SOURCE :- BBC NEWS

உடலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள் கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்

பட மூலாதாரம், Getty Images

பலர் அதிக பருமனாக இருப்பதாக தவறாகக் கண்டறியப்படும் அபாயம் உள்ளது, அதனால் ‘மிகவும் துல்லியமான’ மற்றும் ‘நுணுக்கமான’ வரையறை தேவைப்படுகின்றது என்று உலகளாவிய நிபுணர்களின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளின் ‘உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ)’ மட்டுமே நம்பாமல், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மருத்துவர்கள் உற்றுநோக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

உடல் எடையால் ஏற்படும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ‘கிளினிக்கல் உடல் பருமன்’ அதாவது ‘மருத்துவ சிகிச்சை தேவைப்படும் உடல் பருமன் கொண்டவர்கள்’ என்று கண்டறியப்பட வேண்டும்.

அதே சமயம், உடல்நலப் பிரச்னைகள் இல்லாதவர்கள் ‘ப்ரீ-கிளினிக்கல் உடல் பருமன் கொண்டவர்கள்’, அதாவது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதற்கு முன்பான நிலையில் உடல் பருமன் உடையவர்கள் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பரிந்துரைக்கப்பட்ட எடை குறைப்பு மருந்துகள் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

தி லான்செட் டயாபடீஸ் அண்ட் எண்டோகிரைனோலஜி எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களால் ஆதரிக்கப்படுகிறது.

பிஎம்ஐ என்பது ஒரு நபரின் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உடல் கொழுப்பை மதிப்பிடுவதாகும்

பட மூலாதாரம், Getty Images

உடல் பருமன் – ‘மறுவரையறை தேவை’

இந்தக் குழுவின் தலைவரான லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பிரான்செஸ்கோ ரூபினோ, “உடல் பருமன் என்பது வேறுபாடுகள் உடையது” என்று விளக்குகிறார்.

“சிலர் உடல் பருமன் கொண்டுள்ளனர், அதனுடன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்கள்” மற்றவர்கள் நடப்பதற்கும், சுவாசிப்பதில் சிரமத்தையும், சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவற்கும், சிக்கலை ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னைகளால் சிரமப்படுகிறார்கள் என்றும் பேராசிரியர் பிரான்செஸ்கோ குறிப்பிட்டார்.

உடல் பருமன் காரணமாக தற்போது ஆரோக்கியமாக உள்ள நோயாளிகளுக்கும் ஆனால் எதிர்காலத்தில் நோய்கள் உருவாகும் அபாயத்தில் உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய உடல் பருமனை ‘மறுவரையறை’ செய்ய வேண்டுமென இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

உடல் பருமனை மதிப்பிடுவதற்கான புதிய அணுகுமுறை

பட மூலாதாரம், Getty Images

தற்போது பல நாடுகளில், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 30க்கு மேல் உள்ளவர்கள் உடல் பருமன் கொண்டவர்களாக வரையறுக்கப்படுகிறது.

பிஎம்ஐ என்பது ஒரு நபரின் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உடல் கொழுப்பை மதிப்பிடுவதாகும்.

30க்கு மேல் பிஎம்ஐயுடன், உடல் பருமனால் அதிக ஆபத்துகள் ஏற்படும் சூழ்நிலையில் உள்ள நபர்களுக்கு மட்டுமே வீகோவி மற்றும் மௌஞ்சரோ போன்ற எடை குறைப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.

பிரிட்டனின் பல பகுதிகளில், சில எடை மேலாண்மை சேவைகளுக்குத் தகுதிபெற, மக்கள் தங்கள் எடை தொடர்பான சுகாதார நிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்று தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடுகின்றது.

ஆனால் பிஎம்ஐ ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றிய முழுமையான தகவலை கொடுக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

மேலும், இடுப்பு மற்றும் பிற உறுப்புகளைச் சுற்றியுள்ள தசை மற்றும் கொழுப்புக்கு இடையேயான வித்தியாசத்தைக் காட்டுவதில் பிஎம்ஐ தோல்வியடைகிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கான மாற்றாக, உடல் பருமனை மதிப்பிடுவதற்கான புதிய அணுகுமுறையை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதய நோய், மூச்சுத் திணறல், வகை 2 நீரிழிவு அல்லது மூட்டு வலி போன்ற நோய்களைப் போலவே, உடல் பருமன் உடலில் உள்ள உறுப்புகளை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் இந்த சிக்கல்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதில் கவனம் செலுத்த பரிந்துரைக்கின்றனர்.

உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

உடல் பருமன் என்பது மருத்துவ நோயாக மாறியுள்ளது மற்றும் அதற்கு தகுந்த சிகிச்சை தேவை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

‘ப்ரீ கிளினிக்கல் உடல் பருமன்’ (மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதற்கு முன்பான நிலையில் உள்ள உடல் பருமன்) உள்ள நபர்களுக்கு, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக எடை குறைப்பு ஆலோசனை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை வழங்குமாறும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மேலும், இந்த அறிக்கை குறிப்பிடும் அணுகுமுறைகள், உடல்நலப் பிரச்னைகள் உருவாகும் வாய்ப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், சிகிச்சையும் தேவைப்படலாம் எனவும் சுட்டிக்காட்டுகின்றது.

‘தேவையற்ற சிகிச்சை முறைகள்’

உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

“உடல் பருமன் என்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், வித்தியாசம் என்னவென்றால், இது சிலருக்கு ஒரு நோயாக மாறுகின்றது” என்று கூறும் பேராசிரியர் ரூபினோ உடல் பருமனைச் சார்ந்துள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

உடல் பருமன் குறித்து தற்போதைய, “தெளிவற்ற பார்வையை” நம்புவதற்குப் பதிலாக, அதிக மக்கள்தொகை சார்ந்துள்ள சிக்கல்களை நன்கு புரிந்துகொள்வதற்கு, உடல் பருமனை மறுவரையறை செய்வது உதவி செய்யும் எனவும் பேராசிரியர் ரூபினோ நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், பிஎம்ஐ மட்டும் பயன்படுத்துவதை விட, ஒரு நபரின் ஆரோக்கியத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற, விரிவான மருத்துவ வரலாற்றுடன் கூடிய இடுப்பு-உயரம் விகிதங்கள் அல்லது நேரடி கொழுப்பு அளவீடுகளைப் பயன்படுத்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் உடல் பருமன் நிபுணரான பேராசிரியர் லூயிஸ் பாரும் அறிக்கைக்கு பங்களித்துள்ளார்.

இந்த புதிய அணுகுமுறை, உடல் பருமன் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இரண்டு தரப்பினரும் “மிகவும் பொருத்தமான கவனிப்பைப் பெற உதவும்”, மேலும் உடல் பருமன் இருப்பதாகத் தவறாக கண்டறியப்பட்டு தேவையில்லாத சிகிச்சைகள் அளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் என்று பேராசிரியர் லூயிஸ் நம்புகிறார்.

உடல் எடையை 20 சதவீதம் வரை குறைக்கும் மருந்துகள் பரவலாக பரிந்துரைக்கப்படும் இந் நேரத்தில், உடல் பருமனை “மறுவரையறை” செய்வது “மிகவும் பொருத்தமானது” என்று அறிக்கை கூறுகிறது, ஏனெனில் இது “நோயறிதலின் துல்லியத்தை மேம்படுத்துகிறது”.

பிஎம்ஐ ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றிய முழுமையான தகவலை கொடுக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images

‘வரையறுக்கப்பட்ட நிதி’

மற்ற நீண்ட கால நோய்களைப் போலவே, “உடல் பருமனுக்கும் அதே போன்ற கவனத்துடனும் இரக்கத்துடனும் சிகிச்சையளிப்பதற்கான உறுதியான அடிப்படையை இந்த அறிக்கை வழங்குகிறது” என்று ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் தெரிவித்துள்ளது.

‘ப்ரீ கிளினிக்கில் உடல் பருமன்’ மற்றும் ‘கிளினிக்கல் உடல் பருமன் ஆகியவற்றை வேறுபடுத்துவது “ஒரு முக்கிய படியாக” இருக்கும்.

இதனால் நோய் குறித்து “முன்கூட்டியே கண்டறிந்து தலையிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியும்” .

அதே சமயம், ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான கவனிப்பை உறுதி செய்யவும் உதவும் என்றும் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் வலியுறுத்தியது.

ஆனால் “உடல் பருமனுக்கு முந்தைய பிரிவில்” உள்ளவர்களுக்கு அழுத்தத்தில் உள்ள சுகாதாரத் திட்டங்கள் குறைவாக நிதியளிக்கும் என்ற கவலைகள் உள்ளன.

“மருத்துவ ரீதியாக பருமனானவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது”, மேலும் அந்த குறைந்த நிதியுதவியும் “அவர்களுக்கு வழங்கப்படலாம்” என்று நியூசிலாந்தின் ஒடாகோவில் உள்ள எட்கர் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குனரான பேராசிரியர் சர் ஜிம் மான் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU