SOURCE :- INDIAN EXPRESS
சிலர் அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ஹேர் வாஷ் செய்து கொள்வதை பழக்கமாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படி செய்யும் போது அரிதாக பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் என்கிற பாதிப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Hidden health risk of having your hair washed
சரியான கோணத்தில் அமராமல் பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ் செய்யும் போது கழுத்தில் காயம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை சில நேரத்தில் அரிதாக உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பக்கவாதத்திற்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது.
பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் என்பது முதன்முதலில் 1993-ஆம் ஆண்டு அமெரிக்க நரம்பியல் நிபுணரான மைக்கேல் வெய்ன்ட்ராப் என்பவரால் கண்டறியப்பட்டது. பக்கவாதம் ஏற்பட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வரும் சிலர், அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ஹேர் வாஷ் செய்வதை அவர் தெரிந்து கொண்டார்.
மூளைக்கு செல்லக் கூடிய இரத்த ஓட்டத்தில் திடீரென தடை ஏற்படுவதால் பக்கவாத பாதிப்பு உருவாகிறது. இது பொதுவாக இரத்தம் உறைவதால் ஏற்படும் அடைப்பு அல்லது மூளையில் உள்ள ஒரு பெரிய இரத்த நாளம் வெடிப்பது போன்றவற்றால் உருவாகிறது. இதனால் ஆக்ஸிஜன், குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவு குறைகிறது. மேலும், மூளையில் இருக்கும் அணுக்கள் சேதமடைகின்றன.
பியூட்டி பார்லரில் சாய்வான நாற்காலியில் அமர்ந்து, வாஷ் பேசினில் பின்புற தலையை வைத்து தான் ஹேர் வாஷ் செய்யப்படும். இப்படி அமர்ந்திருக்கும் போது சிலருக்கு பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கோணத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை எனவும், முதுகு தண்டு பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் இளைஞர்களுக்கு அரிதாக உருவாகிறது. உடல்நல பாதிப்புடைய 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
2002 முதல் 2013 வரை 10 பேருக்கு இந்த பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டதாக சுவிஸ் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தலைவலி, தலைச்சுற்றல், மங்கலான பார்வை, குமட்டல், கழுத்தில் வலி ஆகியவை இதற்கான அறிகுறிகள்.
எனவே, பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ் மேற்கொள்ளும் போது நீங்கள், வலி அல்லது அசவுகரியமாக உணர்ந்தால் உடனடியாக ஹேர் ட்ரெஸ்ஸரிடம் தெரியப்படுத்தி, உங்களுக்கு ஏதுவான அமைப்பில் அமர்வது நல்லது. இதனால் பாதிப்புகளை தடுக்க முடியும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS