SOURCE :- BBC NEWS

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

பட மூலாதாரம், Getty Images

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், நம் கண்ணுக்குத் தெரியாத வில்லனாக இருக்கிறது என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம். ஆழ்கடல் தொடங்கி மனிதர்களின் ரத்தம், தாய்ப்பால் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வும் அதற்கு மாற்று கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்கள், சாதனங்களில் உள்ள ரசாயனப் பொருட்களையும் நமக்கே தெரியாமல் நாம் உட்கொள்வதற்கும் இதய நோய் இறப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகழ் பெற்ற மருத்துவ இதழான ‘தி லேன்சட்’-ன் ஒரு அங்கமான இபயோமெடிசின் மின்னிதழலில் வெளிவந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 356,238 பேர் இதனால் உயிரிழந்த நிலையில், உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் மட்டும் 103,587 பேர் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆய்வு என்ன சொல்கிறது?

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

பட மூலாதாரம், Getty Images

2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள், இதய நோயை முக்கியமான சுகாதாரப் பிரச்னையாக அங்கீகரித்தது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் (கிட்டத்தட்ட 8 பேரில் ஒருவர்) இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு மட்டும் 1.7 கோடி பேர் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். இது அந்த ஆண்டு உலகம் முழுவதும் பதிவான இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகள் என்ன காரணத்தால் நிகழ்ந்தன என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் பாலிமர்கள் மற்றும் ரசாயன சேர்க்கைப் பொருட்கள், குறிப்பாக டை எத்தில்ஹெக்ஸைல் தாலேட் (Di(2-ethylhexyl)phthalate) என்கிற ரசாயனம் தான் இதய நோய் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

தாலேட் (phthalate) ரசாயனம் பாலிவினைல்குளோரைட் (பிவிசி) பிளாஸ்டிக்குகளை மென்மையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி அதிகமாக நடைபெறும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் சார்ந்த ரசாயனங்கள் 55-64 வயது பிரிவில் உள்ளவர்களில் இதயநோய் இறப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. இது அங்கீகரிக்கப்படாத முக்கியமான சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்னை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

பட மூலாதாரம், Getty Images

2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் 356,238 இறப்புகள் தாலேட் நுகர்வுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 14% மரணங்கள் இதனால் தான் நிகழ்ந்துள்ளன. இந்த இறப்புகளில் 16.8 சதவிகிதம் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பதிவாகியுள்ளன.

உலகின் வெவ்வேறு நாடுகளிலும் உள்ள தாலேட் பயன்பாடு அளவைப் பொருத்து இதய நோய் சுமை என்பது வேறுபடுகிறது. அதிக வருமான கொண்ட நாடுகளைவிடவும் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இதன் பாதிப்பும், இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வு ஒன்றின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் தாலேட் பயன்படுத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் வைத்து சாப்பிடும் உணவுகளில் இருந்து மனித உடலுக்கு அதிக அளவிலான தாலேட் வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் மற்றும் குப்பைக் கிடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ரசாயனப் பொருட்கள் பரவலாக எதில் எல்லாம் பயன்படுத்தப்பட்டன?

  • பொம்மைகள்.
  • பேக்கேஜிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள்.
  • அழகு சாதனப் பொருட்கள்.
  • பெயிண்ட்.
  • மருத்துவ மற்றும் ஆய்வக உபகரணங்கள்.

ஆனால் தற்போது பெரும்பாலான பொருட்களில் தாலேட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலை என்ன?

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

பட மூலாதாரம், Getty Images

அதிக அளவில் வயதான மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளில் தாலேட் தாக்கத்தால் ஏற்படும் இதய நோய் மரணங்கள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

2018-ம் ஆண்டின் தரவுபடி நாடு வாரியாக இறப்புகள்

  • இந்தியா (103,587)
  • சீனா (60,937)
  • இந்தோனீசியா (19,761)

சீனாவில் 2018-ம் ஆண்டு 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 15.72 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 60,937 பேர் இதன் தாக்கத்தால் ஏற்பட்ட இதய நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இந்தியாவில் அதே வருடம் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 10.38 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 103,587 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடப்பட்ட வயதுப் பிரிவில் இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவின் மக்கள் தொகையில் 66 சதவிகிதம் என்கிற அளவில் தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகள் சீனாவைக் காட்டிலும் 70 சதவிகிதம் அதிகமாக உள்ளது.

உயிரிழப்பு மற்றும் வாழ்நாள் இழப்பு

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வில் உயிரிழப்புகளுடன் சேர்த்து வாழ்நாள் இழப்பு (Years of Lives Lost) என்கிற ஒரு கணக்கீடும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அவர்களின் வயது மற்றும் ஒரு நாட்டில் உள்ள சராசரி ஆயுட்காலம் ஆகியவை கணக்கிடப்பட்டு இந்த அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி இந்தியா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் இந்த வயதினர் முறையே 29,04,389, 1,935,961 மற்றும் 587,073 வருட ஆயுட்காலத்தை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 356,000 பேர் பிளாஸ்டிக் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இது அந்த வருடத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகளில் 13.5 சதவிகிதம் ஆகும்.

வாழ்நாள் இழப்புக்கான விலை என்ன?

இந்த ஆய்வில் வாழ்நாள் இழப்புக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திற்கும் தோராயமாக 1000 டாலர்கள் என வைத்துக் கொண்டாலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் சமூக செலவு 10.2 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபரின் வாழ்வை மதிப்பிடும் அளவு இல்லையென்றும் இத்தகைய இறப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு கணக்கீடு என்றும் ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக பிளாஸ்டிக் தொழில்துறை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் வரும் தாலேட் தாக்கங்கள் மற்றும் வணிக பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் பிவிசி போன்றவற்றில் தாலேட் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் சீனா, பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முக்கியமான நாடாக இருந்தது. அவ்வருடத்தில் மட்டும் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் 29% சீனாவில் தான் இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி இந்தியாவில் தான் பிளாஸ்டிக் உமிழ்வு (ஒவ்வொரு வருடமும் 9.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்கிற அளவில்) அதிகம்.

பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுவதாக ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்து வரும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தான் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளதாக லேன்சட் ஆய்வு கூறுகிறது.

கட்டுப்படுத்துவது எப்படி?

2008-ம் ஆண்டுக்கு முன்பாக இதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரிய அளவிலான விதிமுறைகள் இல்லை. ஆனால் ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் இதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் 2003-ம் ஆண்டு உணவு பேக்கேஜிங் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பொருட்களின் தாலேட் உள்ளடக்கிய பொருட்களைப் பயன்படுத்த தடை கொண்டு வரப்பட்டது.

2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும் குழந்தைநலன் மற்றும் உணவுத் துறையில் தாலேட் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது.

2008-2018க்கு இடைப்பட்ட காலத்தில் கனடா குழந்தை பொம்மைகள் மற்றும் தயாரிப்புகளில் தாலேட் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதே போல் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் குழந்தை பொருட்களில் தாலேட் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

2018-ம் ஆண்டு சீனா பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு கழிவுகளுக்குத் தடை விதித்துள்ளது.

இந்தியாவும் சமீபத்தில் உணவு பேக்கேஜிங் துறையில் தாலேட் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

வளரும் நாடுகள் சந்திக்கும் சவால்கள் என்ன?

பல நாடுகளில் தாலேட் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் இல்லை என இந்த ஆய்வில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள் இருவிதமான சுமைகளைச் சந்திப்பதாக லேன்சட் ஆய்வறிக்கை கூறுகிறது. ஒன்று அவர்கள் தங்கள் நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும். மறுபுறம் தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளில் இருந்து வரும் கழிவுகளையும் சமாளிக்க வேண்டும்.

தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் கழிவுகள் வளரும் நாடுகளில் கொட்டப்படுவதும் அந்த நாடுகள் மீதான சுமையை அதிகரித்துள்ளது.

பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்வது?

இந்தியா, இதயநோய் இறப்பு, பிளாஸ்டிக், ரசாயனம், பித்தலேட்

பட மூலாதாரம், Kuzhandhaisamy

மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இந்தத் தகவல் புதிது அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி. “இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளால் இதயநோய், நீரழிவு நோய், கருவுறாத்தன்மை மற்றும் புற்றுநோய் என நான்கு நோய்கள் பிரதானமாக வருகின்றன. லேன்சட் ஆய்வறிக்கை இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தும் என நம்புகிறேன்” என்றார்.

பிளாஸ்டிக் கழிவுகள் மூன்று வழிகளில் மனித உடலில் கலக்கின்றன என்று அவர் விவரித்தார். “முதலாவது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதன் மூலம் வரும் புகையினால் வருகிறது. இரண்டாவது மாசடைந்த குடிநீரைப் பருகுவதன் மூலமும் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கின்றன. மூன்றாவதாக உணவுப் பொருட்கள் மூலம் வருகின்றது” என்றார்.

இந்த பாதிப்பை தவிர்ப்பதற்கான வழிகளையும் முன்வைக்கிறார் குழந்தைசாமி. அதைப்பற்றி பேசியவர், “அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவே கூடாது. ஒருமுறை பயன்படுத்த வேண்டிய பாட்டில் போன்ற பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது.” என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU