SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல்லின் 34-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
மழை காரணமாக நீண்ட தாமதத்துக்குப்பின் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து வென்றது.
நடப்பு சீசனில் வெளியூர் மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ள ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என்ன நடந்தது?
ஆர்சிபி மோசமான பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணி இந்த சீசனில் தனது மோசமான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தியது. எந்த பேட்டரும், எந்தத் திட்டமிடலும் இன்றி களத்துக்கு வந்து விளையாடினர். தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து செல்லும் பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மையைக் கூறி மற்ற பேட்டர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்களா எனத் தெரியவில்லை. அனைத்து பேட்டர்களும் ஒரே மனநிலையில் வந்து பெரிய ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை இழந்தனர்.
பில்சால்ட்(4) வழக்கம் போல் பவுண்டரியுடன் தொடங்கினாலும், கிராஸ்பேட்டில் சிக்ஸர் அடிக்க முயன்று யான் சென் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் விக்கெட்டை இழந்தார். விராட் கோலியும்(1) கிராஸ் பேட்டில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அர்ஷ்தீப் பந்துவீச்சில் யான்செனிடம் கேட்ச் கொடுத்தார்.
லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் பார்ட்லெட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் இவரை ரூ.8.75 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி அணி. இதுவரை 7 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே லிவிங்ஸ்டன் சேர்த்துள்ளார். அணிக்கு தேவையான நேரத்தில் பங்களிப்பு செய்யாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
4 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பட்டிதாருடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மாவும் நிலைக்கவில்லை. யான்சென் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஜிதேஷ் சர்மா, பலமுறை “பீட்டன்” ஆகிய ஷாட்களை அடிக்க முடியாமல் தடுமாறினார். சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா 2 ரன்னில் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த க்ருணால் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் யான்சென் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிவந்த கேப்டன் பட்டிதார் 23 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இம்பாக்ட் ப்ளேயர் என்று மனோஜ் பண்டகே என்ற வீரரை களமிறக்கினர். யான்சென் பந்துவீச்சில் தடுமாறிய மனோஜ், எந்த ஷாட் விளையாட போகிறோம் எனத் தெளிவில்லாமல் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
8வது விக்கெட்டுக்கு புவனேஷ்வர்- டிம் டேவிட் ஜோடி 21 ரன்கள் சேர்த்தது, ஆர்சிபி அணியும் 50 ரன்களைக் கடந்தது.ஹர்பிரித் பிரார் தனது முதல் ஓவரிலேயே புவனேஷ்வர்(8), யாஷ் தயால் விக்கெட்டை வீழ்த்தினார்.
9-வது விக்கெட்டுக்கு ஹேசல்வுடன், ஜோடி சேர்ந்த டேவிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். பிரார்ட்வெல் பந்துவீச்சில் 2 பவுண்டரியும், ஹர்பிரித்பிரார் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார், ஆர்சிபியும் 95 ரன்கள் சேர்த்தது.
ஆர்சிபியின் போராட்டம்
ஆர்சிபி அணியும் 95 ரன்களை டிபெண்ட் செய்யலாம் என்ற ஆசையில் களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ஸ்கூப்ஷாட் அடிக்க முயன்று 13 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிரியான்ஷ் ஆர்யா(16)ரன்னில் ஹேசல்வுட் பந்துவீச்சில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலிஸ் நிதானமாக ஆடி மோசமான பந்துகளை மட்டும் ஷாட்களாக மாற்றினர்.
ஆனால் ஹேசல்வுட் தான் வீசிய 8-வது ஓவரில் எக்ஸ்ட்ரா பவுன்ஸரில் ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ்(7), இங்கிலிஸ்(14) விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். 43 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா தொடக்கத்தில் நன்றாகத்தான் பந்துவீசினார். நேஹல் வதேராவும் சூயஷ் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டு சில பவுண்டரிகளை விளாசி, ரன்ரேட்டை உயர்த்தினார்.
புவனேஷ்வர் ஓவரில் சசாங்சிங் விக்கெட்டை இழந்தார். சூயஷ் சர்மாவால் கடைசி நேரத்தில் பேட்டர்களுக்கு அழுத்தத்தை தர முடியவில்லை. இதனால் நேஹல் வதேரா லாங்ஆப், கவர் டிரைவில் பவுண்டரி, சிக்ஸரை அடித்து வெற்றியை நோக்கி அணியை விரட்டினார். ஸ்டாய்னிஷ் களமிறங்கி சிக்ஸர் விளாசவே, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 19 பந்துகளில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தோல்விக்கு காரணம் என்ன?
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் ” ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக பந்து வந்தது. என்னைப் பொருத்தவரை பேட்டர்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் முக்கியம். அதை செய்யத் தவறினோம். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தவறவிட்டோம். இந்த சூழலில் படிக்கலை களமிறக்காமல் விட்டுவிட்டோம். ஆடுகளம் மோசமாக இல்லை என்றாலும் நிதானமாக பேட் செய்திருந்தால் ஸ்கோர் செய்திருக்கலாம். பஞ்சாப் அணியினர் ஆடுகளத்தை அறிந்து பந்துவீசியதால் அவர்களுக்கு உதவியது. எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருந்தது. சில நேரங்களில் பேட்டிங் எடுபடும், சில நேரங்களில் சொதப்பிவிடும். எங்கள் பேட்டிங் மீது என்ன பிரச்சினை என்று வீரர்களிடம் பேச இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
ஆர்சிபிக்கு தொடரும் சொந்த மைதான சோகம்!

பட மூலாதாரம், Getty Images
பெங்களூரு அணிக்கம் சொந்த மைதானமான சின்னசாமி அரங்கிற்கும் ராசியே கிடையாது. பெரும்பாலான அணிகள் சொந்த மைதானத்தில் அற்புதமான சாதனைகளை வைத்திருக்கும் நிலையில் ஆர்சிபி அணி சொந்தமைதானத்தில் அதிகமான தோல்விகளைத்தான் சந்தித்துள்ளது.
இதுவரை 92 போட்டிகளில் பெங்களூருவில் ஆடிய ஆர்சிபி அதில் 44 போட்டிகளில் தோற்றுள்ளது, 43 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு இல்லை, ஒரு போட்டிடையில் முடிந்தது.
இந்த சீசனிலும் கூட ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் ஆடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது, ஆனால், வெளி மைதானங்களில் பங்கேற்ற போட்டிகளில் வென்றுள்ளது. ஆர்சிபியின் சொந்த மைதான சோகம் இந்த சீசனிலும் தொடர்கிறது.
ஆர்சிபி மானம் காத்த டிம்டேவிட்

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நேற்றுமட்டும் பொறுப்புடன் பேட் செய்யவில்லையென்றால் ஆர்சிபி 50 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 26 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சியின் மானத்தை காப்பாற்றி 95 ரன்கள் சேர்க்க உதவினார்.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள், அதன்பின் 9 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்ற மோசமானநிலையில் இருந்தது. இந்தநிலையில் இருந்து அணியை மீட்டு ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தது டிம் டேவிட்தான்.
கடைசியில் பிரார் ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. டிம் டேவிட் இல்லாவிட்டால் ஆர்சிபியின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆர்சிபி அணியுடன் ஒருநாள் இடைவெளியில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நியூ சண்டிகரில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இதில் ஆர்சிபி வென்றால் புள்ளிப்பட்டியல் பரபரப்பாக மாறும். தற்போது ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.
மழையால் மாறிய ஆடுகளம்

பட மூலாதாரம், Getty Images
பெங்களூருவில் நேற்று மாலை பெய்ததையடுத்து, ஆட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 9 மணிக்கு மேல்தான் தொடங்கியது. மழையாலும், குளிர்ந்த காற்றாலும் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருந்தது. வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங்கிற்கும், பவுன்ஸருக்கும் நன்றாக மைதானம் ஒத்துழைத்தது. சேஸிங்கிற்கு சொர்க்கபுரியென பெயரெடுத்த பெங்களூரு ஆடுகளம் தலைகீழாக மாறியது.
இதைப் பயன்படுத்திய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சஹல், ஹர்பிரித் பிரார் ஆகியோர் ஆர்சிபி பேட்டிங் வரிசையை உருக்குலைத்தனர். முதல் 6 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப், யான்சென், சஹல் கைப்பற்றிய நிலையில் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்(23), டிம் டேவிட்(50) ஆகியோரைத் தவிர அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னோடு வெளியேறினர். இந்த ஆட்டத்தில் மொத்தம் 84 பந்துகள் வீசப்பட்ட நிலையில் அதில் 42 பந்துகளை டாட் பந்துகளாக ஆர்சிபி பேட்டர்கள் விட்டனர்.
அதேபோல ஆர்சிபி அணியிலும் ஹேசல்வுட் தனது பந்து வீச்சால் பஞ்சாப் பேட்டர்களை இந்த சேஸிங்கை எளிதாக முடிக்க விடாமல் தடுத்து 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆனால் சூயஷ் சர்மா ஓவரில் அடிக்கப்பட்ட சிக்ஸர், பவுண்டரிகள், புவனேஷ்வர் ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் ஆட்டத்தை மாற்றியது. ஹேசல்வுட்டுக்கு ஒத்துழைத்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தால், ஆர்சிபி வென்றிருந்தாலும் வியப்பில்லை.
இன்றைய ஆட்டம்
குஜராஜ் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
இடம்: ஆமதாபாத்
நேரம்: மாலை 3.30
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னெள
இடம்: ஜெய்பூர்
நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
நாள் – ஏப்ரல் 20
இடம் – மும்பை
நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே
நாள் – ஏப்ரல் 20
இடம் – மும்பை
நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்
நாள் – ஏப்ரல் 20
இடம் – நியூ சண்டிகர்
நேரம்- மாலை 3.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)
சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)
மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)
நீலத் தொப்பி
நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)
ஜோஸ் ஹேசல்வுட்(ஆர்சிபி) 12 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)
குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)
SOURCE : THE HINDU