SOURCE :- BBC NEWS

ஐபிஎல், பிசிசிஐ,

பட மூலாதாரம், Getty Images

12 மே 2025, 17:19 GMT

புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட, நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாடு முழுவதும் 6 மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அரசு மற்றும் பாதுகாப்பு முகமைகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நடப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பிசிசிஐயின் அறிக்கை கூறுகிறது.

எஞ்சிய 17 போட்டிகள் இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும், மே 17ம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூன் 3 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான கால அட்டவணை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • குவாலிஃபயர்1 போட்டி – மே29ம் தேதி
  • எலிமினேட்டர் போட்டி – மே 30ம் தேதி
  • குவாலிஃபயர்2 போட்டி – ஜூன் 1ம் தேதி
  • இறுதிப்போட்டி – ஜூன் 3ம் தேதி

பிளேஆஃப் சுற்றுக்கான போட்டிகளின் மைதானங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க உதவிய, இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்திற்கு வணக்கம் தெரிவிப்பதாகவும், கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்துவதோடு, தேச நலனில் உறுதியோடு இருப்பதாகவும் பிசிசிஐ கவுரவ செயலாளர் தேவஜித் ஷைகியா பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தால் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டது.

நடப்பு ஐபிஎல் தொடரின் குரூப் சுற்றின் 58வது போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த மே 8ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்ஷாலாவில் நடைபெற்றது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

போட்டியின் நடுவே சைரன் ஒலிக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU