SOURCE :- BBC NEWS

தற்கொலை, மன அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்வது?

இந்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 11ஆம் வகுப்புப் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் அவரை அடித்ததோடு, மிரட்டியதுதான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

மார்ச் மாதம் ஒன்றாம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்காக தயாராகிவந்த நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது.

ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சக மாணவர்கள் உருவ கேலி செய்ததுதான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், கல்லூரி சென்று வீடு திரும்பியவர் இரவில் தற்கொலை செய்துகொண்டார். சாதாரணமாக செய்தித்தாள்களைப் புரட்டுபவர்களின் கண்களில் படும் பதின்பருவ தற்கொலைகள் இவை. துல்லியமான புள்ளிவிவரங்கள், இன்னும் தீவிரமான எண்ணிக்கையைத் தரக்கூடும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாணவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை அளிக்கும் தன்னார்வ அமைப்பான ஐசி3 கடந்த ஆண்டு ‘Student suicides: An epidemic sweeping India’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய குற்ற பதிவு அமைப்பின் (NCRB) புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த அறிக்கை, சில அதிரவைக்கும் தகவல்களை முன்வைத்தது.

அதாவது, 2022ஆம் ஆண்டில் மாணவர் தற்கொலையில், தமிழ்நாடு 1,416 தற்கொலைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. 2021ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்துக்கு வந்திருந்தது அதிரவைத்தது.

மனித வாழ்வில் உடல்நலக் குறைபாடுகள் மிகக் குறைவாக உள்ள, மகிழ்ச்சிகரமான பருவமான பதின் பருவத்தில் இருப்பவர்கள் எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துவிடுகின்றன. துடிப்புமிக்க அந்தப் பருவத்தைச் சேர்ந்தவர்கள், ஏன் இதுபோன்ற முடிவை நாடுகிறார்கள்?

மாணவர்கள் விபரீத முடிவுகளை நாடுவது ஏன்?

“உலக அளவில் 13 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதைச் சேர்ந்தவர்களின் மரணத்தில், தற்கொலை மூன்றாவது காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னை உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்னை” என்கிறார் உளவியல் நிபுணரான டாக்டர் சுனில்குமார்.

“உளவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் குழந்தைகளும் குமரப் பருவத்தினரும் இரு காரணங்களை நோக்கியே செயல்படுவார்கள். ஒன்று, சார்ந்திருத்தல் அதாவது belonging. இரண்டாவது, தங்களுக்கான முக்கியத்துவம் (significance). பதின்பருவத்தில் இந்த இரண்டு அம்சங்களையும்தான் தங்கள் உலகில் அவர்கள் தேடுவார்கள்.” என்கிறார் சுனில்குமார்.

சுனில்குமார் விளக்கியதன்படி,

அவர்களுடைய உலகை பெற்றோர், சகாக்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, சுற்றம் மற்றும் சமூகம் என நான்காகப் பிரித்துக்கொள்ளலாம். இந்த நான்கு உலகங்களிலும் சார்ந்திருப்பதையும் , முக்கியத்துவத்தையும்தான் பதின்பருவத்தினர் தேடுவார்கள். இந்த உலகங்களில் அவை கிடைத்துவிட்டால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கிடைக்கவில்லையென்றால்தான் பிரச்னை.

அடுத்ததாக, தங்கள் மீது கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்குவார்கள். அந்த கவன ஈர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகும் சார்ந்திருப்பதற்கான இடமோ, முக்கியத்துவமோ கிடைக்கவில்லையென்றால், இதற்கு அடுத்த கட்டமாக தங்களுக்கு ஒரு அதிகாரம் இருக்கிறது என்று காட்ட முயற்சிப்பார்கள். பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடம் முரண்படுவார்கள்.

“பதிலுக்கு அவர்கள் அதிகாரத்தைச் செலுத்தினால், அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.” என்கிறார் சுனில்குமார்.

“இப்படி அவர்கள் அதிகாரம் காட்டியும் ஏதும் நடக்கவில்லையென்றால், பழிவாங்குவதில் இறங்குவார்கள். அதிலும் ஏதும் நடக்கவில்லையென்றால் தான் முக்கியமில்லாதவன், தான் சார்ந்திருக்க ஏதும் இல்லை, இந்த உலகத்துக்கே தேவையில்லை என்றெல்லாம் நம்ப ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் விபரீதமான முடிவுகளை எடுப்பார்கள்.” என கூறுகிரார் அவர்.

கவன ஈர்ப்பு நடவடிக்கை, அதிகாரத்தைக் காட்டுவது, பழிவாங்குவது, விபரீதமான முடிவுகளை எடுப்பது போன்ற எல்லாவற்றுக்கும் காரணம், நிதர்சனமும் சவால்களும் அவர்களால் தாங்க முடியாததாக இருப்பதுதான் என்கிறார் சுனில்குமார்.

“பெற்றோரின் அதிதீவிர கண்காணிப்பும் பிரச்னையே”

மன அழுத்தம், தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

பெற்றோர்கள் சுதந்திரமாக பேசத்தக்கவர்களாக இல்லாமல், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதும் பிரச்னையைத் தீவிரமாக்குகிறது என்கிறார் மனநல மருத்துவரான சிவபாலன்.

“தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள், குறிப்பாக பதின் பருவத்தினர் முந்தைய காலத்தைவிட கூடுதல் சுதந்திரத்தோடு இருப்பதாக பொதுவான ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அது சரியானதல்ல.” என்கிறார் அவர்.

முன்னெப்போதையும்விட குழந்தைகள் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு இப்போது செலுத்தப்படுகிறது எனக்கூறும் அவர் குறிப்பாக, பெற்றோரின் கண்காணிப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது என தெரிவித்தார்.

“இவர்கள், ஒரு பக்கம் கல்வி சார்ந்து அழுத்தத்தை அளிக்கிறார்கள். மற்றொரு பக்கம், தம் குழந்தை இதைத்தான் சாப்பிட வேண்டும், இதைத்தான் பார்க்க வேண்டும், இதைத்தான் விளையாட வேண்டும் என தீவிர ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தாம் ஒரு முன்மாதிரிப் பெற்றோராக இருக்க நினைப்பதுதான் இதற்குக் காரணம். இதற்காக, தம் குழந்தைகளும் ஒரு முன்மாதிரிக் குழந்தையாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.” என்கிறார்.

தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

மேலும் அவர் கூறுகையில், “இதனால், அவர்களைத் தீவிரமாக கண்காணித்து, அவர்களது சிறு பிரச்னைகளைக்கூட இவர்களே குறுக்கிட்டுத் தீர்க்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சின்ன சண்டை வந்தால்கூட, பெற்றோர் போய் சண்டை போடுகிறார்கள். இதனால் இந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு, தாமாக பிரச்னைகளை எதிர்கொள்ள முடிவதில்லை.” என்றார்.

இதனால், பெற்றோரால் குறுக்கிட முடியாத இடத்தில், அவர்களால் ஒரு சிறு தோல்வியைக்கூட எதிர்கொள்ள முடிவதில்லை என்றும் சிறிய தோல்வியை எதிர்கொள்ளும்போதுகூட பெரும் விரக்தி அடைவதால் ஏற்படும் மன அழுத்தத்தை சமூகவலைதளங்கள் வளர்ப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

“சாதாரண பிரச்னையைக்கூட மிகப் பெரிய பிரச்னையாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால், வெளியுலகின் மீது கோபம் ஏற்படுகிறது அல்லது தன் மேல் கோபமோ, இயலாமையோ ஏற்படுகிறது. இது வன்முறையாகவோ, தற்கொலையாகவோ மாறுகிறது” என்கிறார் டாக்டர் சிவபாலன்.

அதிகரிக்கும் மாணவர் வன்முறைகள்

தற்கொலை

பட மூலாதாரம், AURUMARCUS

தற்கொலை நிகழ்வுகள் ஒருபுறமிருக்க மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகிவருகின்றன.

ஏப்ரல் 15ஆம் தேதிகூட, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டினார். பென்சில் காணாமல் போன பிரச்னை தொடர்பாக இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.

மார்ச் மாதம் பத்தாம் தேதியன்று ஸ்ரீ வைகுண்டம் அருகே பள்ளி மாணவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட மூன்று பேரில் இரண்டு பேர் 18 வயதுக்குக் கீழே உள்ள சிறுவர்கள் எனத் தெரியவந்தது.

மாணவர்களிடம் வன்முறை ஒரு தீர்வாக விதைக்கப்படுவதுதான் இதற்குக் காரணம் என்கிறார் சுனில்குமார்.

“இந்தப் பருவத்தினர் உணர்வுரீதியாக எளிதில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்தப் பருவத்தில் முடிவுகளை எடுக்க உதவும் முன்மூளை முதிர்ச்சியற்ற நிலையில் இருக்கும். மற்றவர்களால் இவர்களை எளிதில் தூண்ட முடியும். இவர்களாலும் உணர்ச்சிகளை எளிதாகக் கையாள முடியாது. இந்தத் தருணத்தில், விளைவுகளை எதிர்நோக்காமல் எந்த முடிவையும் உடனடியாக மேற்கொள்வார்கள் (impulsive Behavier). இந்தத் தருணத்தில் வன்முறைதான் கெத்து என்பதுபோல அவர்களிடம் யாராவது சொன்னால், அதை யோசிக்காமல் செய்கிறார்கள்” என்கிறார் அவர்.

பதின்பருவ விபரீதங்களுக்குத் தீர்வுதான் என்ன?

வசந்தி தேவி

பட மூலாதாரம், Vasanthi Devi

இந்தப் பருவத்தினர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருந்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்கிறார், கல்வியியலாளரும் மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வி. வசந்திதேவி.

“பதின்பருவத்தினர் விபரீதமான முடிவுகளை எடுப்பது என்பது நமது காலத்தின் மிகப் பெரிய பிரச்னை. பதின் பருவம்தான் மிகவும் சவாலான ஒரு பருவம். இந்தப் பருவத்தில் குழந்தைகள் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு இதைப் பற்றி பெரிய புரிதல்கள் இருப்பதில்லை. ஆகவே, பள்ளிக்கூடங்களில்தான் இதற்கான விடையை அவர்கள் தேட வேண்டும். ஆனால், நம்முடைய கல்விக்கூடங்கள் அதற்கு ஏற்றவையாக இல்லை.” என கூறுகிறார் அவர்.

பதின் வயதில் தங்களுக்கு தோன்றுவதை யாரிடம் கேட்பது, யாரிடம் சொல்வது என குழப்பத்தில் உள்ளதாக அவர் கூறுகிறார். அந்த சமயத்தில், அந்தக் குழந்தைகளுக்குத் தேவை, தாம் சொல்வதை காது கொடுத்துக் கேட்கக்கூடிய, நம்பத்தகுந்த ஒரு அக்கறையான மனிதர் தான் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

“அப்படி ஒரு மனிதர் இல்லாதபோது, ஒரு நெருக்கடி ஏற்பட்டால் குழந்தைகள் விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆண் குழந்தைகளாக இருந்தால் சில சமயங்களில் வன்முறையை நாடுகிறார்கள். பெண்களாக இருந்தால், மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். உளநிலை ஆலோசகர்கள் இந்தியாவில் மிக குறைவு. ஆகவே, ஆசிரியர்களுக்குத்தான் இதுபோன்ற பதின்பருவத்தினரைக் கையாளப் பயிற்சி அளிக்க வேண்டும். எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி கண்டிப்பாகத் தேவை” என்கிறார் வசந்திதேவி.

மன அழுத்தம், தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

1990களுக்குப் பிறகு, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்த நிலையில் மாணவர்களின் நெருக்கடி வெகுவாக அதிகரித்திருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் அதிகமான சுமையை மாணவர்கள் தலையில் சுமத்த ஆரம்பித்தார்கள். இந்த காலகட்டத்துக்குப் பிறகுதான் மாணவர்களிடம் பதற்றம், மன அழுத்தம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன.

“இந்த அழுத்தத்திலிருந்து விடுபட தற்கொலையை நாடுவது, கல்வி நிறுவன சொத்துகளை அழிப்பது, வன்முறையை நாடுவது ஆகியவை ஒரு தீர்வாக அவர்கள் மனதில் படுகின்றன. இந்த விவகாரத்தில் தீர்வைத் தேடும்போது இதனையும் மனதில்கொள்ள வேண்டும்” என்கிறார் சுனில்குமார்.

இந்தியா முழுவதுமே மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், இதற்கான தீர்வை ஆலோசிக்கும் வகையில், இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் National Task Force (NTF) ஒன்றை அமைத்திருக்கிறது. இரண்டு முறை கூடி விவாதித்திருக்கும் இந்த NTF, மூன்று குழுக்களை அமைத்திருக்கிறது.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU