SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
43 நிமிடங்களுக்கு முன்னர்
வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் பதவி விலக விரும்புவதாக அறிவித்தது, அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் வியாழக்கிழமையன்று (22 மே) முகமது யூனுஸை சந்தித்தார்.
“தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகுதான் அவரைச் சந்திக்க முடிவு செய்தேன்” என்று நஹித் இஸ்லாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
மறுபுறம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இடைக்கால அரசாங்கத்தின் அனைத்து சர்ச்சைக்குரிய ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கோரியது.
வங்கதேச வெளியுறவுச் செயலாளர் ஜாஷிமுதீனின் திடீர் ராஜினாமாவும் முகமது யூனுஸின் ராஜினாமா பற்றிய விவாதத்தைத் தூண்டியது.
ஆர்ப்பாட்டம்
இதற்கு முன்னதாக, உள்ளூர் அரசாங்க ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் சஞ்சீவ் பூயான் மற்றும் தகவல் ஆலோசகர் மஹ்பூஸ் ஆலம் ஆகியோர் பதவி விலக வேண்டும் எனக் கோரி வங்கதேச தேசியவாதக் கட்சியின்(பிஎன்பி) தலைவர் இஷ்ராக் உசேனின் ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இடைக்கால அரசாங்கத்தின் மூன்று ஆலோசகர்களை “பிஎன்பி செய்தித் தொடர்பாளர்கள்” என்று வர்ணித்த தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஒருவர், சீர்திருத்த பரிந்துரைகளை செயல்படுத்தாவிட்டால் அவர்கள் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிஃப் நஸ்ருல், நிதி ஆலோசகர் சலாவுதீன் அகமது மற்றும் திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத் ஆகியோர் தான் தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் குறிப்பிட்ட “பிஎன்பி செய்தித் தொடர்பாளர்கள்” ஆவர்.

பட மூலாதாரம், Getty Images
பிஎன்பியின் கோரிக்கை
நாட்டில் நிலவும் கொந்தளிப்புக்கு மத்தியில், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக வெளியான செய்தி, தீயாக பரவியது.
இதற்குப் பிறகு அரசியல் கட்சிகள், சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தொழிலதிபர்கள் என பல்வேறுத் துறையினரும் ராஜினாமா செய்திக்கு வெவ்வேறு எதிர்வினைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக, தலைமை ஆலோசகர் ராஜினாமா செய்வதாக வெளியான செய்தியை இன்று காலை முதல் கேள்விப்பட்டு வருகிறோம். எனவே இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க அவரைச் சந்திக்கச் சென்றேன்” என்று முகமது யூனுஸைச் சந்தித்த பிறகு தேசிய குடிமக்கள் கட்சியின் நஹித் இஸ்லாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த சந்திப்பின் போது, தலைமை ஆலோசகர் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்ததாகவும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தன்னால் பணியாற்ற முடியாது என்று கூறியதாகவும் இஸ்லாம் கூறினார்.
அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து இல்லையென்றால், தன்னால் செயல்பட முடியாது என்று முகமது யூனுஸ் கூறியதாக நஹித் இஸ்லாம் தெரிவித்தார்.
“மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு பிறகு தான் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறிய தலைமை ஆலோசகர், ஆனால் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் போராட்டங்களுக்கு இடையில் வேலை செய்வது சாத்தியமில்லை என்று கூறினார்” என்கிறார் நஹித் இஸ்லாம்.

வியாழக்கிழமை (22 மே 2025) முழுவதும் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பை நடத்திய வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி), இடைக்கால அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஆலோசகர்களை நீக்கக் கோரியது.
“இடைக்கால அரசாங்கத்தின் நடுநிலையைப் பேணுவதற்காக, சில சர்ச்சைக்குரிய ஆலோசகர்களை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அவர்களுடைய கருத்துகளும் செயல்களும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தன,” என்று பிஎன்பி நிலைக்குழு உறுப்பினர் கண்டேகர் முஷரஃப் ஹூசைன் கூறினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சமீபத்திய கருத்து ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது, எனவே அரசாங்கத்தின் பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவரை நீக்குவது அவசியம் என்றும் கண்டேகர் முஷரஃப் ஹூசைன் கூறினார்.
அதே நாளன்று இரவில் இஸ்லாமிய ஆந்தோலன் பங்களாதேஷ் அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து வெளியான ஒரு பதிவில், இஸ்லாமிய ஆந்தோலன் பங்களாதேஷ், கன அதிகார் பரிஷத் மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அவசரக் கூட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஜூலை எழுச்சியை வழிநடத்திய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியான தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தலைமை ஒருங்கிணைப்பாளர் (தெற்கு) ஹஸ்னத் அப்துல்லா, நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், நாட்டின் நலனுக்காக இந்த எதிர்பாராத பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
இதற்கிடையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆமீர் ஷஃபிகுர் ரஹ்மான், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்க ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “பங்களாதேஷ் அவாமி லீக், ‘வடக்கு’ மற்றும் ‘டெல்லி’ கூட்டணியில் இணைந்து நீங்கள் வரவேற்கும் முதலை, உங்களையே தின்றுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச அரசியலில், ‘வடக்கு’ அல்லது ‘நார்த்’ என்ற சொல் ராணுவத்தை குறிக்கப் பொதுவாக பயன்படுத்தப்படுவதாகும்.
“எங்களுக்கு மரண பயமும் இல்லை, எதையும் இழந்துவிடுவோமா என்ற பயமும் இல்லை. ஆனால் ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், ஜனநாயக மாற்றமும் இந்த நாட்டு மக்களின் நலனும் நேர்மறையான திசையில் முன்னேற முடியாது. ஒருவேளை கனவு காண்பதும், காணும் கனவுகள் உடைந்துபோவதுமே இந்த நாட்டின் தலைவிதியாக மாறியிருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Md Abu Sufian Jewel/NurPhoto via Getty Images
மே 14 அன்று தொடங்கிய இயக்கம்
மறுபுறம், தகவல் ஆலோசகர் மஹ்ஃபுஸ் ஆலம் தனது பேஸ்புக் பதிவில், கடந்த காலங்களில் தான் வெளியிட்ட பிளவுபடுத்தும் கருத்துகளுக்கும், தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“தேசபக்தி சக்திகளின் ஒற்றுமை தவிர்க்க முடியாதது. தனிப்பட்ட லட்சியங்கள், மரியாதை மற்றும் உணர்வுகளை விட நாடு பெரியது. கடந்த கால கருத்துகள் மற்றும் பிரிவினையைத் தூண்டும் எனது வார்த்தைகளுக்கு மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பழைய அமைப்பின் பிளவுபடுத்தும் முழக்கங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்தால் மட்டுமே எதிர்கால வங்கதேசம் ஜனநாயகமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்று மஹ்ஃபுஸ் ஆலம் தெரிவித்தார்.
முன்னதாக, அரசாங்க ஆலோசகர் ஆசிப் முகமது மற்றும் தகவல் ஆலோசகர் மஹ்ஃபுஸ் ஆலம் ஆகியோர் பதவி விலகக் கோரி, வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் இஷ்ராக் உசேனின் ஆதரவாளர்கள், டாக்காவின் தெருக்களில் பேரணி நடத்தினார்கள்.
இந்த இருவரின் பதவி விலகல் கோரிக்கையைத் தவிர, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மானையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது பிஎன்பி தெரிவித்தது.
“பாசிச ஆதரவு ஆலோசகர்கள் நீக்கப்பட வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்ததால் மட்டுமே சுமார் ஒன்றரை தசாப்த காலமாகத் தொடர்ந்த பாசிச சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றோம். நாட்டின் நலனுக்காக இந்த ஒற்றுமையைப் பேணுவது முக்கியம்” என்று இஷாக் ஹுசைன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ராணுவத் தளபதியின் நிலைப்பாடு என்ன?
வங்கதேச வெளியுறவு செயலாளர் ஜாஷிமுதீன் பதவி விலகியுள்ளார்.
இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் மற்றும் வெளியுறவு ஆலோசகர் தௌஹீத் உசேன் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், ஒருங்கிணைந்து செயல்பட முடியாததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
எட்டு மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அமெரிக்காவிற்கான வங்கதேசத் தூதர் அசம் ஆலம் சியாம் அடுத்த வெளியுறவு செயலாளராக வர வாய்ப்புள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, புதன்கிழமையன்று பேசிய ராணுவத் தளபதி வகார்-உஸ்-ஜமான், டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கான தெளிவான திட்டத்தை வங்கதேச தேசியவாதக் கட்சி கோரி வரும் நேரத்தில் அவரது கருத்து வெளிவந்துள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU