SOURCE :- BBC NEWS
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் இரவில், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்ல இருந்த ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் பாதிப்பு இன்று வரை காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படுகின்றது. இன்றும், நீங்கள் காத்மாண்டுவிலிருந்து இந்திய விமானத்தில் பயணிக்கும்போது, ஒரு கூடுதல் பாதுகாப்பு சோதனை நடைபெறுகிறது.
விமான நிலையத்தில் வழக்கமான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை முடித்த பிறகு போர்டிங் படிக்கட்டுகளுக்கு அருகில், தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் உள்ள அறையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் ஒரு மேலதிக சோதனைக்கும் பயணிகள் உட்பட வேண்டும்.
ஆனால் இந்தச் சோதனை இப்போது தேவையில்லை என்கிறார் நேபாள அரசின் செய்தித்தொடர்பாளர்,
“முந்தைய காலங்களில் இந்திய விமான நிறுவனங்கள் நேபாளின் பாதுகாப்பை நம்பவில்லை என்ற காரணத்தினால், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்போது இது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளோம்,” என நேபாளின் தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் பிபிசிக்கு தெரிவித்தார்.
அந்த பழைய சம்பவத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, அந்த பயங்கரமான விமானக் கடத்தல் நிகழ்வின் நினைவு நிரந்தரமாக இருக்கும்.
காத்மண்டுவிலிருந்து இந்திய விமானங்களில் இந்தியா செல்லும் பயணிகளுக்காக, இந்தியா மேற்கொள்ளும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளால், இரண்டு அண்டை நாடுகளின் உறவுகளில் அந்த கடத்தல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் மறையாமல் உள்ளதாக நேபாளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது இரு நாடுகள் இடையிலான நம்பிக்கை குறைவு என கருதக்கூடாது. மாறாக இது அந்நாடுகளின் உறவில் ஒரு தனித்துவமான அடையாளமாகக் கருதப்பட வேண்டும் என இந்திய ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
8 நாட்கள் நீடித்த கடத்தல்
1999-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் தேதி மதியம், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் இந்தியாவின் IC 814 விமானம், சுமார் 180 பயணிகளுடன், காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு புறப்பட்டபோது கடத்தப்பட்டது.
“எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டவுடன், திடீரென ஒரு மோதல் ஏற்பட்டது, உடனடியாக அனைவரும் கீழே படுத்துகொள்ளும்படி கூறப்பட்டது. உணவுப் பொட்டலங்களைத் திறக்கக் கூட முடியவில்லை. என்னுடைய மனதில் முதலில் வந்த விஷயம், நகைகளைச் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துகொண்டு இருப்பார்கள் என்பதுதான். ஏனெனில் புதிதாகத் திருமணம் ஆன பல ஜோடிகள் விமானத்தில் இருப்பதை நான் கவனித்தேன்,” என்று விமானத்தில் இருந்த நேபாள பயணி சஞ்சயா திடல், அச்சம்பவத்தை நினைவு கூறுகிறார்.
அவருக்கும் அப்போது புதிதாகத் திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ரோஜினா பதாகுடன், திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு சஞ்சயா திடல் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர்கள் டெல்லி வழியாக பாகிஸ்தானில் உள்ள சஞ்சயாவின் பணியிடத்துக்குப் புறப்பட்டனர்.
“பிறகு, கடத்தல்காரர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தது. அவர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு எளிதில் நிறைவேற்றாது என்று உணர்ந்ததும், எங்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.
கடத்தல் சம்பவத்தின் ஏழாவது நாளில் தன்னுடைய அமைதியை இழந்ததாக அவர் நினைவுகூருகிறார். “கடத்தல்காரர்கள், திடீரென பயணிகள் மீது துப்பாக்கிகளை குறிவைத்து, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கூறினர்,” என அவர் கூறினார்.
எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சூழல் மாறியது. ஒரு வாரம், கந்தஹாரில் தங்கியிருந்த அவர்கள் டிசம்பர் 31 அன்று டெல்லி திரும்பினர்.
சஞ்சயா திடல், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ‘அம்டா’ என்ற ஜப்பானிய பன்னாட்டு தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார், மற்றும் அவ்விடத்திலிருந்து ஆப்கானிஸ்தானின் தொலைவான பகுதிகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வந்தார்.
கடத்தல்காரர்கள், அவரின் பணிகளை தெரிந்துகொண்ட பிறகு, “Chief” என்று அழைக்கப்பட்ட அவர்களின் தலைவர், தனது உடல்நலன் பற்றி விசாரித்தார் என்கிறார் சஞ்சயா திடல்
“அதன் பிறகு, என் மீதான அவர்களது அணுகுமுறை சற்று தளர்ந்தது. என்ன வேண்டுமென்று அவர்கள் கேட்டபோது, நான் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன்,” என்றார் சஞ்சயா.
விமானம் கடத்தப்பட்ட பிறகு, பயணிகள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்தனர், இது அவர்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியது.
“கடத்தப்பட்ட பிறகு, அடுத்த நாள் காலை மட்டுமே, எங்களுக்கு ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் மற்றும் சில பிஸ்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. பின்னர், நாங்கள் கந்தஹாருக்குச் சென்றபோது, சூடு இல்லாத சோறு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன,” என சஞ்சய் தெரிவித்தார்.
ஊடகங்களால் இழிவுபடுத்தப்பட்ட தம்ராகர்
பயணிகளுள், காத்மண்டுவை சேர்ந்த சால்வை வியாபாரி கஜேந்திர மன தம்ராகர் என்பரும் இருந்தார்.
பகுதி நேர நகைச்சுவை நடிகராக இருந்த இவர், தனது நகைச்சுவை உணர்விற்காக பரவலாக அறியப்பட்டார்.
“இந்த கடத்தல் சம்பவம், அவரது மனநிலையை மாற்றிவிட்டது. அவர் எப்போதும் நகைச்சுவையாக உரையாட விரும்பும் ஒரு மனிதராக இருந்தார். ஆனால் இந்த விமான கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு, அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 42 வயதில் இதயக்கோளாறு காரணமாக அவர் இறந்தார்,” என அவரது மனைவி, மீரா தம்ராகர், பிபிசிக்கு தெரிவித்தார்.
விமான கடத்தல் சம்பவத்தின் போது, தம்ராகர் பயணிகளை சிரிக்கச் செய்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயன்றார்.
“அவர் கடத்தல்காரர்களை போல நடித்து, பாலிவுட் திரைப்படமான ஷோலேவின் வசனங்களை கூறினார். ஆனால், அவர் கடத்தல்கார்களில் ஒருவரை போல நடித்த போது, அந்த நபர் கோபமாகி, தம்ராகரின் தலையில் துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்தார். அதன் பிறகு, தம்ராகர் அமைதியாகிவிட்டார்,” என்று திடல் கூறினார்.
விமானத்தின் உள்ளே மட்டுமல்ல, தம்ராகர் வெளியிலும் துன்பத்தை அனுபவித்தார்.
சில ஊடகங்களில், கடத்தல்காரர்களில் அவரும் ஒருவர் என கூறின. அச்செய்தி, அவரது குடும்பத்திற்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எந்த மக்களும், இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை, நேபாளத்தின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர், டாக்டர் ராம் ஷரண் மஹட் ஊடகங்களுக்கு விளக்கினர்.
“சில ஊடகங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் அமைதியாகிவிட்டார், அவரது சால்வை வியாபாரமும் சரிந்தது. அதுவே அவரது கடைசி விமான பயணம்,” என மீரா தம்ராகர் கூறுகிறார்
விமானத்திற்கு வெளியே நிலவிய குழப்பம்
கடத்தப்பட்ட விமானத்தின் உள்ளே பயணிகள் பீதியடைந்திருந்த நிலையில், விமானத்துக்கு வெளியேயும் குழப்பம் ஏற்பட்டது.
“அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது. சில இந்திய ஊடக செய்திகள், நேபாளத்தின் பாதுகாப்பு பலவீனங்களை மிகைப்படுத்தின. நேபாளத்திற்கு எதிராக இந்தியா சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு அந்த செய்திகள் இருந்தன” என்று கெம் ராஜ் ரெக்மி கூறினார்.
சம்பவம் நடந்த உடனேயே நேபாள அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினராக கெம் ராஜ் ரெக்மி இருந்தார்.
மாலை 4 மணிக்கு மேல் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கடத்தப்பட்டது. டெல்லிக்குச் செல்வதற்குப் பதிலாக, விமானம் இந்தியாவின் அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் என்று திருப்பிவிடப்பட்டு, இறுதியாக ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குச் சென்றது.
விரைவில், இந்திய ஊடகங்கள் நேபாளத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கின.
மறுநாளே, நேபாள அமைச்சரவை இந்த சம்பவத்தைப் புலனாய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்தது.
இந்தியா உடனடியாக தனது விமானங்களை நேபாளுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. மேலும் இந்தியாவின் இந்த முடிவானது, ஐந்து மாதங்கள் வரை நீடித்தது.
நேபாளத்தின் அரசியல் தலைமை, விமானக் கடத்தல் சம்பவத்தை போதுமான அளவு முக்கியமானதாக கருதவில்லையென, பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட இந்தியாவின் உயர்நிலை தலைவர்கள் உணர்ந்ததாக நேபாளத்திற்கான அப்போதைய இந்திய தூதர், கிருஷ்ணா வி ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவருடைய ‘Kathmandu Chronicles’ என்ற புத்தகத்தில், இந்த விமானக் கடத்தல் சம்பவம் நேபாளத்தின் பெயரையும் சுயமரியாதையையும், இந்திய மக்களின் பார்வையில் அது எப்போதும் அனுபவித்து வந்த நல்லெண்ணத்தையும் சிதைத்து என ராஜன் குறிப்பிடுகிறார்.
ஆனால், சில குற்றச்சாட்டுகள் இந்தியா மீதும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“இந்திய அரசு, அதன் பங்கிற்கு, இந்தியத் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் தூண்டுதல்கள் மூலம் நேபாளத்தை எதிர்மறையாகக் காட்டுவதை ஊக்குவித்தது. மேலும் இதன் மூலம், இச்சம்பவத்தில் அரசாங்கத்தின் பிழைகளை மறைத்து, கவனத்தைத் திசை திருப்ப முயன்றது” என்று ராஜன் எழுதுகிறார்.
இவ்வாறான சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைக் குழு என்ன முடிவுக்கு வந்தது?
விமானக் கடத்தல் சம்பவம், விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டது என்பது தெளிவாக இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு யார் அல்லது எது பொறுப்பாகும்? என்று புலனாய்வு குழுவினரால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
“கடத்தல்காரர்கள், சாதாரணப் பயணிகள் போலவே விமான நிலையத்தில் நடைமுறைகளை பின்பற்றினர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு சோதனைகளின் போது நிறுத்தப்படவில்லை,” என்று குழுவின் உறுப்பினர் மற்றும் நேபாளத்தின் முன்னாள் உள்துறை செயலாளர் கெம்ராஜ் ரெக்மி கூறினார்.
புலனாய்வின் போது விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகளை பரிசோதித்ததை பற்றி நினைவுகூரும் அவர், “குழுவின் தலைவராக இருந்தவர் நேபாள் காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி. நாங்கள் பரிசோதனை செய்யும் போது, எங்கள் குழு எளிதாக பாதுகாப்பு சோதனைகளை கடந்து சென்றது மற்றும் அவரது துப்பாக்கி அங்கு கண்டறியப்படவில்லை,” என்று ரெக்மி தெரிவித்தார்.
அந்த நேரத்தில், விமான நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த 16 கண்காணிப்புக் கேமராக்களில், நான்கு மட்டுமே செயல்படக்கூடியதாக இருந்தது என்று குழு கண்டுபிடித்தது.
பாதுகாப்புப் பணியாளர்களுக்கு சரியான பயிற்சி இல்லாமை, முக்கியப் பகுதிகளுக்கு செல்ல அனுமதியளிப்பதில் இருந்த கவனக்குறைவு, மற்றும் அங்கீகாரம் இல்லாத நபர்களுக்கு தேவையற்ற அணுகல் வழங்குதல் போன்ற பிரச்னைகள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டன.
முக்கிய பகுதிகளில் சோதனை கருவிகள் மற்றும் ஊடுகதிர் (X-ray) இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் விமான பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க, அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், விமானம் கடத்தப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பு விமானக் கடத்தலுக்கான வாய்ப்பு இருப்பது குறித்து, தகவல் கிடைத்திருந்ததை புலனாய்வு குழு கண்டுபிடித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?
“இத்தகைய முக்கியமான விஷயத்தை கையாள்வதில் அரசியல் பொறுப்பின்மை தெளிவாக இருந்தது,” என்று ரெக்மி கூறினார்.
அந்த நேரத்தில் நேபாளத்தின் புலனாய்வு அமைப்பான தேசிய புலனாய்வு துறையின் தலைவர் ஹரி பாபு சௌத்ரி, அதிக கவனமாக இல்லாததற்காக, விமர்சனத்திற்கு உள்ளானார்.
“இத்தகைய நிகழ்வு நிகழலாம் என்ற வதந்திகள் இருந்தபோதிலும், எங்களிடம் உறுதியான தகவல் இல்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் விமான நிலைய மேலாண்மையில் கவனக்குறைவு தெளிவாக உள்ளது,” என்று சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
“எந்த நேபாள அதிகாரி அல்லது பாதுகாப்பு பணியாளரும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது எங்கள் குழு கண்டுபிடித்த ஒரு விஷயம். ஆனால், பாதுகாப்பில் இருந்த கவனக்குறைவு தெளிவாக இருந்தது,” என்று ரெக்மி கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, நேபாள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளதாக நேபாள அமைச்சர் குருங் கூறுகிறார்.
‘அதிகரித்த பாதுகாப்பு’
நேபாளத்திற்கான அப்போதைய இந்திய தூதர் கிருஷ்ணா வி. ராஜன், கடத்தல் சம்பவம் இந்திய மக்களின் பொது மனப்பான்மைக்கு பெரும் அதிர்ச்சியாகவும், இரு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்ததாகக் கூறினார்.
“குடிமக்கள் மத்தியில் நேபாளம் குறித்த நல்லெண்ணச் சிதைவும், அரசியல் மற்றும் அரசாங்கம் மத்தியில் நம்பிக்கைச் சிதைவும் ஏற்பட்டன என்பதில் சந்தேகமில்லை. ஒரு சுற்றுலா தலமாக நேபாளம் இருந்தது. உதாரணமாக தேனிலவுக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக இருந்து, ஆனால் திடீரென்று அது அதன் மதிப்பை இழந்துவிட்டது.”
“அங்கு இந்தியாவின் பாதுகாப்புச் சோதனைகள் தொடர்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நம்பிக்கை இல்லாததைக் குறிக்கவில்லை; அது வெறும் கூடுதல் முன்னெச்சரிக்கை மட்டுமே” என்று ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும், கடத்தல் சம்பவம் இரு நாடுகளின் உறவுகளை முறிக்க வைத்தது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“அந்த சம்பவத்திற்கு பிறகு, நேபாளத்தின் பாதுகாப்பு மீதான உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்தது.” என நேபாளத்தின் முன்னாள் உள்துறை செயலாளர் கெம் ராஜ் ரெக்மி கூறுகிறார்.
கடத்தல் சம்பவம் நடந்த பின்னர் உடனடியாக, இந்தியா நேபாளுக்குச் செல்லும் எல்லா விமானங்களையும் நிறுத்திவிட்டது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நேபாளம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனுமதித்தப் பிறகு மட்டுமே இந்திய விமானங்கள் காத்மாண்டுவுக்கு மீண்டும் செல்லத் தொடங்கின.
“இந்தச் சம்பவத்திற்கு பிறகு, இந்தியா விடுவித்த நபர்கள், தெற்கு ஆசியாவில் பல ஆண்டுகளுக்கு ஒரு புதிய பயங்கரவாத அலையை ஏற்படுத்தினர்” என்று நேபாள ஆய்வாளர் சுதீர் ஷர்மா கூறினார்.
“இந்தச் சம்பவம் இந்தியாவின் உக்திக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியாவிற்கு நேபாளம் நட்பு அண்டை நாடாகத் தொடர்கிறது. மேலும் நேபாளம் அதன் நிலத்தை இந்தியாவுக்கு எதிராக ‘மூன்றாம் தரப்பினரால்’ தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காது என்பதில் நம்பிக்கையும் உள்ளது” என மற்றொரு இந்தியப் பகுப்பாய்வாளர், அதுல் தாகூர் கூறுகிறார்.
இந்தியா இந்த விமானக் கடத்தல் சம்பவத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. கடத்தல்காரர்களால் இந்திய பயணிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC