SOURCE :- BBC NEWS

தமிழக வெற்றிக் கழகம், விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கு ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் நடந்தது.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் இரு நாட்களும் பங்கேற்றுப் பேசினார். அவரைப் பார்ப்பதற்காக 2 நாட்களும் சாலையெங்கும் பெருமளவு கூட்டம் குவிந்தது.

இந்த நிகழ்ச்சி தேர்தலை எதிர் கொள்ளவும், கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுவதால், இதுகுறித்து எல்லாத் தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.

அதை 2 நாள் கருத்தரங்கு பூர்த்தி செய்ததா, கோவையில் கூடிய கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற விவாதங்கள் வலுத்து வருகின்றன.

இந்த கூட்டமும், கருத்தரங்கில் பெற்ற பயிற்சியும் தவெகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலின்போது வாக்கு அறுவடைக்கு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம், விஜய்

பயிற்சிப்பட்டறையில் கற்றுத்தரப்பட்டது என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் குமார், ”தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும் வாக்குச்சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய அனைத்துப்பணிகள் பற்றியும் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது.

மற்ற கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படியெப்படியெல்லாம் ஏமாற்றப் பார்ப்பார்கள் என்றும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் தலைவரே நேரடியாக வந்து பங்கேற்றதுதான் எங்களுக்கு பெரும் உற்சாகத்தையும், மற்ற கட்சியினருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை இதுதான்!

தமிழக வெற்றிக் கழகம், விஜய்

கருத்தரங்கில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு, கையேடு மற்றும் பென்டிரைவ் போன்றவை வழங்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அந்த பென்டிரைவில், தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக, வயது வாரியாக எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலுள்ள உள்ள வாக்காளர் விவரம் உள்ளிட்ட பல விவரங்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன என்கிறார் கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் விக்னேஷ். இவர் தலைமையில்தான் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

”எப்படி மக்களை அணுக வேண்டும், எப்படி ஓர் அணியாக செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டது. இது எல்லாக் கட்சியிலும் செய்வதுதான். அத்துடன் எங்களுக்கென்று ரகசியமாக சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கட்சி நிர்வாகிகளுக்குத் தனியாகவும், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தனியாகவும் சில விஷயங்கள் சொல்லத்தரப்பட்டுள்ளன. இன்னும் 40 நாட்களில் கொங்கு மண்டலம் முழுவதும் பக்காவாக பூத் கமிட்டிகளை தயார் செய்து விடுவோம்.” என்றார் விக்னேஷ்.

“விஜய்க்கே பயிற்சி தேவை”

விஜய், தமிழக வெற்றிக் கழகம்

இருப்பினும் 2 நாட்கள் கருத்தரங்கு நடத்தியும் அதில் உரியவர்கள் யாரும் பயிற்சி கொடுத்ததாகத் தெரியவில்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன்.

வாக்காளர் பட்டியல் என்றால் என்ன, அதில் எப்படிப் பெயர் சேர்ப்பது, எப்படி நீக்குவது, இடம் மாறும்போது எப்படி விண்ணப்பிப்பது, வீடுவீடாகச் சென்று வாக்காளர் பெயர் இருப்பதை எப்படி சரி பார்க்க வேண்டும், ஒருவர் வாக்கை மற்றொருவர் பதிவு செய்திருந்தால் அதை எப்படி நீக்குவது என்பதை தேர்தல் அனுபவமுள்ள சில அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

”முதலில் இந்த விஷயங்களை கட்சியின் தலைவரான விஜய் ஆழமாகக் கற்றறிய வேண்டும். உரிய நிபுணர்களை வைத்துப் பயிற்சி எடுத்து, அந்த கருத்தரங்கத்தில் முன்னால் அமர்ந்து அவரும் முழுமையாக இதைத் தெரிந்திருக்கவேண்டும்.

அதை விடுத்து முதல் நாளில் 3 நிமிடமும், அடுத்த நாளில் 6 நிமிடமும் பேசிய பேச்சால் எந்த பயனும் கிடைக்குமென்று தெரியவில்லை.” என்கிறார் குபேந்திரன்.

“முகவரே இல்லாவிட்டாலும் விஜய்க்கு வாக்கு விழும்”

விஜய், தமிழக வெற்றிக் கழகம்

திமுக, அதிமுகவைப் பொறுத்தவரை, பூத் முகவர்கள் மிக அனுபவமிக்கவர்களாக இருப்பார்கள். ஒரு ஆளைப் பார்த்தே, அவர் எந்தப் பகுதியிலிருந்து வருகிறார், அவர் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதையே அறிந்திருப்பார்கள் என்று கூறும் மூத்த பத்திரிக்கையாளர் ஷபீர் அகமது, அந்த இடத்தில் பணி செய்வது தவெகவினருக்கு ஒரு சவால்தான் என்கிறார்.

”வழக்கமாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் இதுபோன்று வாக்குச்சாவடி முகவர்கள், செயல் வீரர்கள் கூட்டத்தை பெரியளவில் நடத்தி மாஸ் காண்பிப்பார்கள். மற்றபடி எந்தக் கட்சியிலும் இளைஞர்கள் பங்கேற்பு குறைந்துள்ளது. அந்த வகையில் இளையவர்களை அதிகம் கொண்டுள்ள ஒரு கட்சியாக தவெகவைப் பார்க்கிறேன். முன்பு ரசிகராக இருந்தவன் இப்போது தொண்டனாகிறான். அவனுடைய வாக்கு திசை மாறாது.” என்கிறார்.

இப்போது வாக்குச்சாவடி முகவராக அமரப்போகும் தவெக தொண்டருக்கு, தேர்தல் அரசியலைப் புரிந்து கொள்ள 2 அல்லது 3 தேர்தல்கள் தேவைப்படும் என்பதை ஒப்புக் கொள்ளும் ஷபீர் அகமது, வாக்குச்சாவடியில் யாருமே இல்லாவிடினும் விஜய்க்கு விழும் வாக்கை தடுக்க முடியாது என்கிறார்.

கமலுக்கு எந்தக் கட்டமைப்பும் இன்றி, நகர்ப்புறத்தில் ஒரு வாக்கு வங்கி உருவானதைச் சுட்டிக்காட்டும் ஷபீர், விஜய்க்கு நகரம், கிராமம் என பரவலாக வாக்குவங்கி இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம், விஜய்

”கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்றோம். அப்போது திமுகவுக்கு எல்லா இடங்களிலும் ஆட்கள் இருந்தனர். அதிமுகவுக்கே 50 சதவீத இடங்களில் ஆட்கள் இல்லை.

எங்களுக்கு இப்போதே எல்லா வாக்குச்சாவடிக்கும் ஆட்கள் தயாராகவுள்ளனர். 2 நாள் கருத்தரங்குக்குப் பின், ஆளும்கட்சி, எதிர்க்கட்சியிலுள்ள நண்பர்கள் பலரும் நாங்கள் மாஸ் காட்டி விட்டதாக பாராட்டினர்” என்றார் தவெக நிர்வாகி விக்னேஷ்.

ஆனால் கூட்டம் கூடியதற்கும், தேர்தல் அரசியலைப் புரிந்து கொண்டு அதைச் செயல்படுத்துவதற்கும் இடையில் நிறைய துாரம் இருப்பதாகச் சொல்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

நடிகர் என்பதற்காகக் குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறும் குபேந்திரன், ஒருசில பத்திரிகையாளர்களுக்கே தேர்தல் கட்டமைப்பு புரிவதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். எல்லாம் தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் சில நேரங்களில் தவறு செய்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சினிமா செல்வாக்கா? மக்கள் செல்வாக்கா?

விஜய் கோவையில் தங்கியிருந்த 2 நாட்களில், முதல் நாளில் விமான நிலையத்திலிருந்தும், மறுநாள் ஓட்டலில் இருந்தும் கருத்தரங்கு நடந்த கல்லுாரிக்குச் செல்லும்போது, வாகனத்தின் இரு புறமும் பல ஆயிரம் மக்கள் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும் கோவை விமான நிலையம், காளப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி என்பவர் கொடுத்துள்ள புகாரின்படி, தவெக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பீளமேடு காவல்துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர். திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும் தவெக கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆனால் விஜய் செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரைப் பார்க்க கூட்டம் கூடுவது இயல்புதான் என்று கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அந்த கூட்டமெல்லாம் வாக்காக மாறாது என்று காட்டமாக விமர்சித்துள்ளார். நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆருடன் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

”விஜய் சிவகாசிக்கு வந்தால் நான் கூட ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன். எம்ஜிஆர் 20 ஆண்டுகள் அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்றிய பின், கட்சி துவக்கியதால்தான் வெற்றி பெற முடிந்தது. அவரைப் போல ஆகலாம் என்று நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் நினைக்கின்றனர். அது நடக்காது.” என்று ராஜேந்திர பாலாஜி கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

இதை மறுக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ஷபீர் அகமது, ”திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் குடும்பம் குடும்பமாகச் சென்று வாக்களிப்பார்கள். இந்த முறை அந்த ஒருங்கிணைப்பு உடையும்.

வீட்டிலுள்ள புதிய வாக்காளர் மற்றும் குடும்பத்தலைவிகள் விஜய்க்கு வாக்களிக்கலாம். தங்களின் தாய், தந்தையையே ஒரு முறை விஜய்க்குப்போடுங்கள் என்று குழந்தைகள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படலாம். அந்த தனித்துவம், விஜய் கட்சியைத் தவிர, வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை.” என்கிறார்.

”பொதுவாக ஒரு கிராமத்தில் ஒரு பகுதியில் திமுக கொடி இருந்தால் காலனிகளில் அதிமுக கொடி இருக்கும். இது மாறிமாறி இருக்கும். ஆனால் கிராமங்களிலும் இரு பகுதிகளிலும் பறக்கிற ஒரே கொடியாக தவெக கொடி இருக்கிறது.

அதேபோல, சிறுபான்மையினரில் இஸ்லாமியரை விட கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியில் விஜய்க்கு ஒரு பங்கு செல்லுமென்று யூகிக்க முடிகிறது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பிற கட்சிகளின் வாக்குகளை அவர் சிதறடிப்பார்.

மற்ற கட்சிகளை விட திமுக, அதிமுகவுக்கு சேதம் அதிகமாயிருக்கும். சீமானுக்கும் கணிசமான பாதிப்பு இருக்கும். இதையெல்லாம் வெளிப்படுத்துகிற கூட்டமாகத்தான் விஜய்க்கு இப்போது கூடுகிற கூட்டத்தைக் கணிக்க முடிகிறது.” என்கிறார் ஷபீர் அகமது.

ஆனால் இது சினிமா கவர்ச்சியில் கூடுகிற கூட்டம்தான் என்று மீண்டும் அழுத்திக் கூறும் குபேந்திரன், கோவையில் நடந்த கருத்தரங்கையும் சினிமா பாணியில்தான் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்கிறார். படப்பிடிப்பில் ஒரு காட்சி சரியில்லாவிட்டால் திரும்ப எடுக்கலாம், ஆனால் அரசியலில் ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதைச் சரி செய்யவே முடியாது என்கிறார்.

”கோவையில் பிரமாண்டமாக நடந்தது ரசிகர் மன்றக் கூட்டம்தான். பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் வெளியாகும் முதல் காட்சியை இப்போது FDFS (First Day First Show) என்று கணிக்கிறார்கள்.

அதுபோல சென்னைக்கு வெளியே விஜய் நடத்தியுள்ள ஒரு FDFS காட்சிதான் இந்த கருத்தரங்கு. இதில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதெல்லாம் தேர்தலின்போதுதான் தெரியவரும்.” என்கிறார் குபேந்திரன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC