SOURCE :- BBC NEWS
பஹல்காம் தாக்குதல்: டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீரின் பெஹல்காமில் செவ்வாயன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பெஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெஸரன் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

தனது சௌதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
டொனால்ட் டிரம்ப்
காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் பலியான அப்பாவிகளின் இழப்புக்கு டிரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாகவும், பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்த அதிபர் டிரம்ப், இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவை தெரிவித்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், ‘ பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது. உயிரிழந்தவர்கள் ஆத்மாவுக்காகவும் காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபமும் உள்ளது’ என கூறியிருந்தார்.

விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் புதின், ‘இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது’ என கூறியுள்ளார். மேலும், ‘இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத் தயாராக உள்ளோம்’ என தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதனை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என விவரித்துள்ளார்.
அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்களின் நினைவுகளும் பிரார்த்தனையும் இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் துணை நிற்கிறது’ என தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஜே.டி. வான்ஸ்
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும் உஷாவும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலால் அவர்கள் வேதனை அடைந்திருக்கும் இந்த வேளையில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன.’ என்றார்.
முகமது பின் சல்மான்
சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த துப்பாக்கிச்சூட்டை தீவிரவாத தாக்குதல் என குறிப்பிட்டு தனது கண்டத்தை தெரிவித்துள்ளது. சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த கொடூரமான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை குற்றச்செயல் என ஐக்கிய அரபு அமீரகம் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அரசுக்கும் இந்த கொடூரமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இரானிய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், குறிப்பாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என கூறியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU