SOURCE :- BBC NEWS

ஃபைண்டிங் நீமு, மீன், கடல்,

பட மூலாதாரம், Getty Images

தொலைக்காட்சிகளில் தமிழில் ஹாலிவுட் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தவர்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்த படங்களில் ஒன்று ஃபைண்டிங் நீமு (Finding Nemo).

காணாமல் போன ஒரு மகன் மீனைத் தேடி அப்பா மீனும், மற்றொரு மீனும் பயணம் மேற்கொள்ளும் கார்ட்டூன் படம்தான் அது.

அந்தப் படத்தில் காட்டப்பட்ட நீமுவைப் போன்ற தோற்றமுடைய மீன்கள், கடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்ப நிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உடல் வளர்ச்சி சுருங்கிக் கொண்டே செல்கின்றன என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

2023-ஆம் ஆண்டு பதிவான உயர்ந்தபட்ச கடல் வெப்ப நிலைக் காரணமாக பவளப்பாறைகளில் வாழ்ந்து வரும் ‘க்ளவுன் ஃபிஷ்’ எனப்படும் இந்த வகை மீன்கள் மெலிந்து போயின என்று ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன.

இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கக் கூடியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், கடலில் வாழும் பல மீன்களின் உடல் அளவு சுருங்கிக் கொண்டே போவதற்கான காரணத்தை இந்த ஆய்வு முடிவு விளக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பறவைகள், பல்லிகள் மற்றும் ஊர்வனங்கள் மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்ற வகையில் தங்களின் உடல் அளவை மாற்றிக் கொள்கின்றன என்பதை அதிகரித்து வரும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

ஃபைண்டிங் நீமு, மீன், கடல்,

பட மூலாதாரம், Getty Images

அதிகபட்ச வெப்ப நிலையால் மெலிந்து போன 75% மீன்கள்

“வெப்ப அலை போன்ற நிகழ்வுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீமுக்கள் தங்களின் உடல் அளவை சுருக்கிக் கொள்ள இயலும்,” என்று முனைவர் தெரேசா ரூகெர் கூறுகிறார். அவர் நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் வெப்பமண்டலக் கடல்சார் அறிவியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

கடல் பல்லுயிர் பெருக்கமண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படும் பப்புவா நியூ கினியின் கிம்பே விரிகுடா பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு ஜோடி க்ளவுன் மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஃபைண்டிங் நீமு படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அதே மீனைப் போன்றே இந்த க்ளவுன் மீனும் உருவத்தைக் கொண்டிருக்கும். அந்தப் படத்தில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டுகளில் இருந்து காணாமல் போன மகனைத் தேடிச் செல்லும் அப்பா மீனின் கதை அது.

2023-ஆம் ஆண்டு கடலில் அதிகப்பட்சமான வெப்ப அளவு பதிவு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் பல பவளத்திட்டுகள் வெள்ளை நிறங்களில் மாறின. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அதிகப்படியான வெப்ப நிலையை சமாளிக்கும் இந்த மீன்களின் பலதரப்பட்ட அளவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர் ஆராய்ச்சியாளர்கள்.

அளவில் ஏற்கனவே சிறிதாக இருக்கும் அந்த மீன் தன்னுடைய உடல் எடையை மட்டும் இழக்கவில்லை. சில மில்லிமீட்டர்களுக்கு அதன் உருவமும் சிறிதானது. இது ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வன்று. வெப்ப அலை நிலவிய காலகட்டத்தில் 75% மீன்கள் மெலிந்து போயின.

ஃபைண்டிங் நீமு, மீன், கடல்,

பட மூலாதாரம், Getty Images

டையட் காரணம் இல்லை!

“அந்த மீன்கள் ஏதோ ‘டையட்’ உணவுகளை உட்கொண்டு எடையை இழக்கவில்லை. தொடர்ச்சியாக மாற்றம் அடைந்து, குறைவான உணவுத் தேவையைக் கொண்ட, ஆக்ஸிஜன் மூலமாக அதிக செயலாற்றலைக் பெறும் மீன்களாக அளவில் சிறிதாகின,” என்று ரூகெர் தெரிவிக்கிறார்.

கடல் நெடுவாழிகள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போன்று இந்த மீன்கள் எலும்புகளையும் கொழுப்பையும் உயிர்வாழ பயன்படுத்துகின்றன. ஆனால் இதனை உறுதி செய்ய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

நிமூ குறித்த இந்த ஆய்வுக்குப் பிறகு, ஃபைண்டிங் நீமுவின் கதையை கொஞ்சம் மாற்றி எழுத வேண்டும் என்று கூறுகிறார் ரூகெர்.

“அந்த படம் உண்மையாகவே சிறப்பான படம் தான். ஆனால் அதன் அடுத்த பகுதி, காலநிலை மாற்றத்தை நீமு எப்படி எதிர்கொள்கிறது என்று இருக்க வேண்டும்,” என பிபிசியிடம் தெரிவித்தார்.

ஃபைண்டிங் நீமு, மீன், கடல்,

பட மூலாதாரம், Getty Images

சூடான ரத்தம் கொண்ட விலங்குகளுக்கு வெப்பமயமாதல் பெரும் சவாலானது. ஏன் என்றால் தங்களின் உடல் வெப்ப நிலை அதிகரிப்பதைத் தடுக்க சீரான வெப்ப நிலையை இந்த விலங்குகள் கொண்டிருக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தை விலங்குகள் பல்வேறு வகையில் சமாளிக்கின்றன. சில விலங்குகள் குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்கின்றன அல்லது உயர்ந்த பகுதிக்கு செல்கின்றன. வாழ்க்கைச் சுழற்சியில் இனப்பெருக்கம், வலசை போன்ற முக்கியமான நிகழ்வுகளின் காலத்தை மாற்றிக் கொள்கின்றன அல்லது உடல் அளவை மாற்றிக் கொள்கின்றன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU