SOURCE :- BBC NEWS
- எழுதியவர், சஞ்சய தகல்
- பதவி, பிபிசி நேபாளி சேவை, லும்பினியில் இருந்து
-
16 ஜனவரி 2025
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தரின் பிறந்த இடமான லும்பினி, 1997ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மரபுச் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், விரைவில் அழியும் நிலையிலுள்ள மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் நிலவுகிறது.
புனித யாத்திரையின் மையத்தில் இருக்கும் மாயா தேவி கோவிலின் உள்ளே ஓர் அடையாளக் கல் அமைந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் இங்குதான் பிறந்தார் என்று பௌத்தர்கள் நம்பும் இடத்தை அது குறிக்கிறது.
கொரியா, பிரான்ஸ் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த மதத்தினரால் கட்டப்பட்ட 14 மடாலயங்களால் இது சூழப்பட்டுள்ளது. இந்த மதம் உலகில் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதற்கு இதுவொரு சான்று.
“உலகம் முழுவதும் இருந்து மக்கள் இங்கு அமைதியைத் தேடி வருகிறார்கள்,” என்று சிங்கப்பூர் மடாலயத்தின் துறவி கென்போ ஃபுர்பா ஷெர்பா, பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.
ஆனால் கோடை மாதங்களில் கோவில்களுக்குச் செல்வது சவாலானதாக இருக்கும் என்றார் அவர்.
“ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உள்ளே இருக்க முடியாது. ஏனெனில், அந்த இடம் மிக வெப்பமாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதால் மூச்சு முட்டுவதைப் போல் இருக்கும்.”
ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய மரபுச் சின்னங்களின் பட்டியலில் லும்பினியை சேர்க்க யுனெஸ்கோ பரிந்துரைத்தமைக்கு கோவிலுக்குள் உள்ள சூழ்நிலைகளும் ஒரு காரணம்.
தளத்தின் முக்கிய அம்சங்களில் காணப்படும் சீரழிவானது, பராமரிப்பு இல்லாத நிலையைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகிறது.
காற்று மாசுபாடு, வணிக வளர்ச்சி, தொழில்துறை பகுதிகள், தவறான மேலாண்மை ஆகியவை இந்த இடத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களாக இருப்பதாக யுனெஸ்கோ தெரிவிக்கிறது.
ஆனால், நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற தளத்தை மீட்டெடுக்க அதிக கால அவகாசம் வழங்க ஐநா கலாசார முகமை முடிவு செய்துள்ளது. அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய 2025 பிப்ரவரி 1ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
கசியும் கூரை, வாடிய நிலையில் தாவரங்கள்
ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் யாத்ரீகர்கள் இந்தப் புனித தலத்திற்கு வருகிறார்கள். ஆனால், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் மாசுபட்ட காற்று, குவிந்திருக்கும் குப்பைகளின் துர்நாற்றம், நீர் தேங்கி நிற்கும் தோட்டங்களின் துர்நாற்றம் ஆகியவற்றால் தாங்கள் அதிருப்தி அடைந்ததாகப் பலர் கூறுகிறார்கள்.
யாத்ரீகர்களுக்கு வரைபடங்கள் மற்றும் தகவல்களை அதிகாரிகள் வழங்க வேண்டும். தகவல் எதுவுமின்றி நாங்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது,” என்று இந்தியாவை சேர்ந்த யாத்ரீகரான பிரபாகர் ராவ் பிபிசியிடம் கூறினார்.
ஏற்பாடுகள் இன்னும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று யாத்ரீகர்கள் மட்டும் கருதவில்லை. உள்ளூர் டாக்ஸி ஓட்டுநரான மனோஜ் செளத்ரியும் இதுகுறித்து கவலையில் உள்ளார்.
“தவறான நிர்வாகத்தைப் பார்த்து நான் கோபமாக இருக்கிறேன். சேகரிக்கப்படாமல் கிடைக்கும் இந்தக் குப்பைகளைப் பாருங்கள்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
கூரை கசிவு மற்றும் தரையில் இருந்து நீர் புகுவது ஆகியவற்றால் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது. பழங்கால செங்கற்கள் பூஞ்சை பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த ஆண்டு இங்கு வருகை தந்தபோது நட்ட மரக்கன்றுகூட வாடி வருகிறது.
மாயா தேவி கோவிலிலும் அதைச் சுற்றியும் நீர் புகுந்து இருப்பதன் காரணமாக ஏற்பட்டுள்ள ஈரப்பதம் நிறைந்த சூழலால் அந்தத் தலத்திற்கு ஏற்பட்ட சேதம், யுனெஸ்கோ இந்த இடத்தை அழியும் ஆபத்தில் இருக்கும் மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கும்படி பரிந்துரைப்பதற்கான காரணங்களில் ஒன்று.
ஆனால், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பெரிய அளவிலான சுற்றுலா திட்டங்கள், யாத்திரைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றால் அந்த இடத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் யுனெஸ்கோ கவலைப்படுகிறது.
மாயா தேவி கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 5,000 பேர் தங்கக்கூடிய ஒரு தியான மற்றும் நினைவு மண்டபம் 2022ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டம் அந்த இடத்தின் சிறந்த உலகளாவிய மதிப்பு (Outstanding Universal Value, OUV) மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. சிறந்த ஒ.யு.வி காரணமாகவே இந்தத் தலம் உலக பாரம்பரிய மரபுச் சின்ன பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டில், நேபாள அரசு மற்றொரு லட்சிய திட்டத்தை அறிவித்தது. அதாவது, 760 மில்லியன் டாலருக்கும் அதிகமான (600 மில்லியன் பவுண்ட்) வெளிநாட்டு முதலீட்டுடன் லும்பினியை “உலக சமாதான நகரமாக” மேம்படுத்துவது. யுனெஸ்கோ உள்பட உலகம் முழுவதும் எழுந்த பரவலான எதிர்ப்புக்குப் பிறகு இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது.
“லும்பினி உலக சமாதான நகர திட்டம், அந்தத் தலத்தின் சிறந்த உலகளாவிய மதிப்பு மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் இருந்தன” என்று யுனெஸ்கோ 2022இல் தனது அறிக்கையில் தெரிவித்தது.
உலக மரபுச்சின்ன பட்டியல் என்றால் என்ன?
யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்ன பட்டியலில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் லும்பினியும் ஒன்று. கிழக்கு ஆப்பிரிக்காவின் செரெங்கெட்டி, எகிப்தின் பிரமிடுகள், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், லத்தீன் அமெரிக்காவின் பரோக் கதீட்ரல்கள் ஆகியவை பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தனித்துவமான, இயற்கையான மற்றும் பாரம்பரிய மரபுச் சின்னங்களை உள்ளடக்கிய பட்டியலில் உள்ளன.
மனித குல மேன்மையை ஊக்குவிக்கும் தனிச்சிறப்புள்ள உலகளாவிய மதிப்புகொண்ட (OUV) இடங்களை, உலக பாரம்பரிய மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ வரையறுக்கிறது. மேலும், எதிர்கால சந்ததியினர் பார்த்து மகிழவும், அவற்றை அனுபவிக்கும் விதமாகவும் அவை பாதுகாக்கப்பட வேண்டிய தலங்களின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
உலக மரபுச் சின்னப் பட்டியலில் ஓர் இடம் சேர்க்கப்பட்டதற்கான பண்புகளை அச்சுறுத்தும் நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதும், அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதை ஊக்குவிப்பதும், அழியும் ஆபத்தில் உள்ள உலக மரபுச் சின்னங்களின் பட்டியலின் நோக்கமாக உள்ளது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 50க்கும் மேற்பட்ட இடங்கள் அழியக்கூடிய ஆபத்தில் இருக்கும் பட்டியலில் உள்ளன.
அழிந்து வரும் மரபுச் சின்ன தளமாகப் பெயரிடப்படுவது, சர்வதேச அளவில் மீட்டெடுப்பு நடவடிக்கைகளைத் தூண்டும் பொருட்டு செய்யப்படும் நடவடிக்கையாகும் என்று யுனெஸ்கோ பிபிசிக்கு அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“யுனெஸ்கோ மற்றும் அதன் கூட்டாளர்களிடம் இருந்து நிதி உதவிக்கான கதவைத் திறக்கும் ஒரு பிரத்யேக செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு இது தூண்டும். அதை அழியும் நிலைக்குத் தள்ளக்கூடிய ஆபத்து நீங்கியதும், அந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்படலாம்” என்றும் யுனெஸ்கோ தெரிவித்தது.
ஆனால் லும்பினியை அழியும் நிலையில் உள்ள உலக மரபுச் சின்ன பட்டியலில் சேர்ப்பது “மிகவும் வருத்தம் அளிக்கும் சூழ்நிலை” என்று லும்பினி வளாகத்திற்குள் உள்ள ராஜ்கியா பௌத்த மடாலயத்தின் தலைமை பூசாரி சாகர் தம்மா தெரிவித்தார்.
“தங்கள் ஆன்மீக ஆசிரியரின் பிறந்த இடம் அழிந்து வரும் பாரம்பரிய தலமாகப் பெயரிடப்படும் அபாயத்தில் உள்ளது என்பது உலகெங்கிலும் உள்ள 50 கோடிக்கும் அதிகமான பௌத்தர்களுக்கு அவமானகரமான விஷயம்” என்று தம்மா பிபிசியிடம் கூறினார்.
ஆனால், ஆபத்தில் உள்ள உலக மரபுச் சின்ன பட்டியலில் லும்பினி சேர்க்கப்பட்டுவிட்டால், அது உலக பாரம்பரிய மரபுச் சின்ன பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பது கிடையாது.
“ஓர் இடம் தனது தனிச்சிறப்புள்ள உலகளாவிய மதிப்பை (ஒயுவி) உண்மையிலேயே இழக்கும்போதுதான் அது உலக மரபுச் சின்ன பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆனால், இந்த நிலைமை மிகவும் அரிதானது. 1972 முதல் மூன்று இடங்களுக்கு மட்டுமே இது நடந்துள்ளது” என்று யுனெஸ்கோ பிபிசிக்கு அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லும்பினியில் என்ன நடந்தது?
கடந்த 1978ஆம் ஆண்டில், ஐ.நா.வும் நேபாள அரசும் லும்பினி மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்தன. மாயா தேவி கோவிலின் மறுசீரமைப்பு, மடாலய மண்டலம் அமைத்தல், ‘ஆன்மீகம், அமைதி, உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் சூழலை’ உருவாக்கும் குறிக்கோளுடன் ஒரு கிராமத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, லும்பினி 1997இல் உலக பாரம்பரிய மரபுச் சின்ன பட்டியலில் சேர்க்கப்பட்டது.
“தற்போது நீங்கள் பார்க்கும் மாயா தேவி கோவிலை நாங்கள் மீண்டும் கட்டியபோது யுனெஸ்கோவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்போடு பணியாற்றினோம்,” என்று லும்பினியின் முன்னாள் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் பசந்த் பிதாரி கூறினார்.
நேபாள அரசின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவரான கோஷ் பிரசாத் ஆச்சார்யாவும் லும்பினிக்கு பாரம்பரிய மரபுச் சின்ன அந்தஸ்தை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டார்.
“ஆனால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் அதன் பராமரிப்பு மற்றும் சீரமைப்பில் நாம் தீவிரமாக ஈடுபடவில்லை என்று கருதுகிறேன்,” என்று ஆச்சார்யா பிபிசியிடம் கூறினார்.
“இது நிதிப் பற்றாக்குறையால் மட்டும் ஏற்படவில்லை. நமது அணுகுமுறையும் இதற்குக் காரணம்,” என்றார் அவர்.
லும்பினியை அழிந்து வரும் மரபுச் சின்ன பட்டியலில் யுனெஸ்கோ சேர்ப்பதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தூதாண்மை மட்டத்தில் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பிப்ரவரி காலக்கெடுவுக்கு முன்னர் “யுனெஸ்கோவின் கவலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான தீவிரத்தை” தான் காணவில்லை என்று ஆச்சார்யா கூறினார்.
அடிப்படைப் பிரச்னை அரசியல் ரீதியானதாக இருக்கக்கூடும்.
“லும்பினியை நிர்வகிக்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையின் (LDT) தலைவராக நிபுணர்களையும் திறமையானவர்களையும் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, பாரம்பரிய சின்னங்களைப் பராமரித்துப் பாதுகாப்பதில் போதுமான திறமை இல்லாதவர்களை நியமிப்பதில் அரசு முனைப்புடன் இருப்பதாகத் தெரிகிறது,” என்று முன்னாள் கலாசார அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தீப் குமார் உபாத்யாயா பிபிசியிடம் தெரிவித்தார்.
“விமர்சனங்கள் என்ன என்பது எனக்குப் புரிகிறது” என்று நேபாளத்தின் கலாசார அமைச்சர் பத்ரி பிரசாத் பாண்டே பிபிசியிடம் கூறினார்.
“இதுவொரு புனிதமான இடம். அதன் புனிதம் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அத்தகைய புனித இடங்களில் ஊழலைத் தடுப்பதில் ஒருவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.”
“எல்லா கவலைகளையும் நிவர்த்தி செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஏனெனில், அது நாட்டின் கௌரவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
லும்பினி நிர்வாக அமைப்பு, சில சிக்கல்களைத் தீர்க்க யுனெஸ்கோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. பண்டைய செங்கற்களைப் பூஞ்சையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரசாயன சிகிச்சையை மேற்கொள்ள யுனெஸ்கோ நிபுணர்களை அழைத்துள்ளதாக எல்டிடியின் நிர்வாகத் தலைவரான லர்க்யால் லாமா கூறினார்.
“கோவிலில் நீர்க்கசிவைத் தடுக்க முதல்கட்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்,” என்று லாமா பிபிசியிடம் கூறினார்.
“எப்பாடுபட்டாவது லும்பினி பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அந்த இடத்தைப் பாதுகாத்து பராமரிக்கும் முயற்சியில் 40 ஆண்டுகளை செலவிட்ட மிதாரி, கண்களில் கண்ணீருடன் பிபிசியிடம் கூறினார்.
“இல்லையென்றால் அது தாங்க முடியாததாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC