SOURCE :- BBC NEWS

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Getty Images

ஒரு ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், 1.73 கோடி ரூபாய்க்கு ஒரு இரண்டாவது வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரையோஜெனிக்ஸ் (cryogenics) தொழில்நுட்பம், உண்மையில் சாத்தியமா அல்லது வெற்று வாக்குறுதியா?

கிரையோஜெனிக்ஸ் என்பது குறைந்த வெப்பநிலையை எவ்வாறு அடைவது மற்றும் அத்தகைய வெப்பநிலையை பொருட்கள் அடையும் போது அவை எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதைப் பற்றிய படிப்பாகும்.

ஜெர்மனியின் மத்திய பெர்லினில், ஒரு சிறிய, கிட்டத்தட்ட பொம்மை போன்ற ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதன் உள்ளே, மேல்புறத்தில் பல்வேறு வகையான கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகமான டுமாரோ பயோ (Tomorrow bio), மறுசீரமைத்து இயக்கும் மூன்று ஆம்புலன்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். இதன் நோக்கம் நோயாளிகளை இறந்த பிறகு உறைய வைப்பது, பிறகு ஒருநாள் அவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும். இவை அனைத்துக்கும் 2,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.73 கோடி ரூபாய்) செலவாகும்.

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பெர்ஃப்யூஷன் (Perfusion) பம்பில் டுமாரோ பயோவின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான எமில் கெண்ட்சியோரா உள்ளார்.

உலகின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு மிச்சிகனில் திறக்கப்பட்டது. அது மனித குலத்தின் எதிர்காலம் என்று நம்புபவர்களுக்கும், அதை சாத்தியமற்ற ஒன்று என்று நிராகரிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. கெண்ட்சியோரா இத்தகைய ஆய்வகத்துக்கான தேவை படிப்படியாக உருவாகிறது என்று கூறுகிறார்.

இதுவரை அவர்கள் ‘மூன்று அல்லது நான்கு’ நபர்களையும் ஐந்து செல்லப்பிராணிகளையும் உறைய வைத்துள்ளனர் (அல்லது கிரையோபிரிசர்வ் (cryopreserved) செய்யப்பட்டுள்ளன). கிட்டத்தட்ட 700 பேர் இதற்காக பதிவு செய்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் அவர்கள் அமெரிக்கா முழுவதும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவார்கள்.

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Charlotte Lytton

மனிதர்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியுமா?

கிரையோபிரெசர்வேஷன் முறையில் யாரும் இதுவரை வெற்றிகரமாக புத்துயிர் பெறவில்லை. அப்படி யாரேனும் வந்தாலும் கூட, அதன் சாத்தியமான விளைவு என்பது மூளையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது.

மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த திட்டம் அபத்தமானது என்பதைக் காட்டுகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார்.

‘நானோ தொழில்நுட்பம் (செயல்முறையின் கூறுகளை நானோ அளவில் மேற்கொள்வது) அல்லது கனெக்டோமிக்ஸ் (மூளையின் நியூரான்களை மேப்பிங் செய்தல்) ஆகியவை கோட்பாட்டு உயிரியலுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான தற்போதைய இடைவெளியை குறைக்கும்’ என்பது போன்ற வாக்குறுதிகள் மிகையானவை என அவர் கூறுகிறார்.

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Charlotte Lytton

இத்தகைய விமர்சனங்கள் டுமாரோ பயோவின் லட்சியங்களை மழுங்கடிக்கவில்லை. ஒரு நோயாளி டுமாரோ பயோ நிறுவனத்துடன் இறுதி செயல்முறைக்கு கையெழுத்திட்டதும், அவர் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருப்பதை ஒரு மருத்துவர் உறுதிப்படுத்துவார்.

பிறகு நிறுவனம் அவர்களின் இருப்பிடத்திற்கு ஆம்புலன்ஸை அனுப்புகிறது. சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும், அந்த நபரின் உடல் டுமாரோ பயோவின் ஆம்புலன்சுக்கு மாற்றப்படும். அங்கு கிரையோனிக்ஸ் செயல்முறை தொடங்குகிறது.

மருத்துவ வரலாற்றில், சில நோயாளிகளின் இதயம் உறை வெப்பநிலையில் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய சம்பவங்களில் இருந்து, தங்களுக்கான உந்துதலை டுமாரோ பயோ நிறுவனம் பெற்றது.

ஒரு உதாரணம் அன்னா பேகன்ஹோம் , 1999ஆம் ஆண்டில் நார்வே நாட்டுக்கு, விடுமுறையைக் கழிக்கச் சென்ற நபர். பனிச்சறுக்கு விளையாட்டின் போது, எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இரண்டு மணிநேரம் மருத்துவ ரீதியாக இறந்த நிலையில் இருந்தார் (Clinically dead). ஆனால் மீண்டும் புத்துயிர் பெற்றார்.

மனித உடல் பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ் சென்றால் என்னவாகும்?

இந்த செயல்முறையின் போது, ​​உடல்கள் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன, கிரையோபுரோடெக்டிவ் திரவமும் செலுத்தப்படுகின்றது.

“மனித உடலை பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ், உடலை உறைய வைப்பது மட்டும் போதாது, அதை கிரையோப்ரெசர்வ் செய்ய வேண்டும். இல்லையெனில், எல்லா இடங்களிலும் உறைபனி படிகங்கள் இருக்கும், உடலின் திசுக்கள் அழிந்துவிடும்” என்கிறார் கெண்ட்சியோரா.

“அதை எதிர்க்க, உடலின் அனைத்து நீரையும், உறையக்கூடிய அனைத்தையும், கிரையோபுரோடெக்டிவ் திரவம் கொண்டு மாற்ற வேண்டும். அதைச் செய்தவுடன், மிக வேகமாக சுமார் -125C டிகிரி (257F) வெப்பநிலையை அடைய வேண்டும். பின்னர் மிகவும் மெதுவாக, -125C முதல் -196C (384.8F) வெப்பநிலை வரை செல்ல வேண்டும்.” என்கிறார் கெண்ட்சியோரா.

பிந்தைய வெப்பநிலையில், நோயாளி சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சேமிப்பு அலகுக்கு மாற்றப்படுகிறார். அதன் பிறகு ‘காத்திருக்க வேண்டும்’ என்று கெண்ட்சியோரா கூறுகிறார்.

“திட்டம் என்னவென்றால், எதிர்காலத்தின் ஒரு கட்டத்தில், மருத்துவத் தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியிருக்கும். அப்போது புற்றுநோய் அல்லது அந்த நோயாளியின் மரணத்திற்கு எது வழிவகுத்ததோ அதை குணப்படுத்த வழி இருக்கும். மேலும் கிரையோபிரெசர்வேஷன் செயல்முறையை மீண்டும் தொடங்கிய கட்டத்திற்கே கொண்டுவரவும் அப்போது வழி இருக்கலாம்.”

ஆனால் அத்தகைய மருத்துவத் தொழில்நுட்பம் எப்போது கிடைக்கும்? 50, 100 அல்லது 1,000 ஆண்டுகளில் நடக்குமா என்பது தெரியாது.

“ஆனால், அது உண்மையில் முக்கியமில்லை. நீங்கள் சரியான வெப்பநிலையில் உடலை வைத்திருக்கும் வரை, இது சாத்தியம். இங்கு கால வரம்பு கிடையாது” என்கிறார் கெண்ட்சியோரா.

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Getty Images

கிரையோனிக்ஸ் – நடைமுறையில் சாத்தியமா?

கிரையோனிக்ஸ் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு இந்த யோசனை முட்டாள்தனமாகவும் அச்சுறுத்தக் கூடியதாகவும் தோன்றலாம்.

“ஆனால் கோட்பாட்டளவில் இது ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என கெண்ட்சியோரா கூறினாலும், கிரையோபிரெசர்வேஷன் செயல்முறைக்கு பிறகு வெற்றிகரமாக உயிர்ப்பிக்கப்பட்ட மனிதர்களின் தற்போதைய எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.

இந்த செயல்முறையின் திறனைக் காட்டும் ஒப்பீட்டு விலங்கு ஆய்வுகளும் குறைவு. எம்பாமிங் திரவத்தை உட்செலுத்துவதன் மூலம் ஒரு எலியின் மூளையைப் பாதுகாப்பது இப்போது சாத்தியம்.

எதிர்கால உயிர்ப்பித்தலுக்காக மனிதர்களின் மூளையும் ஒருநாள் இப்படி பாதுகாக்கப்படுவது சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையை, மேற்கூறிய செயல்முறை அளிக்கிறது.

ஆனால் இந்த செயல்முறை, விலங்கின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ வேண்டும், அதாவது அந்த விலங்கை கொல்வதன் மூலம்.

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Getty Images

கெண்ட்சியோரா கூறுகையில், “பெரும்பாலான மருத்துவ முறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்போது அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த திட்டத்திற்கு இருக்கும் எதிர்ப்புக்கு காரணம், மரணத்தில் இருந்து ஒருவரை உயிர்ப்பிப்பது விசித்திரமாக தோன்றுவதால் தான்” என்றார்.

சி.எலிகன்ஸ் எனப்படும் ஒரு நூற்புழு, கிரையோப்ரிசர்வ் செய்யப்பட்டு, மீண்டும் முழு செயல்பாட்டிற்கு திரும்ப முடியும் என்பதைக் காட்டும் ஆராய்ச்சி, ஒரு உயிரினம் மரணத்தைக் கடக்க முடியும் என்பதற்கான சான்றுகளை ஊக்குவிக்கிறது என்றும் அவர் நினைக்கிறார்.

கொறித்துண்ணிகளிடையே (Rodents), உறுப்புகள் புத்துயிர் பெற்றதற்கான சில சான்றுகளும் உள்ளன. 2023ஆம் ஆண்டில், ‘மினசோட்டா ட்வின் சிட்டிஸ் பல்கலைக்கழக’ ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் சிறுநீரகங்களை 100 நாட்கள் வரை கிரையோஜெனிக் முறையில் சேமித்து வைத்தனர்.

பிறகு மீண்டும் அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து, கிரையோப்ரொடெக்டிவ் திரவங்களை அகற்றி, அவற்றை மீண்டும் ஐந்து எலிகளுக்கு பொருத்தினர்.

30 நாட்களுக்குள் அந்த உறுப்புகளின் முழு செயல்பாடு மீட்டெடுக்கப்பட்டது.

“இன்னும் பல விஷயங்கள் உள்ளன. யாரும் அதை முயற்சிக்கவில்லை என்பதால் அது பயனளிக்காது என்ற எண்ணம் உள்ளது. முயற்சித்தால் தான் பயன்கள் தெரியும்” என்கிறார் கெண்ட்சியோரா.

அதே சமயம், ஒருமுறை முயற்சித்துப் பார்த்தால், அவை பயனளிக்காது என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. கொறித்துண்ணிகள் அல்லது புழுக்கள் போன்றவற்றுக்குப் பொருந்துகிற பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு பொருந்தாது என்பதை தெரிந்துகொண்டதைப் போல.

மனித ஆயுளை நீட்டிப்பது குறித்த விவாதங்கள்

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Getty Images

கிரையோனிக்ஸ் என்பது, அதிகரித்து வரும் ‘மனித ஆயுள் நீட்டிப்பு’ குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாகும். நீண்ட ஆயுளைப் பற்றிய விஷயத்தில் இப்போது விவாதங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் அதிக ஆண்டுகள் வாழ முடியும் என அவை உறுதியளிக்கின்றன.

ஆனால் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நன்றாக சாப்பிடுவதைத் தாண்டி, நடைமுறை ஆராய்ச்சி இந்த விஷயத்தில் மிகக் குறைவாகவே உள்ளது.

கோயென் கிரையோனிக்ஸ் பற்றிய ஒரு மற்றொரு பார்வையை முன்வைக்கிறார், இது “ஆண்டிஃபிரீஸ் (Antifreeze) தொடர்பாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கை மற்றும் உயிரியல், இயற்பியல் மற்றும் இறப்பு ஆகியவற்றின் இயல்பு பற்றிய தவறான புரிதல்” என்று அவர் விவரிக்கிறார்.

இதயம் துடிப்பதை நிறுத்தியவுடன், நமது செல்கள் சிதைவடையத் தொடங்குகின்றன, இதனால் பெரும் சேதம் ஏற்படுகிறது.

“ஒரு உடல் பின்னர் கிரையோப்ரிசர்வ் நிலையில் இருந்து மீண்டும் சாதாரண வெப்பநிலைக்கு வரும் போது, மரணத்திற்குப் பிந்தைய கட்டத்தில் நடந்த அனைத்து சிதைவுகளும் இப்போது மீண்டும் தொடங்கும்” என்கிறார் கோயென்.

இங்கு கிரையோனிக்ஸ் மீது தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். அதாவது திசுக்கள் மற்றும் உறுப்புகள் போன்றவற்றை மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்டகால கிரையோபிரசர்வேஷன் மூலம் சேமித்து, பின்னர் பயன்படுத்தலாம்.

டுமாரோ பயோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் உடல்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையில் சேமிக்கப்படுகின்றன, இது உடல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கெண்ட்சியோரா கூறுகிறார்.

ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் ஒரு சந்ததியினருக்கு, நீண்டகாலமாக உறையவைக்கப்பட்ட அவர்களது மூதாதையர் சடலத்தின் பொறுப்பை திடீரென்று கொடுப்பது என்றால், அந்த சூழ்நிலையைக் கற்பனை செய்வது விசித்திரமாக உள்ளது அல்லவா?

செயல்முறைக்கான அதீத செலவு பற்றிய கவலை

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Getty Images

கிரையோனிக்ஸின் ஆதரவாளர்கள் நோயாளியின் இறப்புக்கு காரணமான நோய்க்கான ஒரு சிகிச்சை எதிர்காலத்தில், அவர்கள் மீண்டும் உயிர்பிக்கப்படும் போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அல்லது அதேபோல இரண்டாவது முறையாக உயிர் பெற்றாலும் அது நீடிக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

இந்த செயல்முறைக்கான அதீத செலவு பற்றிய கவலையும் உள்ளது, பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் பணம் இத்தகைய இறுதி செயல்முறைக்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் மகிழ்ச்சியடையவில்லை.

“ஒன்றை தேர்வு செய்வதற்கான உங்களது சுதந்திரம், அதுவே மற்ற அனைத்து சாத்தியமான நெறிமுறை பரிசீலனைகளையும் முறியடிக்கிறது என்று நான் வாதிடுவேன்” என்று கெண்ட்சியோரா கூறுகிறார்.

“சிலர் தங்களது 85 வயதில் கூட சொகுசுப் படகுகளை அதிக விலைக்கு வாங்குகிறார்கள். அவர்களுக்கு அதை அனுபவிக்க குறைவான காலமே இருக்கலாம், உதாரணமாக மூன்று ஆண்டுகள். எனக்குத் தெரியவில்லை. அந்த அடிப்படையில், மீண்டும் உலகிற்கு திரும்ப 2,00,000 டாலர்கள் முதலீடு என்பது ஒரு நியாயமான ஒப்பந்தம் போல் தெரிகிறது” என்று அவர் கூறுகிறார்.

தங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் 60 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்கள் என்றும், ஆயுள் காப்பீடு மூலம் செயல்முறையின் கட்டணங்களுக்கு நிதியளிப்பதாகவும் அவர் கூறுகிறார் (இது நிறுவனம் மூலமாகவோ அல்லது சுயாதீனமாகவோ ஏற்பாடு செய்யப்படலாம்).

கிரையோனிக்ஸ், டுமாரோ பயோ

பட மூலாதாரம், Getty Images

51 வயதான லூயிஸ் ஹாரிசனைப் பொறுத்தவரை, அவர் இந்த செயல்முறைக்கு கையெழுத்திட்டது ‘ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டு’.

“எதிர்காலத்தில் ஒரு புதிய வாழ்க்கைக்கு, மீண்டும் உயிர்பிக்கப்படலாம் என்ற யோசனையால் நான் ஈர்க்கப்பட்டேன். இது காலப் பயணத்தின் ஒரு வடிவம் போல் தோன்றியது,” என்று அவர் கூறுகிறார்.

“இதில் திரும்பி வருவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு இருப்பது கூட ஒரு தர்க்கரீதியான தேர்வாகத் தோன்றியது.” என்கிறார் ஹாரிசன்.

உறுப்பினர் கட்டணம் மற்றும் ஆயுள் காப்பீட்டிற்காக மாதத்திற்கு சுமார் $87 (7,535 ரூபாய்) செலுத்தும் ஹாரிசன், தனது முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறுகிறார்.

“மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், ‘மீண்டும் வருவது எவ்வளவு கொடுமையானது, நமக்கு தெரிந்த அனைவரும் இருக்கமாட்டார்கள் அல்லவா’ என்று. ஆனால் அது என்னைத் தடுக்கவில்லை. நாம் வாழ்நாள் முழுவதும் தெரிந்த, நெருக்கமான மனிதர்களை இழக்கிறோம், ஆனாலும் தொடர்ந்து வாழ ஒரு காரணத்தை தேடுகிறோம் அல்லவா?” என்கிறார் ஹாரிசன்.

சமீபத்திய கொரோனா பெருந்தொற்று, மரணம் மற்றும் உடலைப் பாதுகாப்பதற்கான உந்துதல் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அந்த காரணத்திற்காக தான் டுமாரோ பயோ நிறுவனம் சில லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவரின் நினைவகம், அடையாளம் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் நரம்பியல் கட்டமைப்பை இந்த வருடத்திற்குள் பாதுகாப்பது, பின்னர் 2028க்குள் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் இருந்து மீட்டுக் கொண்டுவருதல்.

“திட்டமிட்டபடி அனைத்தும் நடக்குமா என என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. இருப்பினும், குறைந்தபட்சம் தகனத்துடன் ஒப்பிடும் போது, இந்த செயல்முறையில் உயிர்ப்பித்தலுக்கான வாய்ப்பு அதிகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் கெண்ட்சியோரா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU