SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
47 நிமிடங்களுக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பாகிஸ்தானுடனான அனைத்து வகையான இறக்குமதிகளையும் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அதாவது டிஜிஎஃப்டி (DGFT) முற்றிலுமாக தடை செய்துள்ளது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்று கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன, அவற்றில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததும் அடங்கும்.
இதன் பின்னர், “மறு உத்தரவு வரும் வரை, பாகிஸ்தானில் இருந்து நேரடியாக மற்றும் மறைமுகமாக செய்யப்படும் அனைத்து வகையான இறக்குமதிகளுக்கும் உடனடியாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று மே 2 அன்று டிஜிஎஃப்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
சனிக்கிழமை (மே 3), கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், “இந்த உத்தரவு 1958 வணிகக் கப்பல் சட்டத்தின் பிரிவு 411-ஐப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கப்பல் இந்திய துறைமுகத்திற்குள்ளும் நுழைய அனுமதிக்கப்படாது. இந்திய கப்பலும் பாகிஸ்தானில் உள்ள எந்த துறைமுகத்திற்கும் செல்லாது” என்று கூறியது.

அதேபோல சனிக்கிழமை, பாகிஸ்தானுடனான அனைத்து அஞ்சல் மற்றும் பார்சல் பரிமாற்றங்களையும் நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது.
சேவைகளை நிறுத்துவதற்கான உத்தரவை தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை பிறப்பித்துள்ளது.
அஞ்சல் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, “பாகிஸ்தானில் இருந்து வான் மற்றும் தரைவழியாக வரும் அனைத்து அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளையும் நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.”
ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
வர்த்தகத்தில் தொடர்ச்சியான சரிவு

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், வர்த்தகத்தைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியாகவே இந்தியாவும் பாகிஸ்தானும் மிக நெருக்கமாக இருந்ததில்லை.
குறிப்பாக கடல் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்த உறவு வரம்புக்குட்பட்டதாகவும் ஒரு அடையாள நோக்கத்திற்காக மட்டுமே இருந்து வருகிறது.
இரு நாடுகளும் அரபிக் கடல் வழியாக கடல்சார் வர்த்தகத்தை மேற்கொள்கின்றன.
ஆனால் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் ராஜதந்திர பதற்றங்கள், பெரும்பாலும் இருநாட்டு வணிகக் கப்பல்களை பரஸ்பர நாட்டின் துறைமுகங்களிலிருந்து விலக்கியே வைத்திருக்கின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகத்தில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளதையும் தரவுகள் காட்டுகின்றன.
இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின்படி, ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை, இந்தியா பாகிஸ்தானிலிருந்து நான்கு லட்சத்து 20 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
அதேசமயம், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், அதாவது ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை, இந்தியா பாகிஸ்தானிலிருந்து சுமார் 28 லட்சத்து 60 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
ஏற்றுமதியைப் பற்றிப் பேசுகையில், ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 447.65 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.
இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் (ADGFT) அஜய் ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு அடையாளப்பூர்வமானது என்று கூறினார்.
“2019-ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு 200 சதவீத வரி விதித்தது” என்று அவர் கூறினார்.
“பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் இறக்குமதி நான்கு லட்சம் டாலர்களாகக் குறைந்திருந்தது, இப்போது அது பூஜ்ஜியமாகிவிடும். இந்திய மக்கள் பாகிஸ்தான் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை. இதில் கல் உப்பு தவிர வேறு எதுவும் பாதிக்கப்படாது” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
இந்தியா பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்களில் தாமிரம், தாமிரப் பொருட்கள், பருத்தி, பழங்கள், உப்பு, கரிம ரசாயனங்கள், கம்பளி ஆகியவை அடங்கும்.
இந்தியா பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருட்களில் பருத்தி, கரிம வேதிப்பொருட்கள், காபி, தேநீர், மசாலாப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பால் பொருட்கள், மருந்துகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கால்நடை தீவனம் ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
பாகிஸ்தானுடனான 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானும் பதிலளித்துள்ளது.
இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளது. மேலும், வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது.
சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர, சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது, மேலும் இவை ரத்து செய்யப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU