SOURCE :- BBC NEWS

நிலவில் செலுத்தப்படும் வாகனங்களின் சக்கரங்கள் பழுதடைந்தால் என்ன செய்ய இயலும்? நிலவில் மனிதர்கள், நாசா,

பட மூலாதாரம், Getty Images

அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிலவுக்குச் செல்வதும், பிறகு செவ்வாய் கோளுக்கு செல்வதும் என்பது மனித குல வரலாற்றில் சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது போன்றதாகும்.

வாகனங்களின் சக்கரங்கள் பஞ்சரானால் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து உடனடியாக திரும்பி வந்துவிட இயலாது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டயர் உற்பத்தி நிறுவனமான மிச்செலினின் தலைமை செயல் நிர்வாகியான ஃப்ளோரண்ட் மெனேகாக்ஸ், “டயர் ‘பஞ்சர்’ என்ற ஒன்றை மட்டும் நீங்கள் சந்திக்கவே கூடாது,” என்று கூறுகிறார்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதை ஆளில்லா க்யூரியாசிட்டி ரோவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

2012-ஆம் ஆண்டு செவ்வாயில் தரையிறங்கிய பிறகு, ஒரே ஆண்டில் அதில் பொறுத்தப்பட்டிருந்த 6 கடினமான அலுமினிய சக்கரங்களும் பெரும் சேதத்தை சந்தித்திருந்தன. அந்த சேதம் வெளிப்படையாகவே தெரிந்தது.

2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் ஆர்டெமிஸ் (Artemis) திட்டங்களின் மூலமாக வானியல் ஆராய்ச்சியாளர்களை நிலவுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் ஒரு பகுதியாக, நிலவின் தென்துருவத்தை லூனார் ரோவர் மூலம் ஆய்வு செய்யப்படும். ஆர்டெமிஸ் வி (Artemis V) என்று அழைக்கப்படும் அந்த திட்டம் 2030-ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1969 முதல் 1972-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 6 முறை, அப்போலோ திட்டத்தின் மூலம் ஆராய்ச்சியாளார்கள் நிலவின் மேற்பரப்பில் 25 மைல்கள் (40 கி.மீ) வரை சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது நிலவுக்கு செல்ல இருக்கும் ஆர்டெமிஸ் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆராய்ச்சியை மேலும் விரிவுப்படுத்த உள்ளனர்.

மிச்செலினின் காற்றில்லா சக்கரங்களை உருவாக்கும் (Michelin’s lunar airless wheel programme ) திட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ள சில்வைன் பார்தெட், “10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே இலக்கு,” என்று தெரிவித்தார். காற்றில்லா சக்கரங்கள் குறித்த ஆய்வு ஃபிரெஞ்சு நகரமான க்ளேர்மாண்ட் ஃபெர்ராண்டில் நடைபெற்று வருகிறது.

“நாம் குறுகிய கால ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் வகையிலான சக்கரங்கள் குறித்து பேசவில்லை. பல பத்தாண்டுகள் பயன்படுத்தப்படும் வகையிலான சக்கரங்கள் குறித்து நாம் பேசுகிறோம்,” என்று கூறுகிறார் முனைவர் சாண்டோ பதுலா. ஓஹியோவின் க்ளீவ்லேண்டில் உள்ள நாசாவின் ஜான் க்ளென் ஆராய்ச்சி மையத்தில் பொறியாளராக பணியாற்றும் அவர் உலோகவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அதிக எடையை தாங்கிச் செல்லும் வாகனங்கள்

நிலவில் நடத்தப்படும் ஆய்வுகளுக்காக தொழில்நுட்பத்தை உருவாக்கும் எவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் அங்கு நிலவும் தட்பவெட்ப நிலை.

நிலவின் துருவங்களில் வெப்ப நிலையானது -230 C என்ற நிலைக்கு குறையும். நிகர ஜீரோவுக்கும் குறைவான இந்த வெப்ப நிலையில் அணுக்களும் நகராது.

சக்கரங்களுக்கு ஏற்பட இருக்கும் பிரச்னையும் இது தான்.

“அணுக்களும் நகராத சூழலில், உலோகங்கள் அதன் வடிவங்களின் இயல்பில் இருந்து மாறி (deform) மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது என்பது கடினமாக இருக்கும்,” என்று கூறுகிறார் பதுலா.

பாறைகளின் மேல் பயணிக்கும் போது சக்கரங்கள் அதன் வடிவங்களில் இருந்து, தேவைக்கு ஏற்ப மாற்றம் அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

“நிரந்தரமாக அதன் வடிவம் மாறிவிட்டால், அது நிலவின் மேற்பரப்பில் சீராக பயணிக்காது. ஆற்றலும் விரையமாகும்,” என்றும் பதுலா குறிப்பிடுகிறார்.

அப்போலோ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியது போன்று இலகுரக ரோவர்கள் வருகின்ற காலத்தில் பயன்படுத்தப்போவதில்லை. எனவே அதிக எடையை நகர்த்திச் செல்லும் வகையில் சக்கரங்கள் இருக்க வேண்டும்.

“விண்வெளியில் நடத்தப்படும் அடுத்தக் கட்ட ஆராய்ச்சிகளுக்காக பெரிய அளவிலான ஆய்வகங்கள் மற்றும் நடமாடும் வசிப்பிடங்கள் தேவைப்படும். அதற்கேற்றபடி சக்கரங்கள் உருவாக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

செவ்வாய் கோளில் பிரச்னை இன்னும் பெரியதாக உள்ளது. ஏன் என்றால் நிலவைக் காட்டிலும் அங்கே இரண்டு மடங்கு ஈர்ப்பு விசை உள்ளது.

நிலவில் செலுத்தப்படும் வாகனங்களின் சக்கரங்கள் பழுதடைந்தால் என்ன செய்ய இயலும்? நிலவில் மனிதர்கள், நாசா, அறிவியல், வானியல் ஆராய்ச்சி

பட மூலாதாரம், NASA

மீளக்கூடிய வகையிலான உலோகங்களால் உருவாக்கப்படும் சக்கரங்கள்

அப்போலோவின் ரோவர்களின் சக்கரங்கள் ஜிங்க் மேற்பூச்சு பூசப்பட்ட பியானோ கம்பிகளை இணைத்து உருவாக்கப்பட்டன. அவை 21 மைல்கள் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

அதீத வெப்பநிலை மற்றும் காஸ்மிக் கதிர்கள் ரப்பரை உடைத்து, துண்டு துண்டாக்கும் என்பதால், கண்ணாடி, உலோகக் கலவைகள் மற்றும் உயர் தர ப்ளாஸ்டிக் போன்றவையே காற்றற்ற டயர்கள் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

“பொதுவாக உலோக அல்லது கார்பன் இழைகளை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை வைத்தே இத்தகைய சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றன,” என்று கூறுகிறார் பியெட்ரோ பாக்லியோன். அவர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் ( European Space Agency’s (ESA)) ரோசாலிண்ட் ஃப்ராங்கிளின் திட்டத்தின் தலைவராக உள்ளார். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 2028-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ரோவரை அனுப்ப உள்ளது.

நம்பிக்கை அளிக்கக் கூடிய மற்றொரு பொருள் நிட்டினால் (nitinol). இது நிக்கல் மற்றும் டைட்டனியத்தின் உலோகக் கலவை.

“இவை இரண்டையும் ஒன்றினைக்கும் போது ரப்பர் போன்று செயல்படும் உலோகம் உருவாகும். பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தாலும் கூட, அது தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பும்,” என்று எர்ல் பட்ரிக் கோல் குறிப்பிடுகிறார். அவர் தி ஸ்மார்ட் டயர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

நிட்டினாலின் நெகிழ்வான தன்மை மிகவும் ஆச்சர்யமூட்டும் ஒன்றாக இருக்கும் என்று எர்ல் குறிப்பிடுகிறார்.

இந்த உலோகக் கலவை மிகவும் ‘புரட்சிகரமானது’ என்று கூறுகிறார் முனைவர் பதுலா. நிலையை மாற்றிக் கொள்ளும் போது இந்த உலோகக் கலவை ஆற்றலை உட்கிரகித்து வெளியிடும் தன்மையைக் கொண்டுள்ளது. சூடுபடுத்துதல் மற்றும் உறையவைத்தல் போன்ற பணிகளையும் இதை வைத்து செய்ய இயலும் என்று அவர் கூறுகிறார்.

நிலவில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையிலான சக்கரங்களை உருவாக்க உயர் ரக ப்ளாஸ்டிக்கிற்கு நிகரான உலோகம் சரியானதாக இருக்கும் என்று மிச்செலின் நிறுவனத்தில் பணியாற்றும் பார்தெட் கருதுகிறார்.

நிலவில் செலுத்தப்படும் வாகனங்களின் சக்கரங்கள் பழுதடைந்தால் என்ன செய்ய இயலும்? நிலவில் மனிதர்கள், நாசா, அறிவியல், வானியல் ஆராய்ச்சி

பட மூலாதாரம், Padraig Belton

ஒட்டகத்தின் கால்குளம்பு போன்று செயல்படும் உலோகங்கள்

பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் ஒட்டகத்தின் பாத அமைப்பை பிரதிபலிக்கும் வகையிலான மாதிரிகளை உருவாக்கி வருகிறது.

ஒட்டகங்கள் மிருதுவான, கொழுப்பு மிக்க பாதங்களைக் கொண்டுள்ளன. அது, மிருதுவான மணலில் ஒட்டங்கங்கள் புதைந்து போகாத வகையில் அதன் எடையை பெரிய பரப்பில் சம நிலைப்படுத்த உதவுகிறது.

இந்த செயல்பாட்டால் ஆர்வம் அடைந்த பிரிட்ஜ்ஸ்டோன் ஒட்டகத்தின் பாதத்தைப் பிரதிபலிக்கும் பொருளை, சக்கரத்தின் மேற்பரப்பில் பயன்படுத்துகிறது. மேலும் நெகிழும் தன்மை கொண்ட உலோக அச்சுகள் சக்கரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நிலவின் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனத்தின் எடையை பெரிய மேற்பரப்பில் பிரித்து கையாளுகிறது. இதன் காரணமாக நிலவில் உள்ள பாறைகள் மற்றும் தூசுக்களால் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது.

வெவ்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து மிச்செலின், பிரிட்ஜ்ஸ்டோன் மற்றும் கலிஃபோர்னியாவின் வென்சுரி ஆஸ்ட்ரோலேப் போன்ற நிறுவனங்கள் தங்கள் சக்கர தொழில் நுட்பத்தை நாசாவிடம் இந்த மாதம் வழங்கின. ஜான் க்ளென் ஆய்வு மையத்தில் அவர்கள் தங்களின் முன்மொழிவை சமர்பித்தனர்.

இந்த ஆண்டின் பிற்பாதியில் எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பதை நாசா முடிவெடுக்கும்.

க்ளேர்மாண்ட்டில் எரிமலைக்கு அருகே தன்னுடைய ரோவர் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது மிச்செலின். அந்த பரப்பு, நிலவின் மேற்பரப்பை பிரதிபலிப்பது போன்று இருக்கும்.

பிரிட்ஜ்ஸ்டோன் மேற்கு ஜப்பானில் உள்ள டோட்டரி மணல் திட்டுகளில் சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது.

அதே நேரத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், தங்களின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக சொந்தமாக ரோவர்களை உருவாக்க முடியுமா என்று சாத்தியங்களை ஆய்வு செய்து வருகிறது என்று பார்தெட் கூறுகிறார்.

நிலவில் மனிதர்கள், நாசா, அறிவியல், வானியல் ஆராய்ச்சி

பட மூலாதாரம், Bridgestone

இவர்களின் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பூமியிலும் சில இடங்களில் பயன்படுத்த இயலும்.

தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டு வரும் முனைவர் கோல் நாசாவின் தொழில் முனைவோருக்கான திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

அவர் செவ்வாயில் பயன்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் சூப்பர் – எலாஸ்டிக் வகை சக்கரங்களின் சில தொழில்நுட்பங்களை பூமியில் பயன்படுத்தும் வகையில் சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

நிக்கல்-டைட்டனியம் கொண்டு உருவாக்கப்படும் சைக்கிளின் சக்கரங்கள் இந்த ஆண்டில் வெளிவர உள்ளது.

ஒவ்வொரு சக்கரமும் 150 அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது. இந்திய மதிப்பில் அதன் விலை கிட்டத்தட்ட ரூ.13 ஆயிரம். விலை அதிகம் தான். இருப்பினும் இதன் சக்கரங்கள் மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும்.

கரடுமுரடான பாதையில் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் மோட்டர் பைக்குகளின் டையர்களிலும் இதைய பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் அவர்.

எவ்வாறு இருப்பினும் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஒரு சிறிய பங்காற்றுவது அவருடைய கனவாக இருக்கிறது.

“ஒரு நாள் என்னுடைய குழந்தைகளிடம், நிலவைப் பாருங்கள். உங்கள் அப்பா உருவாக்கிய டயர் அங்கே உள்ளது என்று கூறுவேன்,” என்று தெரிவிக்கிறார் அவர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU