SOURCE :- BBC NEWS

கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.

கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

“கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.

இதையடுத்து அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் தொடர்ந்து 100 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தீவிர வானிலை நிகழ்வுகளால் 3200 பேர் உயிரிழப்பு

2024-ம் ஆண்டு தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழந்துள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வருடாந்திர காலநிலை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

“இந்தியாவில் இது வரையிலான மிக வெப்பமான ஆண்டான 2024-ல் 1,374 பேர் இடி, மின்னலுக்கு பலியாகியுள்ளனர், வெள்ளம் கனமழை காரணமாக 1,287 பேர் உயிரிழந்துள்ளனர், வெப்ப அலை காரணமாக 459 பேர் உயிரிழந்துள்ளனர். இடி மற்றும் மின்னலுக்கு பிஹார் மாநிலத்தில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களில் கேரளாவில் அதிகமானவர்கள் உள்ளனர்” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களை தவிர உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை, அதிக உயிரிழப்புகள் கொண்ட முதல் ஐந்து மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

“தேசிய வானிலை தரவுகள் ஆவணப்படுத்தத் தொடங்கிய 1901-ம் ஆண்டு முதல் இது வரையிலான காலத்தில் 2024ம் ஆண்டு தான் மிகவும் வெப்பமான ஆண்டு என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர வானிலை நிகழ்வுகளால் 3200 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீசா கைது செய்தனா் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரிக்கு வெளியே உள்ள கடைக்கு புதன்கிழமை சென்றபோது, அங்கு பணியாற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் (30) என்ற நபா், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது குறித்து, சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி – தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீா்க் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனா்.

போலீசார் அந்த நபரைப் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடா்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

வளாகத்துக்குள் குடியிருப்பவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி

பட மூலாதாரம், Madras IIT

இலங்கை ஜனாதிபதி சீனா குறித்துக் கூறியது என்ன?

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல துறைகளிலும் ‘ஒரே சீன’ கொள்கையில் இலங்கை முன்னிற்கும் என்று சீனா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக இலங்கை நாளிதழ் வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியில் சீனா வரலாற்றுக் காலம் முதல் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயம் சீனா – இலங்கை நாட்டு மக்களின் அடையாளம் மற்றும் அபிவிருத்திக்கு பலமுடையதாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சீனாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதன்கிழமை (15) சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சீன அதிபருடன் பீஜிங் தலைநகரில் உள்ள சீன மக்கள் மண்டபத்தில் இலங்கையுடனான உறவு தொடர்பில் உரையாற்றியதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன விஜயத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால திட்டங்களை தெளிவுப்படுத்தி உரையாற்றினார்.

பொருளாதார கைத்தொழில் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகியவற்றில் சீனாவின் அபரிமிதமான முன்னேற்றம் குறித்து இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் சீனாவின் கொள்கையுடன் முன்நிற்கிறது” என்று இலங்கை ஜனாதிபதி கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், Getty Images

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU