SOURCE :- BBC NEWS

ஜஸ்டின் ட்ரூடோ, கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

22 டிசம்பர் 2024, 16:27 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.

அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது.

இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

பிபிசி தமிழ்

ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது.

ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது.

ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது.

ஜக்மீத் சிங் என்ன சொன்னார்?

ஜஸ்டின் ட்ரூடோ, கனடா, இந்தியா

பட மூலாதாரம், Reuters

ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். “லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தாண்டு செப்டம்பரில் மாதம் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார்.

டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், “கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது” என்று கூறினார்.

கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன.

இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள்

ஜஸ்டின் ட்ரூடோ, கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்’ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

“கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை.” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை.

டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார்.

கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும்.

இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்’ சமூக ஊடகப் பக்கத்தில் “ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம்

ஜஸ்டின் ட்ரூடோ, கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது.

குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

ட்ரூடோ வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவையை மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார்.

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது.

ஜக்மீத் சிங் யார்?

ஜஸ்டின் ட்ரூடோ, கனடா, இந்தியா

பட மூலாதாரம், Reuters

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங்.

அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது.

மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது.

ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை.

பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது.

ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்..

ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், “இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை.

“கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்.” என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர்.

கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர்.

வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன.

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, ​​அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC