SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது.
புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த தகவல்களை வழங்குகையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்
கேள்வி என்னவென்றால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோதி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான்.
திடீரென முடிவு எடுத்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
கடந்த மாதம், குஜராத்தில் நடந்த இரண்டு நாள் காங்கிரஸ் மாநாட்டின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை எழுப்பி, “நாட்டில் எத்தனை தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை பொதுப் பிரிவினர் உள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளங்களில் அவர்களின் பங்கு என்ன என்பது நமக்குத் தெரியும்” என்று கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தலித்துகள் மற்றும் பழங்குடியினர் சாதிவாரியாக கணக்கிடப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோதி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்த பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மீறி, பிரதமர் நரேந்திர மோதியும் அவரது அரசாங்கமும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்துவந்தனர். ஆனால் இப்போது அரசாங்கம் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.” என்றார்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அதற்கான பெருமையை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினார்.
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் இட ஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம் என்றும் நாங்கள் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம்” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்த மோதி அரசாங்கம், மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த ஒப்புக்கொண்டதற்கு என்ன காரணம் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கேட்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர் டி.எம். திவாகர் பிபிசியிடம் கூறுகையில், “மோதி அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்தபோது, எதிர்க்கட்சி கூட்டணி அதை நாடு முழுவதும் ஒரு பிரச்னையாக மாற்றியது.”
“இதற்கிடையில், பிகார் மற்றும் கர்நாடகா ஆகியவை தங்களுக்கென சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தின. அதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மக்கள் தொகை எவ்வளவு, அதன்படி அவர்கள் அரசியலில் எவ்வளவு பங்கைக் கொண்டிருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது. இப்போது, கட்டாயத்தின் காரணமாக மோதி அரசாங்கம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முடிவை எடுக்க எடுத்துள்ளது” என்றார்.
பிகார் தேர்தல் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 1931 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு நாட்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிகள் கணக்கிடப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை மட்டும் கணக்கிடப்படுகிறது.
ஆனால் நாட்டில் பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது .
பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவு என்று அச்சமூக தலைவர்கள் நம்புகிறார்கள்.
இந்த சமூகங்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் தலித்துகளை அணிதிரட்டுவதன் மூலம் ஆட்சியை பிடிப்பது எளிதாகியுள்ளதாக நம்பப்படும் நிலையில், பாஜக ஏன் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது என்று அரசியல் ஆய்வாளர் டி.எம். திவாகர் கூறுகிறார்.
இதைச் செய்வதன் மூலம் அரசியல் மற்றும் அதிகாரத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பங்கு எவ்வளவு குறைவாக உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
எனவே இதுகுறித்து பாஜகவுக்கு இருந்த அச்சம் முடிவுக்கு வந்துவிட்டதா என்பதுதான் கேள்வி அல்லது பிகாரில் (இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன) தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதற்காக இந்த நடவடிக்கையை அது எடுத்திருக்கலாம்.
பிகார் தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் பலனை பாஜக பெற முடியுமா?
பிபிசியின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஷரத் குப்தா, “பாஜக இதற்கு எதிராக இருந்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என்று அது கூறியது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பெரும்பாலான பாஜக கூட்டணிக் கட்சிகள் இதற்கு ஆதரவாக உள்ளன. இப்போது, பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 2023 ஆம் ஆண்டு பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது.
பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியும் (ராம் விலாஸ்) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை வைத்தது.
அந்த நேரத்தில், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை பாஜக வெளிப்படையாக எதிர்க்கவும் இல்லை.
“கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டிடமிருந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசு இதற்கு ஒப்புக்கொண்டபோது, அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று ஷரத் குப்தா கேள்வி எழுப்புகிறார்.
சாதிவாரி கணக்கெடுப்புத் தரவு 2026 அல்லது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் வரலாம் என்றும், அதற்குள் பிகார் மற்றும் உத்தர பிரதேச தேர்தல்கள் முடிந்துவிடும் என்றும் ஷரத் குப்தா நம்புகிறார்.
“சமீபத்திய ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களை தனது பக்கம் கொண்டு வருவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம், ஒன்று அல்லது இரண்டு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைத் தவிர, பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தன்னுடன் இருப்பதை பாஜக வெளிப்படுத்த விரும்புகிறது. இது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அணிதிரட்டுவதற்கான அதன் முயற்சிகளுக்கு ஒரு அங்கீகார முத்திரையாக இருக்கும்” என்கிறார் ஷரத் குப்தா.
இந்த முடிவு ஆர்எஸ்எஸ் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதா?

பட மூலாதாரம், ANI
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான மோதி அரசின் நிலைப்பாட்டில் ஏன் இந்த மாற்றம்?
இது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி பட்னிஸிடம் பிபிசி பேசியபோது, “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் கருத்து வெளிச்சத்துக்கு வந்தபிறகுதான் மோதி அரசாங்கத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
“செப்டம்பர் 2024 இல் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அந்த அமைப்பு கூறியது” என்கிறார் அவர்.
சுதந்திரத்திற்குப் பிறகு ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை?

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1872 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் நடைமுறை தொடங்கப்பட்டது.
அதன் பின்னர் 1931 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியபோதும், சாதி தொடர்பான தகவல்களும் அதில் பதிவு செய்யப்பட்டன.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியபோது, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாதி அடிப்படையில் கணக்கிடப்பட்டனர்.
அப்போதிருந்து, இந்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதைத் தவிர்த்து வந்தது.
1980களில் பல பிராந்திய கட்சிகள் தோன்றியபோது சூழல் மாறியது.
அரசியலில் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் ஆதிக்கத்தை சவால் செய்வதோடு, அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிரசாரத்தையும் இந்தக் கட்சிகள் தொடங்கின.
1979 ஆம் ஆண்டு, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இந்திய அரசு மண்டல் கமிஷனை அமைத்தது.
மண்டல் கமிஷன் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. ஆனால் இந்தப் பரிந்துரையை 1990ல்தான் செயல்படுத்த முடிந்தது.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பிரச்னை இடஒதுக்கீட்டுடன் தொடர்புடையது என்பதால், அரசியல் கட்சிகள் அவ்வப்போது அதன் கோரிக்கையை எழுப்பத் தொடங்கின.
2010 ஆம் ஆண்டில், ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தபோது அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. ஆனால், அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை
இதுகுறித்து பிபிசியுடன் பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே “தேசிய அளவில் சாதி கணக்கெடுப்பு விரைவில் அல்லது பின்னர் நடக்க வேண்டும். ஆனால் கேள்வி என்னவென்றால், இதை எவ்வளவு காலம் தள்ளிப்போட முடியும் என்பதுதான்? மாநிலங்கள் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பல எதிர்பார்ப்புகளுடன் நடத்துகின்றன. சில நேரங்களில், அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் வெளியிடப்படுவதில்லை” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU