SOURCE :- BBC NEWS
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
20 டிசம்பர் 2024
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ, கடந்த 2018ஆம் ஆண்டில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி காதலி ‘ஹட்சுனே மிக்குவை’ கரம்பிடித்தபோது, அந்தத் திருமணம் உலகம் முழுவதும் பேசுபொருளானது.
சமீபத்தில், அவர் தனது மனைவியுடன் ஆறாவது திருமண நாளைக் கொண்டாடியதும் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தது.
ஜப்பானை சேர்ந்த ஒருவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வதிலோ அல்லது தனது திருமண நாளைக் கொண்டாடுவதிலோ என்ன இருக்கிறது, இது ஏன் செய்திகளில் இடம்பிடித்தது என்று நீங்கள் நினைக்கலாம்.
அதற்குக் காரணம், அவரது மனைவி ஹட்சுனே மிக்கு, ஒரு அனிமே கதாபாத்திரம். இன்னும் சொல்லப்போனால் அவர் திருமணம் செய்தது, மிக்குவின் முழு உருவ பொம்மையைக்கூட அல்ல, ஒரு முப்பரிமாண ஹோலோகிராம் பிம்பம் மட்டுமே.
மென்பொருளின் உதவியோடு அந்த பிம்பம் அவருடன் பேசியது. அதாவது அமேசானின் அலெக்ஸா (Alexa) அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri) போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஹட்சுனே மிக்குவுடன் உரையாடி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார் அகிஹிகோ கோண்டோ.
ஜப்பானை சேர்ந்த ‘கேட்பாக்ஸ் (Gatebox)’ என்ற நிறுவனம்தான் இந்த ஹோலோகிராமை தயாரித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அந்நிறுவனம் ‘ஹட்சுனே மிக்கு’வுக்கான மென்பொருளை கைவிட்டது.
முன்னர் போல, மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்தக் கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார். கோண்டோ தன்னை ஒரு ‘ஃபிக்டோசெக்ஷூவல்’ (Fictosexual) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதாவது கற்பனை கதாபாத்திரங்கள் (Fictional characters) மீது ஈர்ப்பு கொள்பவர்கள்.
தன்னுடைய இந்த வாழ்க்கை முறை காரணமாகப் பலரும் தன்னை வெறுத்ததாகவும், குடும்பத்தினர்கூட இதுவொரு ‘உளவியல் கோளாறு’ என நினைத்ததாகவும் ஊடக நேர்காணல்களில் கோண்டோ தெரிவித்திருந்தார். அதேநேரம் இத்தகைய பாலின ஈர்ப்பு, நிச்சயமாக ஒரு ‘உளவியல் கோளாறு’ அல்ல.
‘உளவியல் சார்ந்தது அல்ல’
அமெரிக்க மனநல சங்கத்தின் (American Psychiatric Association- ஏபிஏ) உளவியல் கோளாறுகளை வகைப்படுத்துவதற்கான கையேட்டில் ‘ஃபிக்டோசெக்ஷூவல்’ மனநோயாக வகைப்படுத்தப்படவில்லை.
ஏபிஏ என்பது அமெரிக்காவில் உளவியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அறிவியல் மற்றும் தொழில்முறை அமைப்பாகும். 132 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பில், 157,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay), இருபாலின ஈர்ப்பு (Bisexual), பாலின ஈர்ப்பு இல்லாமை (Asexual) எனப் பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள் உள்ளன. அவற்றையும் அமெரிக்க மனநல சங்கம் எந்தவித உளவியல் பிரச்னையாகவும் அடையாளப்படுத்தவில்லை. அவை மனிதர்களின் இயல்பான குணங்கள்தான் என ஏபிஏ கூறுகிறது.
பாலின ஈர்ப்பு என்றால் என்ன?
பாலின ஈர்ப்பு (Sexual orientation) என்பது ஒருவரின் உணர்ச்சி, காதல் அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புகளின் நீடித்த வடிவத்தைக் குறிப்பதாக அமெரிக்க மனநல சங்கம் கூறுகிறது.
எளிமையாகச் சொன்னால், குயர் சென்னை கிரானிக்கிள்ஸ் கையேட்டின்படி, ஒரு நபர், எந்த நபர்கள் அல்லது பாலினங்களுடன் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக அல்லது காதல் சார்ந்து ஈர்க்கப்படுகிறார் என்பதே பாலின ஈர்ப்பு.
பாலின ஈர்ப்பும் பாலின அடையாளமும் (Gender identity) ஒன்றல்ல. பிறப்பின்போது வழங்கப்படுகிற பாலினத்தைச் சார்ந்த வழமைகள், நடத்தைகள், பாலின பங்களிப்பு ஆகியவற்றை வைத்து சமூகம் ஒரு நபரைப் பார்க்கும் விதமே பாலினம் (Gender) எனப்படும்.
ஆனால், ஒரு நபர் தனது பாலினத்தை எவ்வாறு வரையறுக்கிறார் என்பதே பாலின அடையாளம். இந்த பாலின அடையாளம் என்பது பிறப்பின்போது வழங்கப்படுகின்ற பாலினம் சார்ந்த வழமைகள் மற்றும் சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பைப் பொறுத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள்
பொதுவாக ஒருவரின் பாலின ஈர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியக் கூறுகள் வளரிளம் பருவத்தின் தொடக்கத்தில் வெளிப்படுகின்றன என்றும் உணர்ச்சி, காதல் மற்றும் பாலியல் ஈர்ப்பின் இந்த வடிவங்கள் எந்தவொரு பாலியல் முன் அனுபவமும் இல்லாமல்கூட எழலாம் என்றும் ஏபிஏ கூறுகிறது.
அதேபோல, ஒருவரின் பாலின ஈர்ப்பை மாற்றுவதற்கு, அறிவியல் ரீதியாகப் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதும் இல்லை எனக் கூறும் அமெரிக்க மனநல சங்கம், அத்தகைய சிகிச்சைகளை ஊக்குவிப்பது தன்பாலின மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகிறது.
ஊடகங்கள், பொழுதுபோக்குத்துறை மற்றும் சமூகத்தில் பால் புதுமையினருக்கான (LGBTQ+) முறையான பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கிளாட் அமைப்பு செயல்படுகிறது.
பாலின ஈர்ப்பு வகைகள்
கிளாட் அமைப்பின் விளக்கப்படி,
எதிர்பாலீர்ப்பு (Hetrosexuality)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் வரும் பாலீர்ப்பு பொதுவாக எதிர்பாலீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் இதில் அடங்கும்.
தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay)
தங்களுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ஈர்ப்பு கொள்வது தன்பாலின ஈர்ப்பு அல்லது ஒருபாலீர்ப்பு எனப்படும். இதிலும் பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் உண்டு.
இருபாலின ஈர்ப்பு (Bisexual)
தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ரீதியாகவோ, காதல் அல்லது உணர்வு ரீதியாகவோ ஈர்ப்பு கொள்பவர்கள் இதில் அடங்குவார்கள். ஆனால் இந்த இருபாலினத்தவர்கள் மீதான ஈர்ப்பு என்பது ஒரே நேரத்தில், ஒரே விதத்தில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.
எதிர்பாலீர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு, மற்றும் இருபாலின ஈர்ப்பு, இவை அனைத்துமே மனித பாலுணர்வின் இயல்பான அம்சங்கள் என்றும், இவை பல்வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஏபிஏ கூறுகிறது.
அனைத்துப் பாலின ஈர்ப்பு (Pan sexual)
பாலின அடையாளத்திற்கு அப்பாற்பட்டு அல்லது அனைத்து பாலினங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வரக்கூடிய ஈர்ப்பு ‘அனைத்துப் பாலின ஈர்ப்பு’ எனப்படும். அதேநேரம் அனைத்து பாலினங்களின் மீதும் ஒரே மாதிரியான அல்லது ஒரே அளவிலான ஈர்ப்பு இருக்கும் என்று கூற முடியாது.
அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், அமெரிக்க பாடகி மற்றும் நடிகை ஜானெல்லே மோனே ராபின்சன், பிரிட்டன் நடிகை காரா ஜோஸ்லின் டெலிவிங்னே, உள்படப் பல பிரபலங்கள் தங்களை ‘அனைத்துப் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள்’ என பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.
பாலீர்ப்பு இல்லாமை (Asexual)
யார் மீதும் பாலின ஈர்ப்பு இல்லாத நபர்களைக் குறிக்க ‘பாலீர்ப்பு இல்லாமை’ என்ற சொல் பயன்படுகிறது. அதேநேரம், எவரின் மீதும் காதல் அல்லது உணர்வு ரீதியான ஈர்ப்பு கொள்ளாத நபர்களைக் குறிக்க ஏரோமான்டிக் (Aromantic) என்ற சொல் பயன்படுகிறது.
இதில் ‘பாலீர்ப்பு இல்லாத’ நபர்கள், ஏரோமான்டிக் நபர்களாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பாலீர்ப்பு அல்லாத காதல் ஈர்ப்பு மட்டும் இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல ஏரோமான்டிக் நபர்கள் பாலியல் ஈர்ப்பு கொண்டவர்களாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
குயர் (Queer)
எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும் அல்லது பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களையும் குறிக்க ‘குயர்’ என்ற வார்த்தை பயன்படுகிறது. கடந்த காலங்களில், சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவராதவர்களுக்கான அவச்சொல்லாக இது இருந்தது. ஆனால், இப்போது பால் புதுமை சமூகத்தினர் (LGBTIQA+) தங்களை வரையறுத்துக் கொள்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஆன்ரோசெக்ஷுவல் மற்றும் கைனேசெக்ஷுவல்
ஆன்ரோசெக்ஷுவல் (Androsexual) என்பது ஆண்மை (Masculinity) என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது காதல், அழகியல் அல்லது பாலினரீதியிலான ஈர்ப்பு கொள்பவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது.
அதேபோல பெண்மை என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது ஈர்ப்பு கொள்பவர்களை கைனேசெக்ஷுவல் (Gynesexual) என்று குறிப்பிடுவார்கள்.
மேலே குறிப்பிட்டவை தவிர்த்து, சில பாலின ஈர்ப்புகள் இன்னும் பரவலாக அறியப்படவில்லை என்றாலும், இணையத்தில் அவை குறித்து விவாதங்கள் எழுவதைக் காணலாம். அதில் குறிப்பிடத்தக்க சில,
ஃபிக்டோசெக்ஷூவல் (Fictosexual)
புத்தகங்கள், அனிமேக்கள், வீடியோ கேம்கள் அல்லது திரைப்படங்களின் கற்பனை கதாபாத்திரங்கள் மீது காதல் அல்லது பாலின ஈர்ப்பு கொண்டிருப்பவர்களை இவ்வாறு விவரிக்கிறார்கள்.
சேபியோசெக்ஷுவல் (Sapiosexual)
உடல் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், புத்திசாலித்தனம் அல்லது மதிநுட்பத்திற்காக ஒருவர் மீது ஈர்ப்பு கொள்ளும் நபர்களை விவரிக்க இந்தச் சொல் பயன்படுகிறது.
லித்தோசெக்ஸுவல் (Lithosexual)
லித்தோசெக்ஸுவல் என்பது, ஒரு நபர், மற்றவரிடம் காதல் அல்லது பாலின ஈர்ப்பைக் கொண்டிருப்பார், ஆனால் அதே ஈர்ப்பையோ அல்லது காதலையோ தான் விரும்பும் நபரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். இந்த வகையான ஈர்ப்பைக் கொண்டிருப்பவர்கள், தான் விரும்பும் நபருடன் உடல் ரீதியிலான அல்லது உணர்வு ரீதியிலான இணைப்பு ஏற்படுத்துவது குறித்துக் கவலைகொள்ளமாட்டார்கள்.
பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகள் குறித்த சமூகப் பார்வை
“இதுபோன்ற பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை ஏற்றுக்கொள்வதிலும், அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் சமூகத்தில் உள்ளன. ஆனால், எந்த வகையான பாலின ஈர்ப்பாக இருந்தாலும், அதில் ஒருவரின் ‘சம்மதம்’ (Consent) என்பது மிகவும் முக்கியம்” என்கிறார் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அமைப்பைச் சேர்ந்த மௌலி.
இந்த அமைப்பு, ஒரு சுயாதீன பதிப்பகமாகவும் இலக்கியக் குழுவாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறும் மௌலி, “பால் புதுமை (LGBTIQA+) எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மீது சமூகத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்” என்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸில் பாலின ஈர்ப்பு சார்ந்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களை தன்பாலின ஈர்ப்பு அல்லது இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
அதில், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 1.5 சதவீதத்திற்கும் அதிகமானோர் (7,48,000 பேர்) தன்பாலின ஈர்ப்பு கொண்டதாகவும், 6,24,000 பேர் (1.3%) இருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
மேலும், சுமார் 1,65,000 பேர், தாங்கள் பிற பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள், அதாவது தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு, அனைத்துப் பால் ஈர்ப்பு தவிர்த்த பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள் எனத் தெரிவித்தனர். சுமார் 2,62,000 பேர் (0.5%) பிறப்பில் பதிவு செய்யப்பட்ட பாலினத்தில் இருந்து தங்களுடைய பாலின அடையாளம் வேறுபட்டுள்ளதாகக் கூறினர்.
“எதிர்பால் ஈர்ப்பு தவிர்த்து பிற பாலின ஈர்ப்புகளை இந்தச் சமூகம் அந்நியமாகப் பார்க்கிறது. இதில் இருவரின் சம்மதம் என்பது உறுதி செய்யப்படும்போது, அவர்களை கண்ணியத்தோடும், விருப்பப்படியும் வாழ அனுமதிக்க வேண்டும்” என்கிறார் மௌலி.
“ஆனால் அந்த அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய சூழல்தான் இன்றும் நம் சமூகத்தில் நிலவுகிறது” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC