SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொடூரமான தாக்குதல், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா மீண்டு வந்துக் கொண்டிருந்த சமயத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டிய இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடைநிறுத்தி வைத்ததுடன், அட்டாரி-வாகா எல்லையை மூடியது.

இரு நாட்டு தூதரகங்களில் பணியாற்றிய அதிகாரிகளின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலளித்த பாகிஸ்தான், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் போருக்கான அறைகூவலாகவே பார்க்கப்படுவதாகவும், இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாகக் கூறியது.

பஹல்காம் தாக்குதலும், அதற்குப் பிறகான நடவடிக்கைகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தனது நடவடிக்கைகள் மூலம் இந்திய அரசாங்கம் என்ன செய்தியைக் கொடுக்க முயற்சிக்கிறது?

இந்தத் தாக்குதலுக்கு உளவுத்துறை மெத்தனப்போக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? அதேபோல, ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் உள்ளூர் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியுடன் தொடர்புள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் என்ன தாக்கம் ஏற்படும்? தாக்குதலின் எதிரொலியாக எழுந்துள்ள பதற்றம் ராணுவ நடவடிக்கையாக மாறுமா? இந்த விஷயத்தில் சீனாவின் பங்கு என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிபிசி ஹிந்தியின் ‘தி லென்ஸ்’ வாராந்திர நிகழ்ச்சியில், கலெக்டிவ் நியூஸ்ரூம் இயக்குநர் (இதழியல்) முகேஷ் சர்மா, இந்தக் கேள்விகளைப் பற்றி விவாதித்தார்.

இந்த விவாதத்தில், பிபிசி நிருபர் ஜுகல் புரோஹித், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஜம்மு காஷ்மீர் வக்ஃப் வாரியத் தலைவருமான தரக்ஷான் அந்த்ராபி மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகார நிபுணர் ராதா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில், இவற்றின் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?

“இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று இந்திய அரசாங்கம் கூற முயற்சிக்கிறது. எந்தவொரு போரின் போதும் கை வைக்கப்படாத சிந்து நதிநீர் ஒப்பந்தம் முதல்முறையாக இடைநிறுத்தப்பட்டதற்கு இதுவே காரணம்” என்று பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் கூறுகிறார்.

“பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோதி பிகாரில் பேரணியில் உரையாற்றுவதற்கு முன்பு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார். இறுதியில் அவர் தனது உரையை ஆங்கிலத்தில் முடிக்கிறார். இது, பல்வேறு மட்டங்களில் இந்திய அரசு செய்திகளை அனுப்பி வருவதைக் காட்டுகிறது. அதாவது, நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக ஆதரவு திரட்டப்படுகிறது” என்று ஜுகல் புரோஹித் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ‘ராணுவம்’ என்ற வார்த்தையை இந்தியா இதுவரை பயன்படுத்தவில்லை என்பதை ஜுகல் புரோஹித் சுட்டிக் காட்டினார்.

மேலும், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பேசியபோது, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பது குறித்து பிரதமர் பேசியிருந்தார், ஆனால் அப்படி எதையும் இம்முறை பேசிவிடவில்லை. ஆனால் அவர் நிச்சயமாக களத்தை தயார் செய்துவிட்டார் என்பதை பேரணியில் பேசிய வார்த்தைகள் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது என்று ஜுகல் புரோஹித் கூறினார்.

“இந்த சூழ்நிலையில், நிச்சயமாக ஏதாவது நடக்கும் என்றே தெரிகிறது. ஆனால், எங்கே? எந்த வடிவத்தில்? எப்போது? என்பதுதான் தெரியவில்லை” என்று ஜுகல் புரோஹித் கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

இது உளவுத்துறையின் தோல்வியா?

பஹல்காம் தாக்குதலை விமர்சிக்கும் பலர், உளவுத்துறையின் தோல்வியால்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஜம்மு காஷ்மீர் வக்ஃப் வாரியத்தின் தலைவருமான தரக்ஷான் அந்த்ராபி, “இதை உளவுத்துறை தோல்வியாகக் கருதுவது தவறு. இங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

“ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. எதிரியால் இந்த முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிலைமையை மோசமாக்க சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று எல்லை தாண்டியிருக்கும் எதிரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் சுற்றுலா உச்சத்தில் இருந்தபோது, ​​ஏதாவது செய்துக் கொண்டுதான் இருந்தார்கள்” என்று அவர் கூறுகிறார்.

குல்மார்க், பஹல்காம் மற்றும் பிற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் லட்சக்கணக்கில் வருகை தரும்போது, அங்கு பாதுகாப்புப் படையினர் இருப்பது அவர்களிடையே அச்சத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாட்டின் பல மாநிலங்களில் உள்ள காஷ்மீரிகளை வலதுசாரி அமைப்புகள் அச்சுறுத்துவதும், தாக்குதலுக்கு அவர்களையே பொறுப்பேற்கச் செய்ய முயற்சிப்பதையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “இதுபோன்ற செயல்கள் பதற்றத்தை அதிகரிக்கும், எல்லையைத் தாண்டி அமர்ந்திருக்கும் எதிரியின் விருப்பமும் இதுதான். அதனால் தான் தாக்குதல்தாரிகள், இந்து-முஸ்லீம் சாயம் அளித்துள்ளனர். இந்தக் கடினமான நேரத்தில், நாம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும், பகைமையை வளர்க்கக்கூடாது” என்று தரக்ஷான் அந்த்ராபி கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர்,

பட மூலாதாரம், Getty Images

370 விலக்கிக் கொள்ளப்பட்டதன் எதிரொலியா?

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும், சட்டப்பிரிவு 370 விலக்கிக் கொள்ளப்பட்டதால் எழுந்த அதிருப்திக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இந்தத் தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த காஷ்மீர் விவகாரங்களுக்கான நிபுணர் ராதா குமார், “இந்தத் தாக்குதல் சட்டப்பிரிவு 370 உடன் தொடர்புடையது என்று தோன்றவில்லை. சுற்றுலாப் பயணிகளை கல்மா ஓதச் சொல்லி, இந்துவா என்று கேட்டு பின்னர் கொன்ற விதம், அவர்களின் நோக்கம் மதத்தின் அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்துவதுதான் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. நாட்டில் இப்போது மதரீதியிலான பிரிவினைவாதத்தை உருவாக்க இந்தத் தாக்குதலை பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள் என்று நினைக்கிறேன்.”

“அமெரிக்க துணை அதிபர் இந்தியாவில் இருந்த நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்னை சர்வதேச அளவில் பேசுபொருளாக இல்லை என்பதால், அதற்கான கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம்.” என்று ராதா குமார் கூறுகிறார்.

அனைத்து கட்சிக்கூட்டத்தில், தாக்குதல் நடைபெறலாம் என்று உளவுத்துறையிடம் தகவல் இருந்தது தெரியவந்துள்ளதாக ராதா குமார் கூறுகிறார்.

”பைசரன் பள்ளத்தாக்கு ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகுதான் சுற்றுலாவுக்காக திறக்கப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அங்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கலாம் என்று யூகித்திருக்க வேண்டும். எனவே உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்று சொல்லிவிட முடியாது.” என்கிறார் அவர்

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது உட்பட இந்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பான உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு ” சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பற்றி மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக அரசு நீண்ட காலமாக யோசித்துவருகிறது. அதனால்தான் இந்த வாய்ப்பை அதற்கான சந்தர்ப்பமாக பாஜக அரசு பயன்படுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது” என்று ராதா குமார் கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர்,

பட மூலாதாரம், Getty Images

இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் சாத்தியங்கள் யாவை?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, டெல்லி வரை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ராணுவ நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்தியாவும் இந்தத் திசையில் நகர முடியுமா?

“கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற ஊகத்தைக் கொடுக்கிறது. ஆனால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவுகின்றன” என்று ஜுகல் புரோஹித் கூறுகிறார்.

அடுத்த சில நாட்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் என்ன செய்யப் போகின்றன என்பதை கவனமாகப் பார்க்கவேண்டும் என்று புரோஹித் கூறுகிறார்.

“நடவடிக்கை எடுப்போம் என்று இந்தியத் தரப்பு கூறுகிறது. ஆனால் அதற்கு முன், எதிர்தரப்பு என்ன செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்த முறை நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் போரைத் தொடங்குவது எளிது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவருவது யாருடைய கைகளிலும் இல்லை” என்று ஜுகல் புரோஹித் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர்,

பட மூலாதாரம், ANI

காஷ்மீரில் எதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் காஷ்மீரை எவ்வாறு பாதிக்கும்?

“2019 ஆம் ஆண்டில், ஆலோசிக்கப்படாமலேயே ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது. இது குறித்த கோபம் அங்கு இருக்கும். போராட்டங்களும் தடை செய்யப்பட்டன” என்று கூறும் ராதா குமார், “மக்கள் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்து, வகுப்புவாதம் மற்றும் வன்முறையை முழுமையாக எதிர்த்த விதத்தையும் கவனிக்க வேண்டும், இதுபோன்ற சூழ்நிலையில் அரசாங்கம் அமைதியைப் பற்றிப் பேசத் தொடங்குவதற்கு ஒரு பெரிய வாய்ப்பும் உள்ளது” என்கிறார்.

காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கும், காஷ்மீர் தலைவர்களுடன் அமர்ந்து பேசி, மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவதன் மூலம் அமைதிக்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று ராதா குமார் கூறுகிறார்.

“இந்த வாய்ப்பை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்தினால், நாடு முழுவதும் பரவி வரும் வகுப்புவாதத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்று ராதா குமார் கூறுகிறார்.

காஷ்மீர் மாணவர்களுக்கு நடக்கும் சம்பவங்களைப் பொறுத்தவரை, 2010 ஆம் ஆண்டிலும் இதையே பார்த்தோம் என்று அவர் கூறுகிறார்.

”அந்த நேரத்தில், எனது ஆலோசனையின் பேரில், உள்துறை அமைச்சர் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக எந்த பாரபட்சமான சம்பவமும் நடக்கக்கூடாது என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அதற்குப் பிறகு, காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான சம்பவங்கள் கணிசமாக குறைந்தது. தற்போதும் உள்துறை அமைச்சர் அதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று ராதா குமார் கூறுகிறார்.

ராதா குமாரின் கருத்துக்குப் பதிலளிக்கும் தரக்ஷான் அந்த்ராபி, “மாணவர்களுக்கு எதிரான சம்பவங்களுக்குப் பிறகு, பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் காவல்துறை இயக்குநர்களுடன் பேசப்பட்டது. காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது” என்று கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர்,

பட மூலாதாரம், JKSA

இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அண்டை நாட்டுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஜுகல் புரோஹித், “இந்த நேரத்தில், இரு நாடுகளும் வெளியிடும் அறிவிப்புகள், நடவடிக்கைகள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்று சொல்வது கடினம்” என்று கூறுகிறார்.

பத்திரிகையாளர் என்ற முறையில், இரு நாடுகளின் படைகளும் என்ன செய்கின்றன என்பதைக் கண்காணித்து வருவதாக கூறும் ஜுகல் புரோஹித், இந்திய ராணுவம் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறதா? ராணுவத் தளபதி எங்கே போகிறார்? என்பது போன்ற ஒவ்வொரு விஷயமும் முக்கியத்துவமானது என்று கூறுகிறார்.

“அரசு, ராணுவம் மற்றும் ராஜ்ஜீய நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஏனென்றால், இந்தத் தாக்குதல், உரி மற்றும் பாலகோட் போன்ற தாக்குதல்களின் வரிசையில் பார்க்கவேண்டும்” என்று ஜுகல் புரோஹித் கூறுகிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சுற்றுலாத்துறையில் என்ன தாக்கம் இருக்கும் என்பதையும் கண்காணித்து வருவதாக கூறும் ஜுகல் புரோஹித், 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய எழுச்சி காணப்பட்டது என்கிறார்.

“இந்த நேரத்தில் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. சுற்றுலா முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வியும், அமர்நாத் யாத்திரை பாணியில் சுற்றுலா அனுமதிக்கப்பட வேண்டுமா? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் முக்கியமானவை. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பகுதி திறக்கப்பட வேண்டும். சுற்றுலா எதிர்காலத்தில் ஒரு பெரிய துறையாக இருக்கும் என்பதால் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதைப் பார்ப்போம்” என்று புரோஹித் கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

பாஜக மீதான குற்றச்சாட்டு என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாஜகவின் ஒரு மாநில பிரிவின் சமூக ஊடகப் பக்கத்தில் “எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு கொன்றுள்ளனர்” என்று எழுதப்பட்டது. அதனையடுத்து, இந்தத் தாக்குதலை இந்து-முஸ்லீம் கோணமாக மாற்றிவிட்டதாக பாஜக மீது குற்றம் சாட்டப்படுகிறது.

“அப்படி எதுவும் இல்லை. இந்தத் தாக்குதலில் காஷ்மீரிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எல்லையைத் தாண்டியவர்களே தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர். இது எங்களுக்கு துரதிர்ஷ்டவசமானது” என்று தரக்ஷான் அந்த்ராபி கூறுகிறார்.

இந்து-முஸ்லீம் கோணத்தில் விஷயத்தைக் கொண்டு சென்றதற்கு பாஜக அல்லது அரசாங்கத்தின் பங்கு ஏதும் இல்லை என்றும், பாஜகவும் அரசாங்கமும் அதிலிருந்து விலகி இருப்பதாகவும் தரக்ஷான் அந்த்ராபி தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU