SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
இந்த 2025 ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தொடர்ந்து் 2வது சீசனாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரின் லீக் சுற்றோடு வெளியேறுவது இதுதான் முதல்முறை. சிஎஸ்கே அணி தனது ஐபிஎல் வரலாற்றில் 2020, 2022, 2024, 2025 ஆகிய சீசன்களில் மட்டுமே ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறியுள்ளது.
அது மட்டுமின்றி சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில் அந்தக் கோட்டையில் இந்த சீசனில் மட்டும் 5வது முறையாக சிஎஸ்கே தோல்வியடைந்து பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்தது
சிஎஸ்கே அணி இதர ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது, அணியில் உள்ள இளம் வீரர்களின் திறமையைப் பரிசோதித்துக் கொள்ள, சிறந்த ப்ளேயிங் லெவனை கண்டறிய வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் 190 ரன்கள் சேர்த்தும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததுதான் வியப்பாக இருக்கிறது. இந்த சீசனில் 2 முறைதான் சிஎஸ்கே அணி 200 ரன்களை கடந்துள்ளது. இந்த ஆட்டத்தில் 190 ரன்கள் சேர்த்தும் அதை டிபெண்ட் செய்ய முடியாமல் சிஎஸ்கே கோட்டைவிட்டுள்ளது.
உண்மையில் சிஎஸ்கே அணி நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்று வலுவாக இருந்தபோது, சிஎஸ்கே ஸ்கோர் நிச்சயம் 210 ரன்களுக்கு மேல் உயரும் என்று கிரிக்இன்போ தளம் கணித்தது. ஆனால் கடைசி 7 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களில் சுருண்டுவிட்டது.
ஸ்ரேயாஸ் அய்யர்(72), பிரப்சிம்ரன் சிங்(54) இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தனர்.
பரபரப்பான கடைசி ஓவர்கள்
இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்து ஆட்டத்தைக் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தனர்.
இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க நீண்டநேரமாகப் போராடித்தான் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் உடைக்க முடிந்தது. கடைசி நேரத்தில் ஆட்டத்தில் சின்ன ட்விஸ்ட் கிடைத்தும் அதை சிஎஸ்கே அணியால் பயன்படுத்த முடியவில்லை, ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை கொண்டு செல்ல முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஒன்பது பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்ரேயாஸ் அய்யர் திடீரென போல்டாகி ஆட்டமிழக்கவே, கடைசி 6 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.
கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ரன் இல்லை, 2வது பந்து வைடாக வீசினார். அடுத்த பந்தில் சூர்யான்ஷ் ஆட்டமிழந்தார். 3வது பந்தில் புதிய பேட்டர் யான்சென் ரன் எடுக்கவில்லை. கடைசி 3 பந்துகளை கட்டுக்கோப்பாக வீசியிருக்கலாம்.
ஆனால் யான்சென் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் திசையில் பவுண்டரி சென்றது. கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த வாய்ப்பையும் வெற்றியாக மாற்ற முடியவில்லை.
ஸ்ரேயாஸ் அய்யரின் நுணுக்கமான கேப்டன்சி
ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார். யுஸ்வேந்திர சஹலுக்கு தொடக்கத்தில் 2 ஓவர்கள் வழங்கிவிட்டு, பின்னர் வழங்கவில்லை.
ஆனால், தோனி களமிறங்கியவுடன் சஹலை வரவழைத்து பந்துவீச வைத்தார். தோனி சுழற்பந்துவீச்சில் அதிலும் லெக் ஸ்பின்னுக்கு எதிராக மோசமாக பேட் செய்யக்கூடியவர் என்பதை அறிந்து அவருக்கு சஹலை பந்துவீசச் செய்தார். சிஎஸ்கே இடதுகை பேட்டர்கள் பேட் செய்தபோது, ஹர்பிரித் பிரிரை பந்துவீச வைத்து நெருக்கடியளித்தார்.
சஹலை கடைசி நேரத்தில் கொண்டு வந்ததற்கு சரியான பலன் கிடைத்தது. சஹல் வீசிய 19வது ஓவர் ஆட்டத்தை தலைகீழாக திருப்பிப் போட்டது. 19வது ஓவரின் 2வது பந்தில் தோனி ஆட்டமிழந்த பிறகு, 4வது பந்தில் தீபக் ஹூடா, அடுத்து அன்சுல் கம்போஜ், நூர் அகமது என ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை புரிந்தார்.
சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக பேட் செய்யக்கூடிய ஹிட்டர் பேட்டரான ஷிவம் துபேவை நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் வைத்துக்கொண்டு அவருக்கு ஸ்ட்ரைக்கை வழங்க வேண்டும். அதை விடுத்து சிஎஸ்கே பேட்டர்கள் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர். துபேவும் நெருக்கடியில் தவறான ஷாட் ஆடி 6 ரன்னில் விக்கெட்டை வீணடித்தார்.
சஹலின் புதிய சாதனை

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் நேற்று ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் 4 விக்கெட்டுகளை 9 முறை வீழ்த்தி சஹல் சாதனை படைத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதுவரை எந்த பந்துவீச்சாளரும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதில்லை, முதல்முறையாக சஹல் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் சஹலின் 2வது ஹாட்ரிக் விக்கெட் இது. இதற்கு முன் கொல்கத்தாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சஹல் வீசிய 19வது ஓவரில் 2வது பந்தில் தோனி ஆட்டமிழந்தபின், கடைசி 3 பந்துகளில் ஹூடா, கம்போஜ், நூர் அகமது என வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகவும் புத்திசாலித்தனமாக பந்துவீசிய சஹல் ஒவ்வொரு பேட்டருக்கும் ஒவ்வொருவிதமாக பந்துவீசி அவர்களை பெரிய ஷாட்களுக்கு தூண்டினார். ஹூடாவுக்கு பந்தை அதிகமாக டாஸ் செய்த சஹல், கம்போஜுக்கு வேகமாக வீசி போல்ட் செய்தார். நூர் அகமதுவுக்கு பந்தை மெதுவாக வீசி பெரிய ஷாட்டுக்கு செல்ல வைத்து விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆறுதல் அளித்த சாம்கரன்
சிஎஸ்கே அணிக்கு நேற்றைய மிகப்பெரிய ஆறுதல் 88 ரன்களை குவித்த சாம் கரனின் ஆட்டம்தான். சிஎஸ்கே அணியில் சாம் கரனை தவிர பிரிவிஸ் 32 ரன்கள் சேர்த்தார். இவர்களைத் தவிர மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.
சிஎஸ்கே அணிக்காக சாம் கரன் அடித்த முதல் அரைசதம் இது. இந்த சீசனில் 3 முறை களமிறங்கிய சாம் கரன் தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்பட்டார்.
சாம் கரனை இந்த முறையும் 3வது வீரராக சிஎஸ்கே களமிறக்கினாலும் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை சாம் கரன் காப்பாற்றி, அதிரடியாக பேட் செய்து 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அனைத்து போட்டிகளிலும் இதுபோன்று விளையாட வேண்டிய சாம் கரன் தேவையற்ற நேரத்தில் நல்ல இன்னிங்ஸை கொடுத்தார். சிஎஸ்கே அணிக்கு சாம்கரன் ஆட்டத்தைத் தவிர பெரிய அறுதல் இல்லை.
அன்கேப்டு வீரர்களின் ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவருமே அன்கேப்டு வீரர்கள். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய சிஎஸ்கேவில் இருக்கும் சர்வதேச பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் சிரமப்பட்டனர். ஆர்யா, பிரப்சிம்ரன் இருவரும் தொடக்கத்தில் இருந்தே பவுண்டரிகளை பறக்கவிட்டனர். ஆர்யா 23 ரன்களில் கலீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், பிரப்சிம்ரன் கூட்டணி ஆட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கையில் எடுத்தனர். இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். இருவரையும் பிரிக்க சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் பலர் முயன்றும் முடியவில்லை. பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்ய 13வது ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை பதிராணா தவறவிட்டார். இதைப் பயன்படுத்திய பிரப்சிம்ரன் 31 பந்துகளில் அரைசதமும், ஸ்ரேயாஸ் 32 பந்துகளில் அரைசதமும் அடித்தனர். 2வது விக்கெட்டகுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
ஒரு கட்டத்தில் பஞ்சாப் வெற்றிக்கு 32 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. பதிராணா ஓவரை குறிவைத்த ஸ்ரேயாஸ் 2 சிக்ஸர்கள், பவுண்டரி என விளாசி அழுத்தத்தைக் குறைத்து, கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டார்.
பிரப்சிம்ரன் ஆட்டமிழந்தபின் வந்த சஷாங் சிங் அதிரடியாக 2 சிக்ஸர்கள், பவுண்டரி விளாசி வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளில் 72 ரன்கள் எனும் அருமையான ஆட்டத்தை வழங்கி, பதிராணா பந்துவீச்சில் போல்டானார்.
பிரிவிஸின் அற்புதமான கேட்ச்
ஜடேஜா பந்துவீச்சில் சஷாங் சிங் அடித்த ஷாட்டை பவுண்டரி எல்லையில் பிரிவிஸ் பிடித்த கேட்ச் நேற்றை ஆட்டத்தின் முத்தாய்ப்பாகும்.
சிக்ஸருக்கு வெளியே சென்ற பந்தை அந்தரத்தில் பிடித்து பின்னர் அதைத் தூக்கி வீசி, பவுண்டரி கோட்டுக்கு வெளியே சென்ற பிரிவிஸ், அந்தரத்தில் மீண்டும் பந்தை மேலே தூக்கி வீசி மீண்டும் பவுண்டரி கோட்டுக்கு வெளியே வீசி 3வது முறையாக பந்தை தூக்கி மேலே வீசி பவுண்டரி கோட்டுக்குள் வந்து கேட்ச் பிடித்தார். கடைசி நேர ஆட்டத்தில் இந்த கேட்ச் பரபரப்பை ஏற்படுத்தியது, சிறந்த கேட்சுகளில் ஒன்றாகவும் இடம் பெற்றது.
சிஎஸ்கே ஏன் தோற்றது?

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணி இதற்கு முந்தைய ஆட்டங்களில் குறைந்த ஸ்கோரை அடித்ததால் அதை டிபெண்ட் செய்ய முடியாமல் தோல்வி அடைந்திருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் 190 ரன்கள் சேர்த்தும் அதை டிபெண்ட் செய்ய முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மோசமான பந்துவீச்சு, ஃபீல்டிங் மற்றும் சில வீரர்களின் பேட்டிங்தான்.
சிஎஸ்கே அணியில் சாம் கரன், பிரிவிஸ் இருவரின் பங்களிப்பைத் தவிர மற்ற பேட்டர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஷ் மாத்ரே(7), ரஷீத்(11) இருவரும் பெரிய இன்னிங்ஸை வழங்காதது சிஎஸ்கேவை நெருக்கடிக்குள் தள்ளியது.
நடுவரிசையில் ஜடேஜா(17), துபே(6), தோனி(11) ஹூடா(2) என ஸ்கோரை பெரியளவில் மாற்ற வேண்டிய பேட்டர்கள் ஏமாற்றியது தோல்விக்கு மிகப்பெரிய காரணம். இளம் பேட்டர்கள் ராமகிருஷ்ணா, வன்ஸ்பேடி பெஞ்சில் அமர வைக்கப்பட்டனர், அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் மீண்டும் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது ஏன் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
பதிராணாவின் பந்துவீச்சு இந்த சீசன் முழுவதும் மோசமாக இருந்துள்ளது. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்களில் 45 ரன்களை வழங்கி 2 விகெட்டுகளை வீழ்த்தினார். யார்கர் வீசுகிறேன் என்று ஃபுல்டாஸ் வீசி பெரும்பகுதியான ரன்களை எதிரணிக்கு எளிதாக பதிராணா வழங்கினார். இது தவிர அதிகமான வைடு பந்துகளையும் பதிராணா வீசினார். பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்யக் கிடைத்த கேட்சை பதிராணா நழுவவிட்டது ஆட்டத்தை நழுவிட்டதற்குச் சமம்.
தோனி, 190 ரன்களுக்கு மேல் கூடுதலாக ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று கூறினாலும், சிஎஸ்கே அணியின் இப்போதைய வெற்றிக்கான தாகம் இல்லாத மனநிலையில் 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் வெல்வது கடினம்.
தோனி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறுகையில் “முதல்முறையாக நாங்கள் சிறிது கூடுதலாக ரன்கள் சேர்த்துள்ளோம். என்னைப் பொருத்தவரை இதுவும் சற்று குறைவுதான் இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம். பேட்டர்கள் இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்.
பிரிவிஸ், சாம் இடையிலான பார்ட்னர்ஷிப் அருமையாக இருந்தது. ஃபீல்டிங்கிலும், கேட்ச் பிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான ஆடுகளம் போலன்றி இந்த ஆடுகளம் சிறப்பாக இருந்தது. பிரிவிஸ் பிடித்த கேட்ச் அற்புதமானது, சிறந்த ஃபீல்டராகவும், சிறந்த பேட்டராகவும் இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு ஒரு சொத்தாக மாறியுள்ளார். எழுச்சி பெறுவதற்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம்: ஜெய்பூர்
- நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- நாள் – மே 6
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs சிஎஸ்கே
- நாள் – மே 3
- இடம் – பெங்களூரு
- நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
- சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-456 ரன்கள்(9 போட்டிகள்)
- விராட் கோலி(ஆர்சிபி) 443 ரன்கள்(9போட்டிகள்)
- சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 427(10 போட்டிகள்)
நீலத் தொப்பி
- ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள்(9 போட்டிகள்)
- நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள்(9 போட்டிகள்)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU