SOURCE :- BBC NEWS

இன்றைய டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

44 நிமிடங்களுக்கு முன்னர்

இன்றைய (18/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரூ.525 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தின் கீழ், சுமார் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியன அமைய உள்ளன. இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகளும் அமைக்கப்படும். 2025-ம் ஆண்டின் இறுதி அல்லது 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் அரங்கத்தின் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இந்த அனுமதி கிடைத்தவுடன் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான கட்டுமானத்திற்கு தேவையான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுவதாக தினத்தந்தி தெரிவித்துள்ளது.

இன்றைய டாப் 5 செய்திகள்

பெரம்பலூரில் போலீஸார் கண் முன்பாகவே இளைஞர் படுகொலை

பெரம்பலூர் அருகே ​முன்​விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சு​வார்த்​தைக்கு போலீ​ஸார் சென்​ற​போது, அவர்​களது முன்னிலை​யிலேயே இளைஞர் கொலை செய்​யப்​பட்​டதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெரம்​பலூர் மாவட்டம் வேப்​பந்​தட்டை அருகே கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​த, நெல் அறுவடை இயந்​திர ஓட்டுநராகப் பணிபுரியும் மணிகண்​டன்​, தேவேந்​திரன் ஆகிய இருவருக்கம் முன்​விரோதம் இருந்துள்ளது. மணிகண்டன் புகாரின் பேரில், தலைமைக் காவல் ஸ்ரீதர், ஊர்க்​காவல் படை வீரர் பிரபு ஆகியோர் இரு தரப்​பினரிடையே சமாதானம் செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்கள் மணிகண்டனை அழைத்​துக் கொண்டு, கை.களத்​தூர் காந்தி நகர் பகுதி​யில் உள்ள நெல் அறுவடை இயந்திர உரிமை​யாளர் அருண் என்பவரின் வயலுக்​குச் சென்​றனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தேவேந்​திரன், போலீ​ஸாருடன் வந்த மணிகண்டனை சரமாரியாக வெட்​டியதில் அவர் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்​கள், மணிகண்டன் உடலை எடுத்​துக் கொண்டு கை.களத்​தூர் காவல் நிலை​யத்​தின் முன் வைத்து, நீதி கேட்டு மறியலில் ஈடுபட்​டனர். அப்போது சிலர் காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்​கினர். இதில் காவல் நிலை​யத்​தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதையடுத்து காவல் நிலையம் பூட்​டப்​பட்டு, அங்கு போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

இன்றைய டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கர்நாடகாவில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி நகை, பணம் கொள்ளை

கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே கூட்டுறவு வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி நகை, பணம் கொள்ளையடிக்கப்ட்டிருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மங்களுருவில் கோட்டேகார் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு வெள்ளிக்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் அரிவாள், கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. வங்கி ஊழியர்கள், அங்கிருந்த பொதுமக்கள் ஆகியோரை மிரட்டிய அந்த கும்பல், வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அந்த கும்பல் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

வங்கியில் கொள்ளையடித்த அந்த கும்பல் கேரளாவுக்குள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து அவர்கள் தேடி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி கூறுகிறது.

இன்றைய டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கருப்பு மையால் எழுதப்பட்ட காசாலை செல்லாதா?

கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை இந்த மாதம் முதல் செல்லாது. நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட காசோலைகள் மட்டுமே வங்கிகளால் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பக சமூக ஊடக கணக்கு மறுத்துள்ளது.

“காசோலைகளில் எழுதும் போது குறிப்பிட்ட கலர் மையை பயன்படத்தவது தொடர்பாக பரிந்துரை செய்து ரிசர்வ் வங்கி எந்தவிதமாக அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பகிரப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் அரிசி பிரச்னைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு – நாமல் கருணாரத்ன

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு பிரச்னைக்கு 2 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று அந்நாட்டின் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியிருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தற்போது நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் விவசாயிகள் நெல் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வோம். சிறிய, நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறன. அதனால் அரிசி பிரச்னையில் இருந்து நாங்கள் வெளியில் வருவோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரிசி பிரச்சினை நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. நாங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் இருந்தது. என்றாலும் அரசாங்கம் என்வகையில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் இந்த பிரச்சினை இந்த வருட இறுதியில் மீணடும் சந்திக்க ஏற்பட்டால் மாத்திரம் எங்களது பிரச்சினையாக மாறும், அந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். அதனால் அரிசி பிரச்சினை நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை” என்று கூறியதாக வீரகேசரி இணையதளம் கூறுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU