SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா மியாபுரம்
- பதவி, பிபிசி தமிழ்
-
20 ஏப்ரல் 2025, 06:52 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நீரிழப்பு முதல் கோடைக்காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் இளநீர் ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது.
சூட்டைத் தணித்து தாகத்தைத் தீர்த்து, சோர்வை நீக்கும் என்பதால் அனைவரும் இளநீரை அருந்துகின்றனர்.
மது அருந்துதலால் ஏற்படும் விளைவுகளை (ஹேங்ஓவர்) குறைக்கும் என்றும் சிறுநீரக கல்லை கரைக்கும் என்றும் கூறப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை? ஆய்வுகள் கூறுவது என்ன?
இளநீரின் மற்ற பயன்கள் என்ன என்பதையும் இங்கே பார்க்கலாம்.
இளநீரில் என்னென்ன உள்ளன?
மண் மற்றும் தென்னை ரகத்துக்கு ஏற்ப இளநீரின் சுவை மாறுபடும்.
100 மிலி இளநீரில் 18 கலோரிகள், 0.2 கிராம் புரதம், கார்போஹைட்ரேட் 4.5 கிராம், சர்க்கரை 4.1 கிராம் மற்றும் பொட்டாசியம் 165 மில்லி கிராம் ஆகியவை உள்ளன என, ஊட்டச்சத்து சங்கத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ஜோ வில்லியம்ஸ் கூறுகிறார். கொழுப்பு அதில் அறவே இல்லை.
எலெக்ட்ரோலைட்ஸ், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிரம்பிய அற்புதமான பானம் இளநீர் என, பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறியதாக, வோக் இணையதளம் தெரிவிக்கிறது.
இளநீரில் நமது செல்களை காக்கும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
தாதுக்கள்
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளதாக, தேசிய சுகாதார நிறுவனம் (NIH) கூறுகிறது.
இதய நலன் முதல் எலும்புகளின் நலன், தசை செயல்பாடு வரை பலவற்றுக்கும் முக்கியமான இந்த தாதுக்களை பெரும்பாலானோர் தேவையான அளவு பெறுவதில்லை என NIH இணையதளம் கூறுகிறது.
விளையாட்டு வீரர்கள் வலுப்பெற பயன்படுத்தும் பானங்களில் உள்ள அளவை ஒத்த எலெக்ட்ரோலைட்டுகள் இளநீரில் உள்ளதாக சிலர் நம்புவதாக ஜோ வில்லியம்ஸ் கூறுகிறார்.
அவகேடோ, வாழைப்பழம், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் உள்ள சராசரி பொட்டாசியத்தைக் காட்டிலும் 100 மிலி இளநீரில் உள்ள பொட்டாசியம் மிக அதிகம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்துள்ள பல உணவுகள் இளநீரை விட மலிவாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளன என்கிறார் ஜோ வில்லியம்ஸ்.

பட மூலாதாரம், Getty Images
ஆன்டிஆக்ஸிடென்ட்
இந்த அமினோ அமிலம் உடலில் ஆபத்தான மூலக்கூறுகள் (free radicals) உருவாவதை தடுக்க உதவுகிறது.
ரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் உடலியல் காரணங்களால் ஏற்படும் விறைப்பு குறைபாடு ஆகியவற்றை சரிசெய்யவும் எல்-ஆர்ஜினைன் உதவும் என, மயோ கிளீனிக் இணையதளம் கூறுகிறது.
ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் நிறைந்த இரு கலவைகள் இளநீரில் இருப்பதாக, விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகள் கல்லீரல் நலனை மேம்படுத்தும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா?
விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ரத்தச் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இளநீர் உதவுவது தெரியவந்திருப்பதாக NIH இணையதளம் கூறுகிறது.
நீரிழிவுடன் தொடர்புடைய மன சோர்வின் மோசமான விளைவுகளையும் இளநீர் குறைப்பதாக கூறப்படுகிறது.
இளநீரில் உள்ள மெக்னீசியம் இன்னும் கூடுதலான பலன்களை வழங்குகின்றது. நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மக்னீசியம் உதவுகிறது. எனினும், அவகேடோ மற்றும் வாழைப்பழங்களிலும் மக்னீசியம் உள்ளது.
இளநீரை பயன்படுத்தி விலங்குகள் மீது செய்யப்பட்ட ஆய்வுகள் நம்பிக்கையான முடிவுகளை அளித்திருப்பதாகக் கூறும் ஜோ வில்லியம்ஸ், மனிதர்களிடத்தில் அந்த விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சிறுநீரக கல்லை கரைக்குமா?
சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்க நமது உடலுக்குப் போதுமான நீர்ச்சத்து கிடைக்க வேண்டும்.
கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் இணைந்து கடினமான படிகங்கள், கல்லாக சிறுநீரகத்தில் மாறுகின்றன.
சிறுநீரக கல் உருவாவதை மட்டும் தடுக்காமல், அவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளாமலும் இளநீர் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நோய்களுக்கான ஆபத்தை இளநீர் குறைப்பதாகவும் ஹெல்த் லைன் இணையதளம் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உடற்பயிற்சிக்கு முன்னதாக அருந்தினால்…
விளையாட்டு வீரர்களின் செயல்திறனை இளநீர் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஏனெனில் அதில் சோடியம் மற்றும் பொட்டாசியத்துடன் குளுக்கோஸ் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலுக்கு சக்தியை வழங்குகிறது. விளையாட்டு வீரர்களுக்காக விற்கப்படும் பானங்களில் சோடியமும் பொட்டாசியமும் தான் முதன்மையாக உள்ளன.
உடற்பயிற்சிக்கு முன்பாக இளநீர் அருந்தினால், கோடை காலத்திலும் உடற்பயிற்சி செய்வதற்கான திறன் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.
உடற்பயிற்சிக்குப் பின்பாக இளநீர் அருந்தினால், கார்போஹைட்ரேட்-எலெக்ட்ரோலைட் பானங்கள் போன்றே உடலுக்கு நீர்ச்சத்தை அளிப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மதுவால் ஏற்படும் ஹேங்ஓவரை சரி செய்யுமா?
மது அருந்திய பின் ஹேங்ஓவர் ஏற்படுவது வழக்கம். மது அருந்திய பின் உடலில் இருந்து நச்சுக்களை கல்லீரல் அகற்றாது, இதனால் நீரிழப்பு எற்பட்டு தலைவலி, சோர்வு, குமட்டல் போன்றவை ஏற்படும். இதுதான் ஹேங்ஓவர்.
ஊட்டச்சத்து நிபுணரும் ஃபுட் டார்ஜிலிங் நிறுவனத்தின் இணை நிறுவனருமான டாக்டர் சித்தாந்த் பார்கவா, விரைவாகவும் ஆரோக்கியமாகவும் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்க ஒரே வழி இளநீர் அருந்துவதுதான் என கூறியதாக வோக் இணையதளம் கூறுகிறது.
ஹேங்ஓவரால் ஏற்படும் இந்த அறிகுறிகளை இளநீர் போக்குகிறது. தலைவலியை குறைப்பதில் பொட்டாசியம் திறம்பட செயல்புரிகிறது. இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகள் மற்றும் மாங்கனீசு ஆகியவை கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அழற்சிக்கு எதிரான பண்புகளை மாங்கனீசு கொண்டுள்ளது. ஹேங்ஓவர் அறிகுறிகளை சரிசெய்ய இது உதவுகிறது.
உடலில் எலெக்ட்ரோலைட் சமநிலை குலையும்போது தலைவலி, சோர்வு, குமட்டல் ஆகியவை ஏற்படும். அப்போது, இளநீர் அருந்துவது ஒரு புத்துணர்வை தரும்.
இளநீர் ஹேங்ஓவர் அறிகுறிகளை உடனே சரிசெய்யாது என்றும், ஆனால் உடலுக்கு உடனேயே நீர்ச்சத்து கிடைப்பதால் ஒரு ஆற்றல் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹேங்ஓவரை இளநீர் சரிசெய்யும் என கூறுவதற்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. எனினும், எலெக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளதால், உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்தை அளிக்க இளநீரை பெரும்பாலும் அருந்துகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
எல்லோரும் இளநீர் அருந்தலாமா?
“பெரும்பாலானோருக்கு இளநீர் அருந்துவது எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனினும், சிறுநீரகம் செயலிழந்தவர்கள், அல்லது குறைவாக பொட்டாசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய சிறுநீரக பாதிப்பு உடையவர்கள், நீர்ச்சத்துக்காக அடிக்கடி இளநீர் அருந்துவது சிறந்த யோசனை இல்லை” என ஊட்டச்சத்து நிபுணர் ஜோ வில்லியம்ஸ் கூறுகிறார்.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
இளநீர் குடிப்பதால் அலர்ஜி ஏற்படுவது மிகவும் அரிது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU