SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது உண்மையான நண்பர்கள் யார் என்று யோசிப்பது தற்போது இயல்பானதாக இருக்கலாம்.
ஏனென்றால் முன்பு சீனா, ரஷ்யா மீது இருந்த வெனிசுவேலாவின் வலுவான நம்பிக்கை இப்போது நிச்சயமற்றதாக மாறியுள்ளது.
பல ஆண்டுகளாக, இந்த இரண்டு நாடுகளும் வெனிசுவேலாவின் சோசலிச அரசாங்கத்திற்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ஆதரவை வழங்கின. இந்த உறவு மதுரோவின் வழிகாட்டியும் முன்னாள் அதிபருமான ஹியூகோ சாவேஸ் காலத்தில் தொடங்கியது.
ஆனால், இந்த ஆதரவு இப்போது பெரும்பாலும் ஒரு அடையாளமாக மட்டுமே மாறிவிட்டது என்றும், உறுதியான ராணுவ அல்லது பொருளாதார உதவியைக் காட்டிலும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஆதரவு உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா கரீபியன் கடலில் தனது விமானப்படை மற்றும் கடற்படை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், உளவு விமானங்கள் மற்றும் 15,000 துருப்புகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி அமெரிக்கா பல கப்பல்களைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், அமெரிக்கா வெனிசுவேலா கடற்கரையில் ஒரு எண்ணெய்க் கப்பலை கைப்பற்றியது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக ராணுவம் ஈடுபடுத்தப்படுவதாகவும் கைப்பற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஏற்கனவே தடை செய்யப்பட்டது என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், வெனிசுவேலாவில் அமெரிக்காவின் உண்மையான நோக்கம் ஆட்சி மாற்றம் தான் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர். மதுரோவும் இதைத் தான் கூறுகிறார்.
வெனிசுவேலா அதிபருக்கு அதிகமான ஆதரவு தேவைப்படும் நேரத்தில், களச் சூழலில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? வெனிசுவேலாவின் நட்பு நாடுகளாக கருதப்படும் ரஷ்யாவும், சீனாவும் அமைதி காப்பது ஏன்?
‘வெறும் வார்த்தைகளால் மட்டுமே ஆதரவு’
பட மூலாதாரம், Getty Images
சிலியில் உள்ள ஆண்ட்ரேஸ் பெல்லோ பல்கலைக் கழகத்தின் சீன ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் ஃபெர்னாண்டோ ரேய்ஸ் மாட்டா கூறுகையில், “அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற பிறகு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வெனிசுவேலாவுக்கு வழங்கும் முன்னுரிமை குறைந்துள்ளது” என்றார்.
“இன்று, வெனிசுவேலாவிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்க ரஷ்யாவுக்கோ அல்லது சீனாவுக்கோ கட்டாயமான காரணம் எதுவும் இல்லை,” என்று ரேய்ஸ் மாட்டா கூறுகிறார்.
“ரஷ்யா யுக்ரேன் போரில் சிக்கியுள்ளது. மறுபுறம் சீனா, அமெரிக்க அதிபர் டிரம்புடன் சர்வதேச அளவில் இணக்கமாக இருக்க முயற்சிக்கிறது”என்கிறார் அவர்.
2022-இல் யுக்ரேன் மீது படையெடுத்தது முதலே தனது அதிகப்படியான வளங்களை அந்த மோதலில் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. மறுபுறம், ரஷ்யா மேற்குலகின் கடுமையான தடைகளையும் எதிர்கொண்டுள்ளது.
கொலம்பியாவின் இஸ்ஸெய் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் ஆய்வக இயக்குநரான பேராசிரியர் விளாடிமிர் ருவின்ஸ்கியின் கூற்றுப்படி, முன்பு ரஷ்யாவின் ஆதரவால் பயனடைந்த நட்பு நாடுகளுக்குத் தர ரஷ்யாவிடம் தற்போது குறைவான வளங்களே உள்ளன.
மத்திய கிழக்கில் ரஷ்யாவின் பழைய நட்பு நாடுகளான சிரியா மற்றும் இரான் ஆகிய நாடுகளும் சமீப காலங்களில் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.
“ரஷ்யா ஏற்கனவே உள்ளதை விட அதிகத் தடைகளை எதிர்கொள்ளும் அபாயத்தை விரும்பாது. அதேபோல் மதுரோவைப் பாதுகாப்பதற்காக, அதிக வரிகளை எதிர்கொள்ளும் அபாயத்தை சீனாவும் விரும்பாது” என்று பேராசிரியர் ருவின்ஸ்கி கூறுகிறார்.
சீனா மற்றும் ரஷ்யாவிடம் ராணுவ உதவியை நாடிய மதுரோ
பட மூலாதாரம், Getty Images
‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்திப்படி, மதுரோ அக்டோபர் மாத இறுதியில் சீனா மற்றும் ரஷ்யாவிடம் ராணுவ உதவியை நாடியிருந்தார்.
ரஷ்ய ஊடகங்களின்படி, கிரெம்ளின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ்,”வெனிசுவேலா எங்களுக்கு ஆதரவளிப்பதைப் போலவே, நாங்களும் வெனிசுவேலாவுக்கு ஆதரவளிக்கிறோம்”என்று கூறினார்.
நெருக்கடியை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும் டிரம்ப் நிர்வாகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கா எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய பிறகு, மதுரோவுடன் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசி தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கிரெம்ளின் கூறியது.
ஆனால், இதுவரை ரஷ்யா எந்தவொரு உறுதியான உதவியையும் வழங்கவில்லை.
ரஷ்யாவைப் போலவே, சீனாவும் வெனிசுவேலாவை ராணுவ ரீதியாகப் பாதுகாப்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. அது “வெளிப்புறத் தலையீடு கூடாது” என்று கூறியதுடன், நிதானமாக செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தது.
சீனாவைப் பொறுத்தவரை, மதுரோவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பது, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான சமீபத்திய ராஜ்ஜீய முன்னேற்றத்தை ஆபத்துக்குள்ளாக்கக் கூடும் என்றும், அதற்கு பதிலாக சீனாவுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் பல நாடுகளுக்கு வரி விதித்ததில் இருந்து அமெரிக்கா-சீனா உறவு பதற்றமாகவே இருந்தது.
அக்டோபர் மாத இறுதியில் தென் கொரியாவில் நடந்த டிரம்ப் – ஜின்பிங் சந்திப்பு, புதிய ஒப்பந்தங்களுக்கான சாத்தியக்கூறு மற்றும் சில பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கான வழியைத் திறந்தது.
வெனிசுவேலாவுக்கு உதவ ரஷ்யா, சீனா முன்வராதது ஏன்?
பட மூலாதாரம், AFP via Getty Images
நிபுணர்களின் கூற்றுப்படி, வெனிசுவேலாவின் பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் அதன் எண்ணெய் துறையின் மோசமான நிலை ஆகியவை சீனாவை பின்வாங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தியுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் சீனா புதிதாக கடன் வழங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளதுடன், பழைய கடனை வசூலிப்பதில் கவனம் செலுத்துகிறது.
“எதிர்காலத்தில் மதுரோவுக்குப் பதிலாக அமையும் எந்த அரசுடனும் பேச்சு நடத்த சீனா தயாராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் மதுரோவை வலுவாக ஆதரிப்பது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சீனா நினைக்கிறது”என பேராசிரியர் ருவின்ஸ்கி கூறுகிறார்.
“தன் நாட்டில் மிகக் குறைந்த மக்கள் ஆதரவைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை ஆதரிக்க ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளும் தயாராக இல்லை”என்று பேராசிரியர் ரேய்ஸ் மாட்டா கருதுகிறார்.
“கடைசியாக நடந்த அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததற்கான தெளிவான அறிகுறிகள் இருந்ததை ரஷ்யாவும் சீனாவும் அறிந்திருக்கின்றன”என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தல் ஜூலை 2024 இல் நடைபெற்றது, அதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் ஆதிக்கம் செலுத்திய தேசிய தேர்தல் கவுன்சில், மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. ஆனால், முந்தைய தேர்தல்களைப் போல விரிவான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கோன்சலஸ் வெற்றி பெற்றார் என்பதைக் காட்டும் தேர்தல் பதிவுகளை இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா மச்சாடோ தலைமையிலான கட்சி வெளியிட்டது.
“இந்த முறை, மதுரோ முற்றிலும் தனித்து விடப்பட்டுள்ளார்,” என்கிறார் பேராசிரியர் ருவின்ஸ்கி.
மதுரோவின் நேரம் “முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் கருதுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்கத் தலையீட்டை ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து விமர்சிக்கலாம். ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்ய அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் முன்பு அளித்து வந்த ஆதரவு இப்போது வெறும் வார்த்தைகளாக சுருங்கிவிட்டது. களத்தில் அந்த ஆதரவு இனி இல்லை”என்றார்.
(கூடுதல் அறிக்கை : பிபிசி குளோபல் ஜர்னலிசம் )
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU







