SOURCE :- BBC NEWS

போர் மூண்டால் சீனா பாகிஸ்தானுக்கு எந்தளவு உதவும்?

57 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. போர் மூண்டால் சீனாவின் பங்கு எவ்வளவு முக்கியமாக இருக்கும்? சீனாவால் பாகிஸ்தானுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்?

சமீபத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜம்மு-காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை சீனா கண்காணித்து வருகிறது என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் பேசிய போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இரு தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

மேலும், இந்த மோதல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் அடிப்படை நலன்களுடன் பொருந்தாததாலும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்பதாலும் பாரபட்சமற்ற விசாரணையை ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் தொடர் ஆதரவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.

எனினும், பஹல்காமில் நடந்த தாக்குதலை சீனா மறுநாளே கண்டித்தது. சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், நாங்கள் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம் என்று கூறியிருந்தார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவுக்கான சீனத் தூதரும் அனுதாபம் தெரிவித்தார்.

சரி, சீனாவின் முன்னுரிமைகள் என்ன?

பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே பல தசாப்தங்களாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ராஜீய ரீதியான உறவு உள்ளது. இந்தக் காலகட்டத்தில், பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் சீனாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்துள்ளது.

நவீன ஆயுதங்களை வழங்குதல், வருடாந்திர பொருளாதார பற்றாக்குறையை சமாளிக்க கடன்கள் அல்லது நிதி நடவடிக்கை பணிக்குழுவான FATF-ன் கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்ப்பது என பல சந்தர்ப்பங்களில் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளது.

இதேபோல, சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் சீனா பாகிஸ்தானில் 62 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் சீனாவிடமிருந்து நவீன ஆயுதங்களையும் பெரிய அளவில் வாங்குகிறது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81 சதவீதம் சீனாவிலிருந்து வந்தவை.

பாகிஸ்தான் வழியாக சீனா வளைகுடா நாடுகளுக்குள் நுழைகிறது, ஆனால் பாகிஸ்தானில் சீன குடிமக்களும் தாக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் தூதர் தஸ்னீம் அஸ்லம் கூறுகிறார்.

பிராந்தியத்தில் பெரிய நாடான சீனா, இரு போட்டி நாடுகளுடனும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு இந்தியா பாகிஸ்தானைக் குறை கூறுவது போல, பலுசிஸ்தான் பிரச்சினைக்கு பாகிஸ்தான் இந்தியாவைக் குறை கூறுகிறது. ஆனால் பிராந்தியத்தில் அமைதி நிலவவேண்டும் என்பது சீனாவின் நலனுக்காகவே என்பதை சீனா புரிந்துக் கொள்ளவேண்டும். எனவே சீனா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தஸ்னீம் கூறுகிறார்.

சீனாவால் என்ன செய்ய முடியும்?

பாகிஸ்தான்-சீனா உறவுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் சர்வதேச விவகார நிபுணரும், காயிதே ஆஸம் சர்வதேச பல்கலைக்கழக பேராசிரியருமான முகமது ஷோயிப், சீனா எப்போதும் பாரபட்சமற்றதாக இருப்பதாகவும், இரு தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூறுகிறார்.

“இந்தியா பாகிஸ்தான் விவகாரத்திலும் சீனா அதே நிலைப்பாட்டையே கடைபிடிக்கிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சிக்கித் தவிப்பதால் சீனா நிர்பந்தத்துக்கு உள்ளாகிறது. எனவே அது இந்தியாவுடன் புதிய பகையை ஏற்படுத்த விரும்பாது என்று ஷோயப் கூறுகிறார்.

ஒருவேளை போர் மூண்டால், சீனா பாகிஸ்தானுக்கு எந்த அளவுக்கு ஆதரவளிக்கும்?

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU