SOURCE :- BBC NEWS

அமேசானில் முதலைகள் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக் கொண்ட ஐந்து பேர் 36 மணி நேரம் விமானத்தின் மேல் நிர்கதியாக இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பொலிவியாவின் அமேசானாஸ் பகுதியில், 5 பேர் இருந்த சிறிய ரக விமானம் ஒன்று 48 மணி நேரத்திற்கு முன் காணாமல் போனது, தீவிரமாக மேற்கொண்ட தேடுதல்வேட்டையில் உள்ளூர் மீனவர்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தனர்.
மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் 29 வயது விமானி என மொத்தம் ஐந்து பேரும் நல்ல நிலையில் மீட்கப்பட்டதாக அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் வில்சன் அவிலா தெரிவித்தார்.
மத்திய பொலிவியாவில் பறந்துக் கொண்டிருந்த சிறிய ரக விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது. அதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
விமானம் மீட்கப்பட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய விமானி, வடக்கு பொலிவியாவில் உள்ள பௌரெஸிலிருந்து டிரினிடாட் நகருக்குச் விமானத்தின் சென்றுக் கொண்டிருந்தபோது, இட்டானோமாஸ் நதிக்கு அருகே அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
வானில் பறந்துக் கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டில் இருந்து விலகி, தானாகவே கீழே இறங்கத் தொடங்கியது என்றும், வேறுவழியில்லாமல் சதுப்பு நிலத்திற்கு அருகில் இருந்த நீர் நிலையில் விமானத்தை தரையிறக்கியதாகவும் விமானி ஆண்ட்ரெஸ் வெலார்டே கூறினார்.
விமானத்தில் இருந்த ஐந்து பேரும் விமானத்தில் இருந்து வெளியே வந்து, விமானத்தின் மீது ஏறி நின்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் இருந்த இடத்தை முதலைகள் சூழ்ந்துக் கொண்டன. விபத்தில் இருந்து தப்பியவர்களுக்கும் முதலைகளுக்கும் இடையில் மூன்று மீட்டர் தூரம் தான் இருந்தது.
முதலை மட்டுமல்ல அனகோண்டாவும் வந்தது
முதலைகள் அவ்வளவு அருகில் வந்தபோதும், மனிதர்களை உண்ணாமல் விட்டு வைத்தது ஏன்? தண்ணீரில் மூழ்கிய விமானத்திலிருந்து கசிந்த பெட்ரோல் தான் முதலைகள் தங்களை நெருங்காமல் இருக்கக் காரணமாக இருக்கும் என விமானி வேலார்டே நம்புகிறார்.
யாராவது வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தபோது, தங்களைச் சுற்றி முதலைகள் மட்டுமல்ல, அங்கு அனகோண்டா பாம்பு ஒன்று வந்ததையும் தாங்கள் பார்த்ததாக அவர் கூறினார்.
காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணியாளர்களுக்காக காத்துக் கொண்டிருந்த 36 மணி நேர அனுபவம் வித்தியாசமானது, வாழ்க்கையில் மறக்கவே முடியாதது என்று ஐவரும் கூறுகின்றனர்.

தங்களில் ஒருவர் வைத்திருந்த மரவள்ளிக்கிழங்கு மாவை சாப்பிட்டு பசியை போக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.
“எங்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை, முதலைகள் எங்களை சுற்றி இருந்ததால் எங்கும் செல்ல முடியவில்லை,” என்று வேலார்டே கூறினார்.
முதலைகளில் சிறிய உருவத்தைக் கொண்ட கெய்மன் வகை சிறுமுதலைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.
காணாமல்போன விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்த பிறகு, உயிர் பிழைத்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விமானம் காணாமல் போன பிறகு அதன் நிலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு விதமாக ஊகிக்கப்பட்டதாக பெனி பிராந்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ரூபன் டோரஸ் கூறினார்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களை காப்பாற்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக அவர் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளானது ஒருபுறம் என்றால், 36 மணி நேரம் முதலைகளுக்கு நடுவில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC