SOURCE :- BBC NEWS

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 23) அறிவித்தது.

பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதெல்லாம் மோதல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து ஏன் பேசப்படுகிறது

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகள் என்ன? இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தன்னிச்சையாக விலக முடியுமா?

சர்வதேச அளவில் நதிநீரைப் பகிர்ந்து கொள்வதற்கு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் உள்பட மூன்று போர்கள் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.

உரி பயங்கரவாத தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் கூட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால் அது நடக்கவில்லை.

“இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, எந்தவொரு நாடும் தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. இரு நாடுகளும் ஒன்றுகூடி கலந்து ஆலோசித்தே இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்யலாம் அல்லது ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கலாம்” என்கிறார் பாகிஸ்தான் சிந்து நீர் ஆணையராக இருந்த ஜமாத் அலி ஷா.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

மறுபுறம், நதிநீர் பங்கீடு தொடர்பான சர்வதேச அளவில் நடந்த சர்ச்சைகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ள பிரம்மா செலானி, ‘தி இந்து’ செய்தித்தாளில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

“ஒப்பந்தச் சட்டங்களைப் பற்றிய வியன்னா ஒப்பந்தத்தின் 62வது பிரிவின்படி, பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்று கூறி இந்தியா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியும். அடிப்படை நிபந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால், எந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்யலாம் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது”, என்று அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிந்து நதி படுகை சுமார் 11.2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பாகிஸ்தானில் 47 சதவீதம், இந்தியாவில் 39 சதவீதம், சீனாவில் 8 சதவீதம் மற்றும் ஆப்கானிஸ்தானில் 6 சதவீதம் அமைந்துள்ளது.

ஒரு மதிப்பீட்டின்படி, சிந்து நதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Jamaat Ali Shah

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பின்னணி

அமெரிக்காவின் ஓரிகன் மாகாண பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.

எரான் வோல்ஃப் மற்றும் ஜோசுவா நியூட்டன் ஆகியோர் 1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்பே, குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கு இடையே மோதல் தொடங்கியது என்று தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பொறியாளர்கள் 1947 ஆம் ஆண்டில் சந்தித்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பாகிஸ்தானை நோக்கி வரும் இரண்டு முக்கிய கால்வாய்கள் தொடர்பாகவும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து தண்ணீர் வந்தது. இந்த ஒப்பந்தம் 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருந்தது.

இருப்பினும், 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று, இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், இந்தியா அந்த இரண்டு கால்வாய்களிலும் தண்ணீர் செல்வதை நிறுத்தியது. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் 1.7 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது என்று ஜமாத் அலி ஷா குறிப்பிட்டுள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

“இந்தியா தனது நடவடிக்கைகளுக்குப் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளது. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதும் அவற்றில் ஒன்று. பின்னர் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தண்ணீர் விநியோகத்தை இந்தியா தொடர்ந்தது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒரு ஆய்வின்படி, 1951 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டேவிட் லிலியன்தாலை இந்தியாவிற்கு அழைத்தார். அந்த பயணத்தின்போது டேவிட் லிலியன்தால் பாகிஸ்தானுக்கும் சென்றார்.

பின்னர், அவர் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்று சிந்து நதியின் நீரைப் பங்கிடுவது குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரை உலக வங்கியின் தலைவரும், லிலியன்தாலின் நண்பருமான டேவிட் பிளாக்கால் வாசிக்கப்பட்டது.

இது குறித்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களை டேவிட் பிளாக் தொடர்பு கொண்டார். அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த பேச்சுவார்த்தைகள் சுமார் ஒரு தசாப்தம் நீடித்தன.

இறுதியாக, 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று கராச்சியில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

  • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, சிந்து நதியின் கிளை நதிகள் கிழக்கு மற்றும் மேற்கு நதிகள் என பிரிக்கப்பட்டன. சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிகள் கிழக்கு நதிகள் எனப்படுகின்றன. ஜீலம், செனாப் மற்றும் சிந்து ஆகியவை மேற்கு நதிகள் என குறிப்பிடப்படுகின்றன.
  • ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, இந்தியா கிழக்கு நதிகளின் நீரை தாராளமாக பயன்படுத்தலாம். அதேபோல, பாகிஸ்தான் மேற்கு நதிகளின் நீரை பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த மேற்கு நதிகளிலும் இந்தியாவுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, நீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பு மற்றும் விவசாயத்திற்காக அந்த நீரைப் பயன்படுத்த முடியும். மேலும், சந்திப்புகள் மற்றும் தள ஆய்வு போன்ற ஏற்பாடுகளும் உடன்படிக்கையில் உள்ளன.
  • சிந்து நதி நீர் உடன்படிக்கையின் கீழ் ஒரு நிரந்தர சிந்து ஆணையம் நிறுவப்பட்டது. இரு நாடுகளின் ஆணையர்களும் அவ்வப்போது சந்தித்து தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இருக்கின்றது.
  • ஒரு நாடு சிந்து நதி அல்லது அதன் கிளை நதிகளில் ஏதேனும் ஒரு கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளும் போது, அந்தத் திட்டத்தின் வடிவமைப்பு தொடர்பாக மற்றொரு நாடு ஆட்சேபம் தெரிவித்தால், அத்திட்டத்தை உருவாக்கும் நாடு அந்த ஆட்சேபத்திற்கு பதிலளிக்க வேண்டும். இரு தரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆணையத்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், இரு நாடுகளின் அரசாங்கங்கள் அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
  • கூடுதலாக, ஒப்பந்தத்தில் ஏற்படும் தகராறுகளுக்கு தீர்வு காண்பதற்கு நடுநிலையான நிபுணர்களின் உதவியை நாடி தீர்வு காணலாம் அல்லது சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Reuters

ஒப்பந்தத்தின் மீதான அரசியல்

இந்தியாவை சேர்ந்த ஒரு தரப்பினர் சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். இந்த உடன்படிக்கையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் நிதி இழப்பை சந்திப்பதாக ஜம்மு காஷ்மீர் கூறுகின்றது.

“நீரை கொடுத்து அமைதியை பெரும் நோக்கத்துடன், பாகிஸ்தானுடன் இந்தியா 1960 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், 1965 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரைத் தாக்கியது” என்று பிரம்மா செலானி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் இத்தகைய குரல்கள் (ஒப்பந்தத்தை ரத்து செய்வது) ஒலித்துக் கொண்டிருந்தால், இதன் பொருள் என்ன? இந்தியா பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்துமா? பாகிஸ்தானின் நீர் பங்கீடு அதன் நதிகளுக்கு திருப்பி விடப்படுமா என்பது ஒரே இரவில் செய்யக்கூடிய திட்டமல்ல. அதற்கு திட்டமிடல் வேண்டும். அதன் பிறகு தண்ணீர் வரத்து தடுக்கப்படும். அது நடக்கவே முடியாத காரியம்,” என்று ஜமாத் அலி ஷா கூறுகிறார்.

(இக்கட்டுரை முதலில் 23 மார்ச் 2021-ல் வெளியிடப்பட்டது)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC