SOURCE :- INDIAN EXPRESS
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் தே.மு.தி.க போட்டியிடாமல் புறக்கணித்த நிலையில், முதல் முறையாக தேர்தல் களத்தில் தி.மு.க – நாம் தமிழர் கட்சி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக ஆளும் கட்சி தி.மு.க சார்பில், வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க, தே.மு.க.வும் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக கூறியதை அடுத்து பா.ஜ.க போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது. பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், தி.மு.க, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.
மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தது, தி.மு.க-வின் போட்டியை எளிதாக்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் கனிசமான வாக்கு வங்கியைப் பெற்றுவரும் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது, 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று அறிவித்துள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி, தே.மு.தி.க, டத.வெ.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்த நிலையில், ஆளும் கட்சி தி.மு.க-வை கடும் போட்டியில்லாமல் தேர்தலை எதிர்கொள்கிறது. தி.மு.க சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால், முதல் முறையாக தேர்தல் களத்தில் தி.மு.க- நாம் தமிழர் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
SOURCE : TAMIL INDIAN EXPRESS