SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானம் தோகா விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.
“அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் இடையில் கடந்த காலத்தில் உத்தி ரீதியாக இருந்த உறவு, இன்றும் அப்படியே தொடர்கிறது. இது வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் கொள்கையைத் தாங்கியுள்ள முக்கியத் தூண்களில் ஒன்றாகும்” என பிபிசி அரபியிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மிட்செல் தெரிவித்தார்.
ஆனால் 2025-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கத்தார் வழங்கிய இந்த பிரமாண்டமான வரவேற்பு, 2017ம் ஆண்டு வளைகுடா நெருக்கடியின் போது டிரம்ப் எடுத்த கடுமையான நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணாகவே காணப்படுகின்றது.
இந்த மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றத்திலிருந்து நல்லிணக்கத்திற்கும், போட்டியிலிருந்து கூட்டணிக்கும் எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகின்றது.
இன்று வளைகுடா பகுதியில் கத்தார் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாற என்ன காரணம்?

டிரம்பின் முதல் பதவிக்காலம்

பட மூலாதாரம், Reuters
ஜூன் 2017 இல், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை கத்தாரை புறக்கணிப்பதாக அறிவித்தபோது வளைகுடா நாடுகளில் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த வளைகுடா நெருக்கடி திடீரென உருவானதல்ல.
மாறாக, ஒருபுறம் கத்தாருக்கும், மறுபுறம் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்களின் உச்சக்கட்டமாக இருந்தது.
இந்தப் பதற்றத்தின் வேர்கள் பல்வேறு பிராந்தியப் பிரச்னைகளில் இருந்து உருவானது.
‘அரபு வசந்தம்’ (அரபு வசந்தம் என்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகளுக்கு முழுவதும் பரவிய ஜனநாயக ஆதரவு போராட்டங்கள், எழுச்சிகள் மற்றும் புரட்சிகளின் அலை) எனும் காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை கத்தார் ஆதரித்தது அவற்றில் மிகவும் முக்கியக் காரணமாக காணப்படுகின்றது.
மேலும், பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாகக் கருதும் இஸ்லாமிய சகோதரத்துவம் அமைப்புடன் கத்தார் தொடர்பு வைத்திருந்ததும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
கத்தார் இரானுடன் இணைந்து செயல்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்தோம்பல் அளிப்பதாகவும், அரசியல் செல்வாக்கு பெறுவதற்கு உதவியாக அல் ஜசீரா போன்ற ஊடகங்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த நேரத்தில், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் கத்தார் மறுத்ததோடு, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகள் இறையாண்மையை மீறுவதாகவும் கூறியது.
கத்தார் அதனை புறக்கணித்த நாடுகளின் சில கோரிக்கைகளையும் ஏற்க மறுத்துவிட்டது.
இரானுடனான உறவுகளைக் குறைத்தல், அல்-ஜசீரா ஊடகத்தை மூடுதல், கத்தாரில் உள்ள துருக்கியின் ராணுவத் தளத்தை மூடுதல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு வழங்கும் ஆதரவை நிறுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.
இந்தக் கோரிக்கைகள் நடைமுறைக்கு மாறானவை என்றும், அதன் அரசியல் சுதந்திரத்தை மீறுவதாகவும் கத்தார் குறிப்பிட்டது.
ஆனால், அனைத்து வகையான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்க விரும்புவதாக கத்தார் தெரிவித்தது.
இது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) அமைப்பில் பெரிய பிளவை ஏற்படுத்தியது, அதனால் கத்தார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த கவுன்சில் நிறுவப்பட்டதிலிருந்து இவ்வாறு ஒருபோதும் நடந்ததில்லை.
அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கத்தாரை புறக்கணிக்கும் போராட்டத்தைத் தெளிவாக ஆதரித்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
பயங்கரவாத நிதியளிப்புக்கு கத்தார் உதவுகிறது என வளைகுடா நாடுகள் சுட்டுக்காட்டுகின்றன எனவும் தனது ட்வீட்டுகளில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்
வளைகுடா நாடுகள் மற்றும் குறிப்பாக கத்தாரை நோக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வைத்து பார்க்கும்போது வழக்கமாக ஒரு அமெரிக்க அதிபர் எடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து இது வேறாக காணப்பட்டது.
ஆனால் இந்த தீவிரமான நிலைப்பாட்டிற்கு, மிக விரைவாகவே அமெரிக்க நிர்வாகத்திற்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
சில நாட்களுக்குள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள், அதிபரின் கூற்றுக்கு முரணாக, “வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கான முக்கியத்துவத்தையும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் கத்தாரின் முக்கிய பங்கையும்” குறிப்பிட்டன.
கத்தாரில் அமெரிக்க ராணுவத் தளம்

பட மூலாதாரம், Reuters
கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானத் தளமான அல் உதெய்த் ராணுவ தளத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் சிக்கலடைவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்தது.
இந்தத் தளத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நிர்வாகத்திற்குள் ஏற்பட்ட பிளவை கருத்தில் கொண்டு, “அழுத்தத்தின் மூலம் அல்ல, பேச்சுவார்த்தையின் மூலம் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வலியுறுத்தினார்.
ரெக்ஸ் டில்லர்சனின் இந்த கருத்து ஒரு சாதாரண ராஜ்ஜீய கருத்து மட்டுமல்ல, அது 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அமெரிக்கா-கத்தார் பேச்சுவார்த்தைக்கான முன்னோடியாகவும் இருந்தது.
நம்பிக்கையின்மையிலிருந்து நெருக்கமான கூட்டாண்மைக்கு மாறிய ஒரு முக்கியமான தருணமாக இது அமைந்தது.
பின்னர், காலம் செல்ல செல்ல, அமெரிக்காவில் கவனம் செலுத்தி எடுத்த முயற்சிகளின் பலன்களை கத்தார் பெறத் தொடங்கியது.
அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் உறவுகளை வலுப்படுத்திய கத்தார், எப்ஃ-15 போர் விமானங்களை வாங்க 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அமைப்பையும் உருவாக்கியது.
இதன் தொடர்ச்சியாக, 2018 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் உத்தி ரீதி உரையாடலுக்கான அமைப்பு தொடங்கப்பட்டது.
இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த அமைப்பில் பங்கேற்றனர்.
இதன் பின்னர், எந்தவொரு வெளிப்புற அச்சுறுத்தலையும் தடுப்பதில் கத்தாருடன் அமெரிக்கா இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
வளைகுடா நாடுகளுக்கு இடையேயான சர்ச்சை உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் இந்த அறிக்கை வெளியாகியது.
ஆகவே, இது கத்தாரைப் புறக்கணித்த நாடுகளுக்கு ஒரு தெளிவான அரசியல் செய்தியாகக் கருதப்பட்டது.
இதற்கிடையில், அல் உதெய்த் விமான தளத்தை விரிவுபடுத்தவும், அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் கத்தார் திட்டங்களை அறிவித்தது .
அதேபோல் இந்த ராணுவ தளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கத்தார் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவுடனான பாதுகாப்பு கூட்டணிக்கான கத்தாரின் நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடுகள்

பட மூலாதாரம், EPA
ராஜ்ஜீய ரீதியாக, சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு மத்தியஸ்தராகவும் நம்பகமான நாடாகவும் கத்தார் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
கத்தார் அமெரிக்காவிற்கும் தாலிபனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அதன் விளைவாக பிப்ரவரி 2020 இல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ முன்னிலையில் ஒரு வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
2021-ஆம் ஆண்டு வாக்கில், டிரம்பின் முதல் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடன் கத்தார் தனது பழைய பிராந்திய சமநிலையை மீண்டும் பெற்றது.
அதே ஆண்டு கத்தார் மீதான புறக்கணிப்பு முறையாக முடிவுக்கு வந்தது. கத்தாருக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு நீண்ட காலம் நீடிக்கவில்லை.
“பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் மட்டுமல்லாமல், நுணுக்கமான ராஜ்ஜீய பிரச்னைகளிலும் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதைக் காண்கிறோம். நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடாக கத்தார் மாறியபிறகு, அமெரிக்க நிர்வாகத்தின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியானதாகவும் மாறியுள்ளது. தற்போதைய நிர்வாகம், கத்தாரை இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளைத் தவிர, பிராந்திய சமநிலையை நிலைநாட்டவும் அரசியல் மற்றும் ராஜ்ஜீய தீர்வுகளை பெறவும் நம்பகமான மற்றும் நீண்டகால கூட்டாளியாகக் கருதுகிறது என்று மைக்கேல் மிட்செல் பிபிசி அரபியிடம் தெரிவித்தார்.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலமும் கத்தாரும்

பட மூலாதாரம், Reuters
2025 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றதன் மூலம், அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளுக்கு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ஜீய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களின் வடிவில் வெளிப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானம் ஏர் ஃபோர்ஸ் ஒன் என அறியப்படுகின்றது.
அதற்கு மாற்றாக தற்காலிக பயன்பாட்டிற்காக கத்தார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு சொகுசு போயிங் 747-8 விமானத்தை வாங்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானம், டிரம்பின் பதவிக்காலம் முடிந்ததும் அதிபரின் நூலகத்திற்கு (காப்பகத்திற்கு) வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து, ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் இது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் விமானம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், எந்த செலவும் இல்லாமல் பரிசாக வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளது குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் எந்தவொரு பரிசும் அமெரிக்கக் சட்டங்களின்படி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
உறவுகளின் எதிர்காலம்
பிராந்தியத்தில் வேகமாக மாறிவரும் நிலவியல் அரசியல் சூழலுக்கு நடுவே, அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாகத் தோன்றுகின்றன.
”இந்தப் பிராந்தியத்தில் கத்தாருடன் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மிட்செல் பிபிசி அரபியிடம் கூறினா
சீனா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய வல்லரசுகளுடன் அமெரிக்கா உலகளவில் போட்டியிடும் சூழலில், கத்தாரை அமெரிக்கா ஒரு ‘உறுதியான உத்தி கூட்டாளியாக’ கருதுகிறது என மிட்செல் குறிப்பிட்டார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU