.

குஜராத் அணியைப் பொருத்தவரை டாப்ஆர்டர் சுதர்சன், கில் இருவரின் விக்கெட்டை எடுத்துவிட்டாலே அணி ஆட்டம் கண்டுவிடும், ப்ளே ஆஃப் சுற்றில் பட்லர் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும்.

குஜராத் அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான்.

மாத்ரே அதிரடி தொடக்கம்

மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

பட மூலாதாரம், Getty Images

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய முடிவு செய்தார். மாத்ரே, கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். கான்வே தொடக்கத்திலிருந்தே பேட்டிங் ரிதத்துக்கு வரவில்லை, மிகவும் மந்தமாக செயல்பட்டார்.

ஆனால், அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரிலே மாத்ரே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 28 ரன்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தார்.

உடனடியாக பிரசித் கிருஷ்ணா பந்துவீச வரவழைக்கப்பட்டார். பிரசித் ஓவரில் வீசப்பட்ட பவுன்ஸர், கூடுதல் வேகத்துக்கு திணறிய மாத்ரே, அதே ஓவரில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உர்வில் படேல் விளாசல்

அடுத்துவந்த உர்வில் படேல், கான்வேயுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடவே பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்தது. உர்வில் படேலும் பந்துகளை வீணாக்காமல் ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயரந்தது, கோட்ஸி ஓவரில் 3 பவுண்டரிகளை உர்வில் படேல் விளாசினர். கான்வேுவும் மெல்ல ஃபார்முக்குத் திரும்பி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.

ரஷித்கான் வீசிய ஓவரில் லாங்ஆன் திசையில் உர்வில்படேல் அடித்த ஷாட்டை ஷாருக்கான் கேட்ச் பிடிக்கத் தவறினார். இந்த கேட்சைபிடித்திருந்தால், உர்வில் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார்.

சாய் கிஷோர் வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசிய உர்வில் படேல், அடுத்தபந்தையும் சிக்ஸருக்கு விளாச முயன்றார். ஆனால், சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 19 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷிவம் துபே வந்தவுடனே கிஷோர் ஓவரில் சிக்ஸர் விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 115 ரன்கள் சேர்த்தது.

ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். ஷாருக்கான் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசிய துபே, அதே ஓவரில் கோட்ஸிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்னில் வெளியேறினார். 13 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 150 ரன்களை எட்டியது.

ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார்.

பட மூலாதாரம், Getty Images

பிரெவிஸ் மின்னல்வேக அரைசதம்

அடுத்துவந்த பிரெவிஸ், கான்வேயுடன் சேர்ந்தார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த கான்வே, ரஷித்கான் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த சீசனில் கான்வே படுமந்தமாக பேட் செய்து இந்த அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்தவுடன் அடுத்த பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று போல்டாகி 52 ரன்களில் வெளியேறினார்.

ஜடேஜா, பிரெவிஸ் களத்தில் இருந்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களுடன் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் பிரெவிஸ் அதிரடியாக 57 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்தது.

கோட்ஸீ வீசிய 17வது ஓவரில் பிரெவிஸ் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களும், அர்ஷத் கான் வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா சிக்ஸரும், பிரேவிஸ் பவுண்டரி என 14 ரன்களும் சேர்க்கவே சிஎஸ்கே ஸ்கோர் உயர்ந்தது.

சிராஜ் வீசிய 19-வது ஓவரை குறிவைத்த பிரெவிஸ் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து, 19 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். பிரசித் வீசிய கடைசி ஓவரிலும் பிரெவிஸ் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 23 பந்துகளில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை

பட மூலாதாரம், Getty Images

குஜராத்தின் பொறுப்பற்ற பந்துவீச்சு

ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட்டோமே எதற்காக மெனக்கெட வேண்டும் என்ற ரீதியில்தான் குஜராத் அணி பந்துவீச்சு இருந்தது. 7 பந்துவீச்சாளர்களை குஜராத் அணி பயன்படுத்தியும் சிஎஸ்கே பேட்டர்களின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த 7 பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே ஓவருக்கு 5 ரன்களை வழங்கினார். மற்றவர்கள் அனைவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதமும் அர்ஷத் கான் 2 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார்.

சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை. குஜராத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் நிலையில் இப்படி மோசமான பந்துவீச்சை வைத்து எவ்வாறு டிபெண்ட் செய்யப் போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

231 சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. ஏற்கெனவே லக்னெள அணியும் இதேபோன்று 230 ரன்களுக்கு மேல் சேர்த்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் குஜராத் அணி தோற்றிருந்தது. அதை மனதில் வைத்து சுதர்சன், கில் நிதானமாகத் தொடங்கினர்.

சாய் சுதர்சன் நிதானமாகத் தொடங்கினர்

பட மூலாதாரம், Getty Images

எப்போதும் இல்லாதவகையில் புதிய பந்தில் ஜடேஜாவை பந்துவீச தோனி அழைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் புதிய பந்தில் முதல் ஓவரை ஜடேஜா வீசுவது இதுதான் முதல்முறையாக இருந்தது.

கம்போஜ் கடினமான லெனத்தில் வீசியதால் சுப்மான் கில் சற்று சிரமப்பட்டு ரன்களைச் சேர்த்து சிக்ஸர் விளாசினார். ஆனால் மீண்டும் கடினமான லென்த்தில் கம்போஜ் பந்துவீச பெரிய ஷாட்டுக்கு கில் முயன்றபோது பேட்டில் எட்ஜ் எடுத்து 13 ரன்னில் கில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கம்போஜ் வீசிய 5வது ஓவரில் ருதர்போர்ட் ரன் ஏதும் சேர்க்காமல் மாத்ரேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவருக்குள் குஜராத் அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது.

குஜராத் அணி தோல்வியின் பிடிக்குள் வந்துவிட்டதை அறிந்த தோனி, பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து அருமையாகப் பயன்படுத்தினார். ஜடேஜா, துபே, நூர்அகமது என பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து குஜராத் பேட்டர்களை திணறவைத்தார் தோனி.

 ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

சுதர்சன், ஷாருக்கான் இணைந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினர். துபே வீசிய 10-வது ஓவரில் சுதர்சன் சிக்ஸர், பவுண்டரியும், ஷாருக்கான் சிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர்.

ஜடேஜா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் ஷாருக்கான் 19 ரன்னில் பதீரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரிலேயே சுதர்சனும் 41ரன்களில் துபேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால் குஜராத் தோல்வியை நோக்கி நகர்ந்தது.

ரஷித்கான், திவேட்டியா தோல்வியிலிருந்து தப்பிக்க வைக்க முயன்றனர். ஆனால் இருவராலும் பெரிய பங்களிப்பு செய்ய முடியவில்லை. நூர் அகமது பந்துவீச்சில் ரஷித்கான்(12), திவேட்டியா(14) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கோட்ஸி 5 ரன்னில் பதீரனா பந்துவீச்சில் போல்டாகினார். அர்ஷத் கான் 20 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி, அடுத்த 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 2 விக்கெட்டுகளை இழந்தது. 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆட்டமிழந்து, 83 ரன்களில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே தரப்பில் கம்போஜ், நூர் அகமதுதலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எப்போது ஓய்வு – தோனி பதில்

எப்போது ஓய்வு - தோனி பதில்

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் ” இறுதியில் நல்லவெற்றி. அரங்கம் நிறைந்திருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவு ரசிகர்கள் வந்திருந்தனர். வெற்றியுடன் முடித்துள்ளோம், அனைவரின் சிறப்பான பங்களிப்பாக இருந்தது. என் ஓய்வு குறித்து முடிவு செய்ய 3 அல்லது 4 மாதங்கள் தேவைப்படும். இது தொழில்முறை கிரிக்கெட் என்பதால், முடிந்த அளவு சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும். எந்த அளவு கிரிக்கெட் மீது தீராத பசி, ஆர்வத்தைப் பொருத்துதான் முடிவு செய்வேன். என் ஓய்வு குறித்து முடிவு செய்ய போதுமான நேரம் இருக்கிறது. நான் ராஞ்சிக்கு சென்று முடிவு செய்வேன். நான் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டேன் என்று சொல்லவும் இல்லை, திரும்பவும் வருவேன் என்றும் கூறவில்லை. எனக்கு முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கிறது.

இந்த சீசன் தொடங்கும்போது 6 போட்டிகளில் 4 சென்னையில் நடந்தது. சேஸிங்கின்போது 2வது இன்னிங்ஸில் நாங்கள் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகினோம். பேட்டிங் எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. இப்போது அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர், ருதுராஜ் அடுத்த ஆண்டு வருவார், அவர் அதிகமாக எதைப்பற்றியும் கவலைப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU