SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
“அது ஒரு நல்ல மதிய வேளை. என் அம்மாவும், நானும், என் தங்கையும் என் அப்பாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஞாயிறு என்பதால் அசைவ உணவு பதார்த்தங்களை சமைத்து வைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அப்பா வீட்டுக்கு வர தாமதமானது. அம்மா, என்னையையும் என் தங்கையையும் சாப்பிடக் கூறிவிட்டு என் அப்பாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். அன்று அவர்கள் இருவரும் 5 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிட்டார்கள்,”
“கடந்த 30 வருடங்களாக, ஒவ்வொரு உணவு வேளையும் என் அம்மாவுக்கு இப்படித்தான் செல்கிறது. எந்த ஒரு ஞாயிறு அன்றும் எங்கள் வீட்டில் என் அம்மா, அனைவருக்கும் முன்பாக உணவு சாப்பிட்டதாக ஞாபகமே இல்லை,” என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பிரசாந்த்.
இந்த செய்திக்காக நான் பேசிய பலர் வீட்டிலும் இது தான் நிலைமை. உணவு, பெண்கள் உண்ணும் உணவு என்பது எப்போதாவது, எங்காவது, என்றைக்காவது விவாதம் ஆகும் ஒரு செயல்.
ஆனால் உண்மையில் பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்ட இந்திய சமூகத்தில் பெண்களின் உணவு குறித்து எப்போது பேசப்படுகிறது? பெண்களின் ஆரோக்கியம் குறித்து எப்போது அதீத ஆர்வம் காட்டப்படுகிறது? உணவு அரசியலில் பெண்கள் உண்ணும் உணவு எவ்வாறு அணுகப்படுகிறது? நம்முடைய உணவுகள் ஆணாதிக்க எண்ணங்களுடன் பகிரப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
பாரம்பரியமாக கடத்தப்படும் நிர்பந்தம்!
பெண்களை தியாகச் சுடர்களாக காட்டிக் கொள்ளும் போக்கு இங்கு கொண்டாடப்படுகிறது. பல்வேறு தருணங்களில், தங்களின் சுயத்தை இழந்து ‘குடும்பம்’ என்ற அமைப்பிற்காக பெண்கள் மெழுகாக உருக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தலைமுறை தலைமுறையாக இருக்கிறது என்பதை பிபிசி தமிழிடம் பேசிய பல பெண்கள் உறுதி செய்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை பூர்வீகமாக கொண்ட ஆனந்தி* திருமணமான புதிதில் அவர் கணவர் வீட்டில் அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை நினைவு கூர்ந்தார்.
“அம்மா அவருக்காக எதையும் சமைத்துக் கொள்ளமாட்டார். அனைவரும் உணவு உண்ட பின் மிச்சம் எது இருக்கிறதோ அதைத்தான் உண்பார். நீங்களும் கூட அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்,” என்று கூறினார் அவர். ஆனந்திக்கு அப்போது வயது 21.
“என் வீட்டில் என் அம்மாவும், பாட்டியும் அவர்கள் விரும்பிய உணவை சமைத்தார்களா என்றால் எனக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையில் அவர்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே வீட்டில் சாப்பாடு சமைத்தனர்,” என்றார் ஆனந்தி.
விவசாயப் பின்னணியைச் சேர்ந்த சத்யா* பிபிசி தமிழிடம் பேசிய போது, “நான் திருமணமாகி வந்த புதிதில் மிகவும் பசிக்கிறது என மதிய நேரம் சமைத்து சாப்பிட்டேன். என்னுடைய மாமியார் அன்று மாலை வீட்டிற்கு வந்து, குடியானவன் (விவசாயி) வீட்டில் நான்கு மணிக்கு சமைத்து சாப்பிட்டால் குடும்பம் உருப்படுமா? என்று கேட்டுவிட்டார். அதன் பின் எவ்வளவு பசித்தாலும் மாலை நேரங்களில் உணவு உண்பதை அடியோடு நிறுத்திக் கொண்டேன்,” என்று கூறுகிறார்.

அனைத்து சமூகப் பின்னணியிலும் இந்த போக்கு நிலவுகிறதா?
“எங்கள் வீட்டில் வைக்கும் ரசத்தில் தெளிவு ரசம் வீட்டின் ஆண்களுக்கும், மண்டிய கசடு ரசம் வீட்டில் உள்ள பெண்களுக்கும் வழங்கப்படும்.”
“அசைவ உணவில் இறைச்சியின் சிறப்பான பாகம் எப்போதும் ஆண்களின் தட்டில் தான் வைக்கப்படுகிறது.”
“வீட்டில் அப்பாவும், அண்ணனும் இல்லையென்றால், அன்று நாங்கள் அசைவ உணவு சமைப்பதில்லை…”
என்று பிபிசி தமிழிடம் பேசிய பல பெண்கள் தங்களின் அனுபவத்தை பகிர்கின்றனர்.
தாய் வழி சமூகத்தின் கூறுகளை பின்பற்றும் தமிழ் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த சுமையா முஸ்தஃபா, “மற்ற சமூகத்தினரோடு ஒப்பிடுகையில் இங்கு உணவு அரசியல் கொஞ்சம் மாற்றம் கொண்டவை. எங்கள் பகுதியில் திருமணமான ஆண்கள் பெண்களின் வீட்டில் வந்து வாழும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றோம். வீட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது பெண்களே என்பதால் அவர்கள் மருமகன்களுக்கு தரும் முன்னுரிமைகள் மற்றும் சலுகைகளைக் காட்டிலும், அவர்கள் வீட்டு பெண்களுக்கு அதிகம் கிடைக்கிறது,” என்கிறார் சுமையா.
இந்தியாவின் கடற்கரை நகரங்களில் வாழும் சிறு சிறு இனக்குழுக்களின் கலாசாரம் மற்றும் உணவுக்கூறுகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் எழுத்தாளரான சுமையா தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

பட மூலாதாரம், Getty Images
எந்த நேரத்தில் பெண்களின் உணவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது?
முதல் மாதவிடாய், முதல் கர்ப்பத்தின் போது மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிக அக்கறை செலுத்தப்படுகிறது.
“இந்த இரண்டு தருணங்களுமே மற்றவர்களின் நலன் சார்ந்த செயல்பாடாக இருக்கிறதே அன்றி அந்த பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வழங்கப்படுவதில்லை. குடும்பம் என்ற அமைப்பில் குழந்தைப்பேறு என்பது மிக முக்கியமான ஒன்றாக கொண்டாடப்படுகிறது என்பதால் இந்த போக்கை நாம் காண்கிறோம்,” என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார் சுமையா.
“பல பிரிவுகளைக் கொண்ட ஒரு சமூகமாக நாம் இருந்தாலும், உணவும் பெண்களும் என்று வரும் போது அனேக பிரிவினர்கள் மத்தியிலும் இந்த போக்கு இருப்பதை நம்மால் காண முடிகிறது,” என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த இரண்டு தருணங்கள் இல்லாமல், மற்றொரு ஒரு நீடித்த உடல் மாற்றத்திற்கு பெண்களுக்கு ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. ‘மாதவிடாய் நிற்றல்’ (Menopause) காலகட்டம் தான் அது. “ஆனால் அதைப் பற்றிய உரையாடல்களே இங்கு அதிகம் நிகழ்வதில்லை,” என்று கூறுகிறார் எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன்.
விவசாயத்தில் பெண்களின் பங்கு குறித்தும் அவர்களின் வாழ்வியல் சார்ந்தும் எழுதி வரும் அபர்ணா, “இந்த காலகட்டத்தில் பெண்களின் உணவு மட்டுமல்ல அவர்களின் மன நலம் சார்ந்தும் கூட யாரும் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவு குறித்து அவர்கள் சிந்திப்பதே இல்லை. இன்று மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கூடியுள்ளது. ஆனால் பெண்களின் வாழ்க்கை, மாதவிடாய் நிற்றலுக்கு பிறகு முடிவுக்கு வந்துவிடுவதைப் போல் வாழத் துவங்கிவிடுகிறோம்,” என்றும் அவர் மேற்கோள்காட்டுகிறார்.
“இந்த காலகட்டத்தில் என்ன வகையான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லித்தருவதில்லை. எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்களின் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. நான் 45 வயதை நெருங்கிய பிறகே இது குறித்து அறிய முற்பட்டேன். ஆனால் என் வயது பெண்கள் மத்தியில் இது தொடர்பான ஒரு உரையாடலே இல்லை. உணவு பெண்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்பதை உணரவே மறுக்கும் வகையில் நம் சமூகம் நம்மை வளர்த்தெடுக்கிறது,” என்று கூறுகிறார் அபர்ணா.

பட மூலாதாரம், Getty Images
சமைப்பதோடு முடிந்துவிடும் பெண்களுக்கும் உணவுக்குமான தொடர்பு
மூத்த பத்திரிகையாளரும், தொடர்ச்சியாக பட்டியலின மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தி வரும் ஜெயராணி, கிராமப்புறங்களில் நிலவும் உணவு கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் பற்றி பிபிசி தமிழிடம் பேசினார்.
அப்போது, “வீடுகளில் ஒரு நல்ல ஆட்டுக்கறி குழம்பு வைக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். இன்றும் கூட, அதில் மிகவும் சுவையான, ஆரோக்கியமான பாகம் என்பது அந்த வீட்டு ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்குமே முதலில் வழங்கப்படுகிறது. கோவில் திருவிழாக்களில் ஒரு ஆடு வெட்டப்படும் போதே ஆண்களுக்கான விருந்து ஆரம்பமாகிறது. பெண்களுக்கோ இறுதிப் பந்தியில் தான் அது விருந்து என்ற நினைவே ஏற்படும்,” என்று விவரிக்கிறார் ஜெயராணி.
“சமைப்பதோடு பெண்களுக்கும் சமையலுக்குமான உறவு முறிந்துவிடுகிறது. உண்பதற்கும் பெண்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. மேலும் இந்திய சமூகத்தில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்ணும் போக்கே கிடையாது.
இங்கே பெண்கள் பரிமாற ஆண்கள் அமர்ந்து உட்கொள்ளும் போக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு காலமும், நீ சமைத்துவிட்டாய் நான் உனக்கு உணவு பரிமாறுகிறேன் என்று சொல்லும் ஆண்களை பார்க்கவே இயலாது.
மேலும் ஆண்கள், மற்றவர்களுக்கு உணவு இருக்கிறதா என்பதை அறியாமல் உணவை உண்ணும் போக்கைக் கொண்டிருக்கிறார்கள். ஆக்கி இறக்கி வைத்தால், மற்றவர்களுக்கு இருக்கிறதா என்று பார்க்காமல் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு தெரியும் இங்குள்ள பெண்கள் வெறும் சாதத்தை தயிர் ஊற்றியோ, மோரில் குழைத்தோ உண்டுவிடுவார்கள், மேலும் பெண்கள் அதுகுறித்து கவலை தெரிவிக்கமாட்டார்கள் என்றும் நம் வீட்டு ஆண்களுக்கு தெரியும்” எனவும் அவர் மேற்கோள்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
சினிமாக்களில், சமூக வலைதளங்களில், இலக்கியங்களில் பெண்களும் உணவும்
புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர், சினுவா அசேபே எழுதிய, “திங்க்ஸ் ஃபால் அபார்ட்” புத்தகத்தில், ஆப்பிரிக்க பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு ஆணுக்கு சரியான நேரத்தில் வீட்டில் அவருடைய மனைவி உணவு பரிமாறவில்லை என்றால், என்ன நிகழும் என்பதை குறிப்பிட்டிருப்பார்.
இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கிலும் பெண்களுக்கும் உணவுக்குமான உறவு ஒரு சிக்கலான அடிப்படையை கொண்டுள்ளது என்பதையே இந்த இலக்கியங்கள் சுட்டுகின்றன.
“நான் அவளுடைய குடும்பத்தைப் பற்றி நினைக்கும் போது, அடுப்பில் வதங்கும் இறைச்சியின் சத்தத்தையும், தீயும் பூண்டின் மணத்தையும், சமையலறையில் பாத்திரங்கள் மோதிக் கொள்ளும் சத்தத்தையும், அங்கிருந்து வரும் பெண்களின் பேச்சொலியையும் நினைவு கூறாமல் இருக்க இயலவில்லை. என்னுடைய மாமியர், உயிருடன் இருக்கும் ஒரு மீனை சிறுசிறு துண்டுகளாக்குவார். என்னுடைய மனைவியும் அவளின் சகோதரியும் ஒரு கோழியை ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் இருக்கும் நேர்த்தியோடு துண்டிடுவார்கள்,” – இது 2024-ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஹான் காங்கின் தி வெஜிடேரியன் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சிறு பகுதி.
தன்னுடைய மனைவியையும், அவரின் குடும்பத்தாரையும் நினைக்கும் ஒரு ஆண் எதையெல்லாம் நினைக்கிறார் என்று எழுதியிருப்பார் ஹான் காங். இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் தன்னுடைய மனைவி குறித்து உறவினர்கள் மத்தியில் பேசும் சதீஷ் (அதில் ஹூசைன்), “சசிக்கு (ஶ்ரீதேவி) லட்டுகள் செய்வது மட்டும் தான் நன்றாக வரும்,” என்று கூறும் காட்சியை இங்கே நினைவு கூறலாம்.
தமிழில் பருத்திவீரனில் ப்ரியாமணி, வாரணம் ஆயிரத்தில் சிம்ரன், திருச்சிற்றம்பலத்தில் நித்யா மேனன், உன் சமையலறையில் சிநேகா, முள்ளும் மலருமில் படாஃபட் ஜெயலட்சுமி என்று ஒரு சில கதை மாந்தர்களே நிறைவாக உணவு உண்ணும் வகையில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலிக்க நேரமில்லையில் நித்யா மேனன், மார்டன் லவ் சீரிஸில் ரித்து மேனன் ஆகியோர் அதிகமாக உணவு உண்பதைப் போல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இரண்டு படங்களிலும், காதல் தோல்வியில் இருந்து மீண்டும் வர உணவை ஒரு ‘கோப்பிங் மெக்கானிசம்’ போன்று பயன்படுத்தியிருப்பார்கள்.

பட மூலாதாரம், Eros International
ராஜ்கிரண் போன்று நல்லி எலும்பை கடித்து உண்ணும் பெண்களை யாராவது காட்சிப்படுத்தியிருக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார் ஜெயராணி.
“உண்மையைக் கூற வேண்டும் என்றால் இன்றைய சினிமாக்கள், பெண் கதாப்பாத்திரங்கள் தூய்மைவாத அடிப்படையில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் உணவு சமைப்பது போன்று காட்சிகள் இருக்கும். ஆனால் உணவை உண்பது போன்ற காட்சிகள் குறைவாக இருக்கும். அப்படியே இருந்தாலும் அதில் வரும் பெண்கள் சைவ உணவை உண்பவர்களாக இருப்பார்கள்,” என்பதை அவர் மேற்கோள்காட்டுகிறார் அவர்.
“எந்தெந்த வீடுகளில் எல்லாம் குடும்ப வன்முறை தீவிரமாக இருக்கிறதோ அங்கே உள்ள பெண்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்துத் தரும் பொறுப்பை அப்பெண்களின் அம்மாக்களோ, மாமியார்களோ ஏற்றிருப்பார்கள். கிராமப்புறங்களில் குடும்ப வன்முறையை காரணம் காட்டி குடும்ப உறவுகளில் இருந்து பெண்கள் வெளியேறும் போக்கு மிகவும் குறைவு என்பதால் உணவை ஒரு ஆதரவாக பெண்கள் பயன்படுத்துகின்றனர். அதன் நீட்சியாகவே பருத்திவீரன் காட்சியை பார்க்க முடிகிறது,” என்று குறிப்பிடுகிறார் ஜெயராணி.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் பல வீடியோக்களில் தங்களின் கணவர்களுக்கு உணவு சமைத்து தரும் பல வீடியோக்களை காண இயலுகிறது. என்னதான் சமூக வலைதள பயன்பாடுகளை முன்னேற்றமாக பார்க்கும் நிலை ஏற்பட்டாலும் அங்கும் பெண்கள் தங்களுக்கான பாலினம் சார் பணிகளை ஊக்குவிக்கும் போக்கே நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தரவுகள் கூறுவது என்ன?
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்கள் குறைவாகவும், இறுதியிலும் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
உலக உணவு திட்டம் அமெரிக்காவின் (World Food Program USA(wfpusa)) தரவுகளின் படி, உலகில் உணவு பாதுகாப்பின்மையால் வாடும் 690 மில்லியன் (69 கோடி) மக்கள் தொகையில் 60% பேர் பெண்கள்.
“உலக நாடுகள் சிலவற்றில் ஒரு குடும்பத்தின் ஆண்களும், ஆண் குழந்தைகளும் உணவு உட்கொண்ட பின்னரே பெண்கள் உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நெருக்கடி காலத்தில் தங்களின் உணவை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து, குடும்ப உறுப்பினர்கள் நிறைவாக உட்கொண்டனர் என்பதை உறுதி செய்யும் நபர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்,” என்பதையும் மேற்கோள்காட்டுகிறது wfpusa-த்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2019-2021-ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு – 5 (NFHS), ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் அதிக அளவு ரத்த சோகைக்கு ஆளாகின்றனர் என்று குறிப்பிடுகிறது. 15-49 வயது பெண்களில் (கர்ப்பிணி அல்லாதவர்கள்), 53.2% பெண்கள் ரத்தசோகைக்கு ஆளாகின்றனர். இதே வயது பிரிவைச் சேர்ந்த கர்ப்பிணிகளில் 50.4% பெண்கள் ரத்தசோகைக்கு ஆளாகின்றனர். அதே சமயத்தில் இந்த வயது ஆண்கள் மத்தியில் 22.7% ஆண்கள் ரத்தசோகைக்கு ஆளாகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
விழிப்புணர்வு தற்போது தான் ஏற்படத்துவங்கியுள்ளது!
ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றும் மருத்துவர் மீனாட்சி பஜாஜ் இது குறித்து பேசும் போது, “பருவமடையும் காலம், மகப்பேறு மற்றும் பாலூட்டும் காலத்தில் பெண்களுக்கு அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. பெண்களின் எண்ணிக்கையில் இந்த காலக்கட்டத்தில் வாழும் பெண்களின் அளவே அதிகம் என்பதால் இதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மேலும் மாதவிடாய் நிற்றல் காலமானது கால்சியம், வைட்டமின் டி, நார்ச்சத்து குறைபாட்டை மட்டும் கொண்டிருக்கும் வளர்சிதை மாற்ற காலமாகும். எனவே இது குறித்த பொதுவான உரையாடல்கள் நம்மிடம் இல்லை,” என்று கூறுகிறார் அவர்.
“முதல் மூன்று பருவ நிலையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கைக்கு நிகராக தற்போது ‘மாதவிடாய் நிற்றல்’ காலத்தில் வாழும் பெண்களின் எண்ணிக்கையும், சராசரி ஆயுட்கால உயர்வால், அதிகரித்துள்ளது. தற்போது இத்தகைய உடல்மாற்றத்தை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது,” என்றும் தெரிவிக்கிறார் மருத்துவர் மீனாட்சி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU