SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், PTI
16 நிமிடங்களுக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என்று இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு ராணுவமும் காவல்துறையும் அனுப்பப்பட்டுள்ளதாக பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
“இது சுற்றுலாப் பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல். இதற்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்”, என்றும் மனோஜ் சின்ஹா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று ராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் பருவத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது .
பஹல்காம் பகுதி சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் ஏரிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்
“இந்தியாவின் சுவிட்சர்லாந்து” என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளது.
ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இந்திய படையினர் ஓடுவதைக் காட்டுகின்றன. வேறொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது.

பிரதமர் மோதி என்ன சொன்னார்?
இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்’, என்று குறிப்பிட்ட அவர்,
“இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வழிவகை செய்யப்படும்”, என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்- ‘நான் அதிர்ச்சியடைந்தேன்’
இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது”, என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் கூறியதென்ன?
“பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள் என்றும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
“இந்த சம்பவம் குறித்து வீடியோ அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வகையான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன”, என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இந்த தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது பற்றிய செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனதை உடைக்கிறது” என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்,
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC