SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இன்றைய (25/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலின்போது அங்கு சுற்றுலா சென்றிருந்த 6 தமிழர்கள் சூழலுக்கு ஏற்ப வேகமாக, விவேகமாக எடுத்த முடிவால் உயிர் தப்பி வந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் செஞ்சியை சேர்ந்த சையத் உஸ்மான் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்கள் காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரனை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.
தாக்குதல் நடந்த அன்று, அவர்களை அழைத்துச் சென்ற குதிரைக்காரர், உங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் ஆலோசனையைக் கேட்ட உஸ்மானும் அவருடைய நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து ஓடியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி தெரிவிக்கிறது.
“சனிக்கிழமை முதல் நாங்கள் அங்கே சுற்றுலாவுக்குச் சென்றோம். முதலில் குல்மர்க், பிறகு ஶ்ரீநகர். ஞாயிறுக்கிழமை நாங்கள் அனந்த்நாக் சென்றோம். செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நாங்கள் பஹல்காமுக்கு சென்றோம்,” என்று நடந்ததை உஸ்மான் விவரித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆறு குதிரைகளில் இவர்கள் பைசரனுக்கு அன்று பகல் 12.45 மணிக்கு சென்றுள்ளனர். “நாங்கள் பனியைப் பார்க்க விரும்பினோம். அது அங்கிருந்து பக்கமாக இருந்தது. அங்கே கொஞ்சம் நேரம் செலவிட்ட பிறகு, 2 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தோம். நுழைவு மற்றும் வெளியேறும் வழி ஒரே இடத்தில்தான் அமைந்திருந்தது.
குதிரைக்காரர் ஒரு குறுகலான வழியில் எங்களை அழைத்து வந்தார். அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டின் சத்தம் கேட்டது. என் இரண்டு நண்பர்கள் அப்போது குதிரையின் மேலே அமர்ந்திருந்தனர். ஆரம்பத்தில் நாங்கள் வெடிச்சத்தம் என்று நினைத்தோம்.
ஆனால் மக்கள் கூச்சலிடவும் நிலைமை என்னவென்று புரிந்தது. எங்களை அழைத்துச் சென்ற நபர் தப்பித்து ஓடிவிடுங்கள் என்று கூறினார். நாங்கள் அங்கிருந்து வேகமாக ஓடிவந்துவிட்டோம்,” என்று நடந்ததை உஸ்மான் விவரித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை அப்போதுதான் அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்பு கடந்து வெளியேறியதாகவும் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இல்லத்தின் உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்ததாகவும் உஸ்மான் கூறியுள்ளார். பிறகு 6 பேரும் பத்திரமாக விமான நிலையம் திரும்பியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயார் – முதலமைச்சர் சித்தராமையா
மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்டப் பணிகளை உடனே தொடங்கத் தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சித்தராமையா, மலை மாதேஸ்வரா கோவிலில் ஏப்ரல் 24 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. தீவிரவாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும்.
பயங்கரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஒடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்ததாக தினத்தந்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும் மேகதாது திட்டம் குறித்துப் பேசுகையில், “மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்டப் பணிகளை உடனே தொடங்கத் தயாராக உள்ளோம். இதுகுறித்து பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினோம்” என்று அவர் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, “பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி வழங்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த நிதியை வழங்கவில்லை. இது அரசியல் பழிவாங்கும் செயல்” என்றும் சித்தராமையா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியா் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த உத்தரவின் விளைவாக சென்னையில் உள்ள வெளிநாட்டுப் பதிவு அலுவலகம் தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை கண்டறிந்து, அவா்களிடம் இந்தியாவை விட்டு வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கும் பணியை அன்றிரவே காவல்துறையினா் உதவியுடன் தொடங்கியது.
பாகிஸ்தானியா்கள் தமிழகத்துக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காக, வாகன உதிரி பாகங்கள்,தோல் பொருள்கள் தொழிலுக்காக வருவது வழக்கம். இதில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள், சென்னை, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமாா் 200 பாகிஸ்தானியா்கள் இருப்பதாகத் தெரிகிறது. சென்னையில் மட்டும் 15 பாகிஸ்தானியா்கள் இருந்தனா். இவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியா்களும், தொழில் விஷயமாக வந்திருந்த அந்த நாட்டு வியாபாரிகளும்,தொழிலதிபா்களும் உடனடியாக தங்களது நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
வெளிநாட்டு பதிவு அலுவலகம் மூலம் வழங்கப்படும் நோட்டீஸின் விளைவாக, தமிழகத்தில் இருந்த பாகிஸ்தானியா்கள் வியாழக்கிழமை முதலே அவசரம், அவசரமாக புறப்பட்டுச் செல்வதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமைக்குள் தமிழகத்திலிருந்து அனைத்து பாகிஸ்தானியா்களும் புறப்பட்டுச் சென்று விடுவாா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேஸ் பைக் ஓட்டிய 15 வயது சிறுவன் – பெற்றோர் மீது வழக்கு

பட மூலாதாரம், Getty Images
சென்னை கோயம்பேடு அருகே 15 வயது சிறுவன் ஹெல்மெட் இல்லாமல் ரேஸ் பைக் ஓட்டியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
“ஒரு சிறுவன் பைக் ஓட்டுவதைக் கண்ட பாதசாரிகள் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அளித்தனர். வண்டியின் பதிவு எண்ணை வைத்து, அவருடைய முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே சென்று விசாரித்தபோது, அந்தச் சிறுவன் கோயம்பேட்டில் இருந்து பெரம்பூரில் இருக்கும் அவருடைய பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தங்களுக்குத் தெரிந்தே அவர் பைக்கை ஓட்டிச் சென்றதாக அவரின் பெற்றோர் காவல்துறையினரிடம் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பைக்கை கைப்பற்றியதோடு, அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்,” என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
“இந்தியாவில் 18 வயதிற்குக் குறைவானவர்கள் ஏற்படும் சாலை விபத்துகள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதுவரை 2,063 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனங்கள் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர், வண்டியின் உரிமையாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ரூ.25 ஆயிரம் அபராதமும் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – நாமல் வருத்தம்

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA/FACEBOOK
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது” என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போது பேசிய அவர், “தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிகிறது. ஆனால் பகிரங்கமாக தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கு மாத காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மாத்திரம் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடிதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் இலக்காகக் கொண்டு செயற்படுகிறது?” என்று நாமல் ராஜபக்ஷ விமர்சித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகுதான் அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறதா? புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகத் தேடப்படும் பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. பாதாள குழுவினராக இருந்தாலும் அவர்களைக் கொலை செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU