SOURCE :- BBC NEWS

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
-
21 ஏப்ரல் 2025
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் முன்கூட்டியே தெளிவாகிவரும் நிலையில், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பார்க்கப்படும் விசிக, பாமக இரண்டு கட்சிகளும் ஒரே விதமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன.
2026 தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிரடியாக அறிவித்தார்கள். ஆனால், தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டில் பூடகமாகவே இருந்துவரும் பாமக, உள்கட்சி மோதலை வெளிப்படுத்தி அன்றைய கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியை நோக்கி பாமக நகர்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டத்தில் எழுந்தது.
‘திமுகவின் பக்கம் பாமக வந்து, அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடக்கூடும். அதனால் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் ஏற்படக்கூடும் என்றும் சில கிசுகிசுக்கள் உள்ளதே” என்ற கேள்விக்கு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பதில் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இதனை நீங்களே முணுமுணுப்புகள் என்று சொல்லிவிட்டீர்கள். அதை புறந்தள்ளுங்கள். அது வதந்திதான். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமை கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.” என்று கூறினார்.

பட மூலாதாரம், DMK
இந்த சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘வேறு வழியில்லாமல் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம்’ என்று பேசியது புதிய சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்த அவர் “போவதற்கு வேறு இடமில்லாமல் இந்த கூட்டணியில் விசிக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அத்தகைய அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம்.
தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூட்டணிக்காக கதவை திறந்து வைப்பது என்பது ஒன்றும் ராஜதந்திரம் இல்லை. அது சந்தர்ப்பவாத அரசியல். எந்த நிபந்தனையும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், தொலைநோக்குப் பார்வை வேண்டும்” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தொண்டர்களுக்காக வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் பேசியுள்ளார்.
பாஜக, பாமக உள்ள கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று மீண்டும் மீண்டும் கூறிவரும் விசிக கூடுதலான சட்டமன்ற இடங்களை கேட்பதற்கும், கூட்டணியில் முக்கியத்துவம் கோருவதற்குமான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவேதான் இப்படியான விளக்கம் தரும் நிலைமை வந்திருக்கிறது என்று எதிர் கட்சிகள் விமர்சிக்கின்றன.
பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “திருமாவளவன் மன அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என சகோதரியாக நான் வேண்டிக் கொள்கிறேன். அவர் திமுகவால் தான் மன அழுத்தில் இருக்கிறார் என நான் கருதுகிறேன். பாஜக – அதிமுக கூட்டணியை கேள்வி கேட்கும், திமுக கூட்டணி குழப்பத்தில் உள்ளது.
துணை முதலமைச்சர் என்று போஸ்டர் ஒட்டிய செல்வப்பெருந்தகை மறைமுகமாக எச்சரிக்கப்பட்டு, போஸ்டர்கள் அகற்றப்பட்டன. சாம்சங் தொழிலாளர்களுக்காக பேசிய கம்யூனிஸ்டுகள் ஒட்டாத நீரை போல இருந்து கொண்டிருக்கின்றனர். வேல்முருகன் எப்படி பேச வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார், திருமாவளவன் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்,” என்று கூறினார்.
அதே சமயம், திருமாவளவன் தன்னுடைய பேஸ்புக் வீடியோவில் “ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும்” என்று கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Facebook
திருமாவளவன் வீடியோ வெளியிட காரணம் என்ன?
2026-ம் ஆண்டு தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இப்போதே முடிவாகி வரும் நிலையில், இந்த கருத்துகளும் தேர்தல் பின்னணியிலேயே பார்க்கப்படுகிறது.
மூத்தப் பத்திரிகையாளர் மாலன், “திருமாவளவனுக்கு கட்சிக்குள் ஒரு அழுத்தம் இருக்கிறது. அந்த வீடியோவில் பேசியதை பார்த்தாலே தெரியும். தலைமையின் கருத்துக் குறித்து தெளிவை கூட்டணிக் குறித்து பொது வெளியில் பேசுபவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுகவுடனான கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்ற கேள்வி விசிக தொண்டர்கள் மத்தியில் உள்ளது” என்கிறார்.
திருமாவளவன் இது போன்று பேசுவது வழக்கமானது தான் என்கிறார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. ” தேர்தல் நேரத்தில் பேரம் பேசுவதற்காக இது போன்ற வீடியோக்கள் வெளியிடுகிறார், இதில் கொள்கை எதுவும் இல்லை. கொள்கை தான் முக்கியம் என்றால் வேங்கை வயல் விவகாரம் ஒன்று போதும் திமுக கூட்டணியிலிருந்து வெளியில் வர. நீதிக் கட்சியின் நீட்சி தான் திமுக என்றால் தலித்துகளுக்கு எதிரானவர்கள் தானே” என்கிறார்.
ஒரே கூட்டணியில் இருந்த பாமகவும் விசிகவும்
பாமகவும் விசிகவும் இன்று முரண்பட்ட எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தவை அவை. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அப்போது பாமகவுக்கும் 30 இடங்களும், விசிகவுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் அதிமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பாமக போட்டியிட்ட 30 இடங்களில் மூன்று இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. விசிக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.
2012-ம் ஆண்டு தருமபுரியில் ஏற்பட்ட சாதி மோதல், உள்ளிட்ட விவகாரங்கள் அந்த தேர்தலுக்குப் பிறகு பாமக, விசிகவுக்கு இடையிலான உறவை மோசமாக்கியது.
இந்நிலையில், அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டுக்கு திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மே மாதம் 11-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருந்தார்.
ராணிப்பேட்டையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திருமாவளவனை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் நேரில் சந்தித்து வெற்றிலை பாக்கு, பழம் வைத்து மாநாட்டு அழைப்பிதழை திருமாவளவனிடம் கொடுத்தார்.

பட மூலாதாரம், RAMADOSS
“பாமக தொடக்கத்தில் விசிகவுடன் முரண்பட்ட கட்சியாக இருக்கவில்லை, கட்சியின் தலைவர், செயலாளர் பொறுப்புகளில் ஒருவர் தலித்தாக இருந்தார்கள். அப்படி தான் தலித் ஏழுமலை, பொன்னுசாமி போன்றோர் பொறுப்புகளுக்கு வந்தனர். மத்திய அமைச்சரவையிலும் பாமக சார்பாக தலித் இருந்திருக்கிறார். கூட்டணிகளை மனதில் வைத்து தற்போது பாமக விசிகவுடன் சற்று தணிந்து செல்ல வேண்டும் என்று யோசிக்கலாம். மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததும் அதற்காகவே இருக்கலாம்” என்கிறார் மாலன்.

பட மூலாதாரம், Facebook
ஆனால் பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார். “பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம் என்று தொடர்ந்து கூறிவருகிறோம். 2011 போன்ற கூட்டணிக்கு வாய்ப்பில்லை” என்கிறார் அவர்.
அப்படியென்றால், இப்போதைய அரசியல் நிலவரத்தில் விசிகவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு திமுக கூட்டணி தானே என்று கேட்டதற்கு, “நாங்கள் திமுகவை நம்பி இருப்போம் என்று கூறவில்லை, இந்த கூட்டணி முக்கியம் என்று விசிக கருதுகிறது. இந்தக் கூட்டணி திமுக மட்டுமே அமைத்த கூட்டணி அல்ல, விசிக உட்பட அனைவரும் சேர்ந்து அமைத்த கூட்டணி” என்கிறார்.
பாமகவும் திமுகவும் இணைந்து சந்தித்த தேர்தல்கள்
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அப்போது 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையிலான விரிசல்கள் காரணமாக பாமகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக திமுக கூறியது, 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஒரு இடத்திலும் வெல்லாத பாமக மீண்டும் 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இணைந்தது. அந்த தேர்தலில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. பாமகவின் மோசமான தேர்தல் தோல்விக்கு, திமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பே காரணம் என்று கூறி பாமக, திமுக கூட்டணியிலிருந்து 2012-ம் ஆண்டு வெளியேறியது. அப்போது முதல் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறவே இல்லை.
ஆனால், இப்போது பாமகவுக்குள் திமுக கூட்டணியில் சேரலாம் என்ற விருப்பம் எழுவதாக மூத்தப் பத்திரிகையாளர் மாலன் கூறுகிறார். “பாமகவுக்குள் எந்த கூட்டணியில் சேர வேண்டும் என்ற கேள்வி நிலவுகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமகவுக்கு கடந்த தேர்தல்களில் எந்த பலனும் கிடைக்கவில்லை. களத்தில் திமுகவுக்கே ஆதரவு இருப்பதால், திமுகவுடன் சேர வேண்டும் என்று குரல்கள் கட்சிக்குள் ஒலிக்கின்றன.
பாமக திமுக கூட்டணியில் இல்லை என்று ஸ்டாலின் மறுத்துவிட்டார். எனினும் திமுக கூட்டணியில் சேர பாமக விருப்பம் தெரிவித்தால், திமுக அதை ஏற்காது என்று கூற முடியாது. திமுக தலித்துகளுக்கு எதிரான கட்சி இல்லை என்றாலும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவான கட்சி என்பதை மறுக்க முடியாது.” என்கிறார்.

பட மூலாதாரம், RAVIKUMAR
பாமகவுடனான கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இல்லாததால், திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று நம்பவில்லை என்கிறார் ரவிக்குமார். “பாமகவுடன் கூட்டணி வைக்காத கட்சி அல்ல திமுக என்பது தெரியும். எனினும் கடந்த காலங்களில் அந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையவில்லை. ஆனால் விசிக, திமுக, இடதுசாரிகள் கூட்டணி தொடர்ந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறது. திமுகவின் வாக்குகள் விசிகவுக்கும், விசிகவின் வாக்குகள் திமுகவுக்கும் களத்தில் பரிமாற்றப்பட்டுகின்றன. கூட்டணியில் இது தானே தேவை. கொள்கை ஒரு புறம் இருந்தாலும், கூட்டணிக் கணக்குகளும் ஒரு கட்சிக்கு முக்கியம் தானே. அப்படி பார்த்தாலும் பாமகவுடன் திமுக சேரும் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்கிறார்.
பாமகவும் விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறுமா என்று கேட்டதற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “பாமக இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. கூட்டணிகள் குறித்து அவ்வளவு தான் சொல்ல முடியும்” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC