SOURCE :- BBC NEWS

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

“இரவு 11 மணிக்கு மேல் தெருவில் நடமாட முடியவில்லை. நன்கு பழக்கப்பட்ட நாய்களே துரத்துகின்றன. சாலைகள் மோசமாக உள்ளதால் நாய்களிடம் இருந்து தப்பித்தாலும் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்படுகிறது” எனக் கூறுகிறார், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் லோகநாதன்.

இவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தெருநாய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே செல்கிறது. இந்த ஆண்டின் முதல் 75 நாட்களில் 1.18 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக, பொது சுகாதாரத்துறையின் மார்ச் மாத அறிக்கை கூறுகிறது.

நாய்க்கடி பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை மே 2 ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டினார். இந்தக் கூட்டத்தால் என்ன பலன்?

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நாய்க்கடியால் 4,79,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் இதில் 40 பேர் ரேபிஸ் தொற்று பாதிப்பு காரணமாக இறந்துவிட்டதாகவும் பிபிசி தமிழுக்கு பொது சுகாதாரத்துறை அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

அதுவே, 2023 ஆம் ஆண்டில் 4,41,804 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 22 பேர் ரேபிஸ் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர். ரேபிஸ் தொற்றால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதை, பொது சுகாதாரத்துறையின் அறிக்கை சுட்டிக் காட்டியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த ஆண்டு அதிகபட்சமாக அரியலூரில் 37,023 பேரும் கடலூரில் 23,997 பேரும் ஈரோட்டில் 21,507 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 24,088 பேரும் கோவையில் 12,097 பேரும் நாய்க்கடியால் பாதிப்படைந்துள்ளதாக, பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பிரச்னைக்கு தீர்வு காணவும் மே 2 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நாய்களுக்கு தனி காப்பகங்கள்

X பதிவை கடந்து செல்ல

X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், * நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு 500 மருத்துவர்களுக்குப் பயிற்சியும் உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய் பிடிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்படும்.

* மாநிலம் முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதி.

* கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்களை அமைத்தல், காப்பகங்களை தொண்டு நிறுவனம் மூலம் பராமரித்தல்.

* மாவட்ட அளவில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி பணிகள், தனியார் மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

* இந்திய விலங்குகள் நல வாரியத்தின் ஏப்ரல் 11, 2025 அறிக்கையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளூர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தல்

* நாய்களின் பெருக்கத்தை கருத்தில் கொண்டு நாய்பிடி வாகனங்களை கொள்முதல் செய்யவும் தேவையான பணியாளர்களை நியமிக்கவும் அறிவுறுத்தல் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

மாநில அரசின் மேற்கண்ட முடிவுகளை வரவேற்பதாகக் கூறுகிறார், சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தெருநாய்களை கொல்ல வேண்டும் என்றெல்லாம் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆனால், நாய்களைப் பாதுகாப்பாக கையாண்டு அதன் நலனையும் கவனிக்க வேண்டும் என மாநில அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று” என்கிறார்.

“நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். அதனுடன் சாலைகளை சீரமைக்க வேண்டியது முக்கிய பணியாக உள்ளது” எனக் கூறுகிறார், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் லோகநாதன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

‘நாய்களிடம் இருந்து தப்பித்தாலும்…’

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நாய்கள் விரட்டும்போது நடந்து செல்வோரும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் கடும் பாதிப்படைகின்றனர். நாய்களிடம் இருந்து கடிபடாமல் தப்பித்து ஓடினாலும் கீழே விழுந்து காயம் அடைவது தினசரி நடக்கிறது” எனக் கூறுகிறார்.

ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தெருநாய்களைக் கொல்ல வேண்டும் என யாரும் கூறுவதில்லை. அதேநேரம், நாய்களுக்குத் தனியாக காப்பகங்களை உருவாக்கி அதில் அடைக்க முடியுமா என்பதையும் அரசு ஆலோசிக்க வேண்டும்” என லோகநாதன் தெரிவித்தார்.

முதலமைச்சர் நடத்திய கூட்டத்திலும், இரு சக்கர வாகனங்களுக்கு குறுக்கே நாய் வருவதால் ஏற்படும் விபத்து, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நாய் கடிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“இரவுப் பணி முடித்துவிட்டுச் செல்லும் நபர்களை நாய் கடிப்பதைவிட, அவர்களை விரட்டுவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. இதனை சரிசெய்வதற்கு இனப்பெருக்க கட்டுப்பாடு தீர்வாக இருக்க முடியும்” எனக் கூறுகிறார், சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் மருத்துவர் கமால் ஹுசைன்.

நாய்களை மொத்தமாக ஓர் இடத்தில் அடைத்து வைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி உள்பட 5 இடங்களில் நாய் கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. மேலும், 10 இடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம், குறுகிய காலத்தில் அதிக கருத்தடை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சாலைகளுக்கு ரூ.450 கோடி

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Handout

சாலைகள் மோசமாக உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

“சென்னையில் 450 கோடி மதிப்பீட்டில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய சாலைகளைப் போடுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. ஜூன், ஜூலை மாதத்துக்குள் சாலைகள் போடப்பட்டுவிடும். மழைக் காலம் தொடங்குவதற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும். இதற்காக மாநகராட்சிக்கு அரசே நிதி ஒதுக்கியுள்ளது” எனக் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் மகேஷ்குமார், “நாய்க்கடி தொடர்பாக தினமும் புகார்கள் வந்து கொண்டே உள்ளன. விலங்குகள் நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கான கருத்துரு உருவாக்குவதற்காக முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடந்தது. அரசின் வழிகாட்டுதல்களை மாநகராட்சி பின்பற்றும்” எனக் கூறுகிறார்.

‘மருத்துவர்கள் மீதே நடவடிக்கை’

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Handout

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சிகளை மருத்துவர்களுக்கு வழங்குமாறு ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், உரிய முறையில் கருத்தடை செய்வதில்லை எனவும் கருத்தடை முடிந்த பிறகு அதன் முந்தைய இடத்தைவிட்டு வேறு இடங்களுக்குக் கொண்டு போய்விடுவதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ், “நாயை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு போய்விடக் கூடாது. ஆனால், அதையும் மீறி சில இடங்களில் இடம் மாற்றி விடுவதாக புகார்கள் வந்துள்ளன” எனக் கூறுகிறார்.

இதற்கு பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், “நாய்களைப் பிடிக்கும் இடத்திலேயே விட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதை முறையாக பின்பற்றி வருகிறோம்” எனக் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் மருத்துவர் கமால் ஹுசைனிடம் கேட்டபோது, “சட்டத்துக்குட்பட்டு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு அதே இடத்தில் நாயைக் கொண்டு போய்விடுகிறோம். சிகிச்சையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் மீதே நடவடிக்கை பாயும்” என்கிறார்.

நாய்களுக்கு மைக்ரோ சிப்…பலன் தருமா?

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து, தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதைக் கண்காணிக்கும் வகையில் மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

“நாய் கடித்து மக்களுக்கு ரேபிஸ் தொற்று வந்துவிட்டால் காப்பாற்ற முடியாது. ரேபிஸ் தொற்று பாதித்த நாய் யாரைக் கடித்தாலும் ஆபத்து என்பதால், மைக்ரோ சிப் மூலம் தடுப்பூசி போடப்படுவதைக் கண்காணிக்க முடியும்” எனக் கூறுகிறார், மருத்துவர் கமால் ஹுசைன்.

“வளர்ப்பு நாய்களுக்கும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இந்தப் பணிகள் தொடங்கிவிடும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மைக்ரோ சிப் ஸ்கேன் செய்யும்போது, நாயின் இனம், வயது, உரிமையாளர் பெயர், அவரது அடையாள சான்று, கருத்தடை செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரம், ரேபிஸ் தடுப்பூசி (ARV) செலுத்திய தேதி, மருத்துவர் பெயர், தடுப்பூசியின் அடுத்த தவணை தேதி ஆகியவற்றை துல்லியமாக கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

’50 ரூபாய் தான்… ஆனாலும் அலட்சியம்’

தெருநாய்கள், விலங்குகள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சிறுமி ஒருவரை ராட்வீலர் நாய்கள் கடித்து பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆதம்பாக்கத்தில் காவலர் குடியிருப்பில் சிறுவனை நாய் கடித்தது, சூளைமேடு பகுதியில் நீலா-சுரேஷ் தம்பதியை தெருநாய்கள் கடித்துக் குதறியது ஆகிய சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக, நாய் வளர்ப்புக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 32 ஆயிரம் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

இதில், 9,641 நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 19,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் கமால் ஹுசைன்.

“சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஆவடி, தாம்பரம் என புறநகர்ப் பகுதிகளில் இருந்தெல்லாம் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். சென்னை மாநகராட்சி எல்லைக்கு மட்டுமே உரிமம் வழங்க முடியும். அதனால் நிராகரிக்கப்படுகிறது” எனக் கூறுகிறார்.

“உரிமம் பெறுவதற்கு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை சிலர் செய்வதில்லை” எனக் கூறும் கமால் ஹுசைன், “உரிமையாளரின் அடையாள சான்றுகளையும் சிலர் பதிவேற்றம் செய்தில்லை. இதன் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கான கட்டணம் என்பது வெறும் 50 ரூபாய் தான். தங்கள் நாய் யாரையாவது கடித்துவிட்டால் மட்டுமே, சிக்கல் வராமல் இருப்பதற்காக உரிமம் கேட்கின்றனர்” எனக் கூறுகிறார்.

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும்போது உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறும் கமால் ஹுசைன், “உரிமம் வாங்காமல் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாநகராட்சி மேயரும் ஆணையரும் முடிவு செய்வார்கள்” எனக் கூறுகிறார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU