SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலையை மீட்டெடுப்பது என்பது பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதியாகும்.
2019-ஆம் ஆண்டில், மத்திய அரசு 370வது பிரிவை நீக்கியது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போது, பிரதமர் மோதி 370வது பிரிவு தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
”370வது பிரிவு என்பது காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் கூறியிருந்தார்.
அப்போதிருந்து பஹல்காம் தாக்குதல் வரை, மோதி அரசாங்கம் தனது ஆட்சியின் 10 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் அமைதியின் புதிய யுகம் பிறந்துவிட்டது என்று கூறி வந்தது.
செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதலாகக் கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றில் மிகப்பெரிய கேள்வி மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கை பற்றியது.
அதாவது, அரசின் கொள்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது? இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் வருமா?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில்களை அறிய, பிபிசி ஹிந்தி சில நிபுணர்களிடம் பேசியது.
காஷ்மீர் கொள்கையும் மோதி அரசாங்கத்தின் கூற்றுகளும்

பட மூலாதாரம், Getty Images
‘ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவருவது’ என்பதே, 2014 முதல் மோதி அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. மோதி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, 370வது பிரிவை ரத்து செய்தது. இது அங்கு நிலைமையை இயல்பாக்கும் என்று அரசாங்கம் கூறியது.
இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கி வீடு கட்டலாம் என்று அரசாங்கம் அறிவித்தது.
சுற்றுலாவும் பாதுகாப்பும் இந்தக் கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்தன. 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் பலமுறை கூறியுள்ளது.
புள்ளிவிவரங்களும் இதைப் பிரதிபலிக்கின்றன. 2024ஆம் ஆண்டில், 34 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தனர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு புதிய சாதனையாகும்.
இது தவிர, ஜம்மு காஷ்மீரில் பல அடிப்படை உள்கட்டமைப்புகளும் அரசாங்கத்தால் கட்டப்பட்டன. பல சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டன. இது ஜம்மு காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளை இணைக்க உதவியது.
இந்த ஆண்டு பிரதமர் மோதி சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதை சோனாமார்க் மற்றும் காகங்கீர் பகுதியை இணைக்கிறது. இந்த திட்டத்திற்கு தோராயமாக ரூ.2700 கோடி செலவிடப்பட்டது.
உயர்கல்விக்காக பல கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. சித்ராவில் ஒரு கோல்ஃப் மைதானம் கூட கட்டப்பட்டது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசாங்கத்தால் டேப்லட் சாதனங்கள் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, ஜம்மு காஷ்மீரின் அசாதாரண சூழல் முடிவுக்கு வந்துவிட்டது, தீவிரவாத அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று மத்திய அரசு தனது நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டில் 370வது பிரிவு நீக்கப்பட்டது. அதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டில் பிரதமர் மோதி முதல் முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் வருகை புரிந்தார். ஸ்ரீநகரில் ஒரு பெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “காஷ்மீரிகள் இப்போது ‘சுதந்திரமாக சுவாசிக்கிறார்கள்'” என்று கூறினார்.
“370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உச்சங்களை ஜம்மு காஷ்மீர் தொட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் சுதந்திரமாக சுவாசிக்க முடிகிறது. பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகே இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது. பல்லாண்டுகளாக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஜம்மு காஷ்மீர் மக்களையும், இந்திய நாட்டையும் 370 பிரிவு குறித்த விஷயத்தில் தவறாக வழிநடத்தின,” என்று அவர் கூறினார் .
இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. 2017ஆம் ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் எட்டு பயணிகள் உயிரிழந்தனர்.
2019ஆம் ஆண்டு 370வது பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் தேவை என்ன?

பட மூலாதாரம், Getty Images
மோதல் மேலாண்மை மையத்தின் (Institute of Conflict Management) ‘பயங்கரவாத எதிர்ப்பு’ நிபுணர், அஜய் சாஹ்னியுடன் பிபிசி பேசியது.
“பயங்கரவாத எதிர்ப்பைப் பொறுத்தவரை, இந்த அரசாங்கம் இதற்கு முன்பு நடக்காத எதையும் செய்யவில்லை. முன்பு இருந்த கொள்கை இன்னும் அப்படியே உள்ளது. இது தீவிரவாதத்திற்கு எதிராக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் வளர்ச்சியைக் கொண்டு வந்ததாக முன்பு கூறினர். இப்போது முதலீட்டைக் கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை. ஒருவேளை 2, 3 சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதுபோன்ற சாலைகள் முன்பும் போடப்பட்டன. மோதி சுரங்கப்பாதையை திறந்து வைத்தாலும், அவரது காலத்தில் அது கட்டப்படவில்லை.” என்கிறார்.
‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்பது பாதுகாப்புப் படைகளின் வெற்றி மட்டுமே, அரசாங்கத்தின் வேலை ‘கொள்கையை வகுப்பதும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும்’ ஆகும் என்கிறார் அஜய் சாஹ்னி.
சாஹ்னியின் கூற்றுப்படி, இந்த அம்சத்தில் மோதி அரசாங்கம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
“பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்பது பாதுகாப்புப் படைகளின் வெற்றி மட்டுமே. இதற்கு முன்பும் அதில் சில தோல்விகள் ஏற்பட்டுள்ளன. அதிலிருந்து கற்றுக்கொண்டு, மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர் படைகளின் திறன் சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
“பாதுகாப்புப் படைகளின் வேலை அரசியல் பிரச்னைகளைத் தீர்ப்பது அல்ல. ஒரு பகுதி அல்லது அதன் மக்கள் மீதான கட்டுப்பாட்டை ஒரு குறிப்பிட்ட அளவிற்குதான் அவர்களால் உங்களுக்குக் கொடுக்க முடியும். அதன் பிறகு, அரசியல் முன்முயற்சி தேவை. அது நடக்கவில்லை.” என்கிறார் அஜய் சாஹ்னி.
“இங்கு நிலவும் அரசியல் என்பது, பிளவுபடுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் விதமாக மற்றும் இந்துக்களைத் தூண்டும் விதமாக ஒன்றைச் சொல்கிறார்கள் அல்லது செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார் சாஹ்னி.
“இந்த விஷயங்களை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் முழுவதையும் இந்திய அடையாளத்திற்குள் கொண்டு வர வேண்டும். அது பிளவுபடுத்தும் அடையாளமாக இல்லாமல், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அடையாளமாக இருக்க வேண்டும்.” என்றும் சாஹ்னி கூறுகிறார்.
மோதி அரசாங்கத்தின் பிம்பம் பாதிக்கப்பட்டுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவம் மத்திய அரசின் பிம்பத்திலும் அதன் காஷ்மீர் கொள்கையிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், “இது அரசாங்கத்தின் பிம்பத்திற்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. பிரச்னை என்பது அடிமட்ட அளவில்தான். ஜம்மு காஷ்மீர் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கை.”
“ஜம்மு காஷ்மீர் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாத் துறையில் மக்களின் நம்பிக்கையை வளர்க்க நீண்ட காலம் தேவைப்பட்டது. இப்போது பாதுகாப்பு என்பது மீண்டும் ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஆனால் இது ஜம்மு காஷ்மீர் குறித்த அரசாங்கத்தின் கொள்கையை மாற்றாது.” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடுகிறார்கள். முஸ்லிம் இளைஞர்களும் போராடுகிறார்கள். இப்போது அரசாங்கத்தின் முதல் பணி ஜம்மு காஷ்மீர் குறித்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது. காரணம், அது இந்திய சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும். மாநிலத்தின் பொருளாதாரமும் பலவீனமடையும்” என்று கூறினார்.
மோதி அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கை

பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், ஜம்மு காஷ்மீர் நிபுணர்கள் மத்திய அரசின் வாக்குறுதிகள் பொய்யானவை என்றும், அது உண்மையான பிரச்னையை மறைப்பதற்கான ஒரு ‘திரை’ மட்டுமே என்றும் நம்புகிறார்கள்.
‘காஷ்மீர் பல்கலைக்கழகத்தின்’ அரசியல் நிபுணரும் பேராசிரியருமான நூர் அகமது பாபா, அரசாங்கம் தனது காஷ்மீர் கொள்கையை செயல்படுத்தத் தவறிவிட்டது என்று கூறுகிறார்.
“370வது பிரிவு நீக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் வேரோடு பிடுங்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு, ஜம்மு காஷ்மீரின் முழு பாதுகாப்புக் கட்டுப்பாடும் மத்திய அரசின் கைகளில் இருந்தது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
மேலும், “அதன் பிறகு, நிலைமை சீராகி, சுற்றுலா மேம்பட்டு வந்தது. இருப்பினும், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால், ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றும் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்றும் கூறப்பட்டது”
“ஆனால், செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதல், இந்தக் கூற்றுகளை எல்லாம் மறுப்பதாக உள்ளது” என்று நூர் அகமது கூறுகிறார்.
அவரது கருத்துப்படி, “இது பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வியாகும், மத்திய அரசின் அதீத தன்னம்பிக்கையின் விளைவாகும். இப்போது ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுகிறது என்று மத்திய அரசு இனி கூறுவது கடினம். இந்த சம்பவம் ஒரு வகையில் மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் தொடர்பான கொள்கையின் தோல்வியாகும்” என்று அவர் கூறினார்.
சூழ்நிலைகள் முன்பே மாறிவிட்டனவா?

பட மூலாதாரம், Getty Images
‘மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின்’ (MP-IDSA) உறுப்பினரான ஆதில் ரஷீத்துடனும் பிபிசி பேசியது.
“2019ஆம் ஆண்டு பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதனுடன், வளர்ச்சியும் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆரம்பத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை இருந்தது, அது இப்போது முடிவுக்கு வருகிறது” என்று ஆதில் ரஷீத் கருதுகிறார்.
“இதற்கு ஆதாரம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு ஒரு பேரணி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன் பின்னர், மசூதிகளில் இருந்து இமாம்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்தனர். ஜம்மு காஷ்மீரின் அனைத்து சமூகங்களும் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. இது அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு அறிகுறியாகும்” என்று அவர் கூறுகிறார்.
“ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான எந்தவொரு கொள்கையிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், ஒரு பயனுள்ள பாதுகாப்புக் கொள்கை நிச்சயமாக வரும்” என்று அவர் கூறுகிறார்.
“மத்திய அரசை விமர்சிக்கும் முக்கிய விமர்சகர்கள் கூட ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஜம்மு காஷ்மீரின் சாதாரண மக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்” என்று ஆதில் ரஷீத் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் நோக்கத்தோடு கருத்துக்களைக் கூறுபவர்கள் எப்போதும் அதே நிலையில்தான் இருப்பார்கள். ஆனால் களத்தில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்கள் நிலைமை மேம்பட்டுள்ளதாக நம்பிக்கையுடன் உள்ளனர்.” என்கிறார்.
“இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தாலும், அதுவே தொடர்கதையாக இருக்கும் என மக்கள் கருத மாட்டார்கள். இது நிச்சயமாக மிகப் பெரிய தாக்குதல்தான். இராஜதந்திர மற்றும் ராணுவ மட்டத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அங்குள்ள மக்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலவீனமடையும் என்று நான் நினைக்கவில்லை” என்று ஆதில் ரஷீத் கூறுகிறார்.
(பிபிசி நிருபர் ஜுகல் புரோஹித்தின் கூடுதல் தகவல்களுடன்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU