SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், US Department of the Treasury
பல மாதங்கள் நீடித்த பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, யுக்ரேனின் கனிம மற்றும் எரிசக்தி இருப்புக்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் யுக்ரேனும் அமெரிக்காவும் கையொப்பமிட்டன.
யுக்ரேனின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்வதற்கான பொருளாதார ஊக்கத்தை வழங்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், யுக்ரேனுக்கு ஏற்கனவே தங்கள் நாடு செய்துள்ள உதவியின் அளவு தொடர்பான அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யுக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம், லித்தியம் என பல்வேறு முக்கியமான கனிமங்கள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ராணுவ தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்பட பல முக்கியமான துறைகளுக்கு பயன்படும் என்பதால் இந்த கனிமங்களுக்கு சர்வதேச அளவில் தேவை அதிக அளவில் உள்ளது.

பட மூலாதாரம், EPA
யுக்ரேனில், நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
போரினால் சிதிலமடைந்திருக்கும் யுக்ரேனின் பொருளாதாரத்தை உத்வேகத்துடன் மேம்படுத்துவதற்காக முதலீட்டு நிதியை உருவாக்குவது தொடர்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க-யுக்ரேன் மறுசீரமைப்பு முதலீட்டு நிதியம், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுத்ததிலிருந்து அமெரிக்கா வழங்கிய “குறிப்பிடத்தக்க நிதி மற்றும் பொருள் ஆதரவை” அங்கீகரிக்கிறது என புதன்கிழமை பிற்பகல் அமெரிக்க கருவூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், ”யுக்ரேன் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைக்க, அதன் வளங்களை சிறப்பாக பயன்படுத்த உதவும்” என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம், முன்னெப்போதையும் விட யுக்ரேனுடன் நெருக்கமாகவும் ஒற்றுமையுடன் செயல்படுவதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.
இது “ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை” குறிக்கிறது மற்றும் “ரஷ்யாவின் இந்த போர் முயற்சிக்கு நிதியளித்த அல்லது ஆதரவளித்த நாடுகளும், நபர்களும் மறுகட்டமைப்பட்ட யுக்ரேனால் பயனடைய முடியாது” என்று அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா மற்றும் யுக்ரேன் இடையிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், Daniel Wittenberg/BBC
அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உதவியை பெறுவதற்காக யுக்ரேனுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக புதன்கிழமையன்று வாஷிங்டனுக்கு சென்ற யுக்ரேனின் துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ, “புதிய நிதியம், நமது நாட்டிற்குள் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் விதிகளை பட்டியலிட்ட யுக்ரேனின் துணைப் பிரதமர், கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான திட்டங்களையும் இது உள்ளடக்கும் என்றும், ஆனால் வளங்கள் யுக்ரேனின் சொத்தாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த கூட்டாண்மை, 50:50 அடிப்படையில் சமமாக இருக்கும் என்றார் அவர்.
இருப்பினும் யுக்ரேன் நாடாளுமன்றத்தால் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், யுக்ரேனுக்கு அமெரிக்கா புதிய உதவிகளை வழங்கும் என்று கூறிய யுக்ரேனின் துணைப் பிரதமர், உதாரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவிகள் கிடைக்கும் கூறினார்.
எதிர்காலத்தில் யுக்ரேனுக்கு எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்குவதற்கு முன்நிபந்தனையாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
முக்கியமாக, அமெரிக்கா எதிர்காலத்தில் வழங்கும் பாதுகாப்பு உதவிக்கு ஈடாக, யுக்ரேன் தன் நாட்டின் சில இயற்கை வளங்களை அணுக அமெரிக்காவை அனுமதிக்கும் என ஒப்பந்தத்தின் வரைவு குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இது டிரம்ப் விரும்பியதை விட குறைவாகவே இருக்கும். போர் தொடங்கியதிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து அமெரிக்க ராணுவ உதவிகளுக்கும் யுக்ரேனிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே அமெரிக்காவின் இன்றைய அதிபரின் எண்ணமாக இருந்தது.
யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியால் அமெரிக்காவிடம் இருந்து, சில சலுகைகளைப் பெற முடிந்தது. கடைசி நிமிட மாற்றங்களைச் செய்ய எதிர் தரப்பு முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து ஒப்பந்தம் கையொப்பமாவதில் தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்களை நன்கு அறிந்த ஒரு அமெரிக்க வட்டாரம், வார இறுதியில் செய்யப்பட்ட சில விதிமுறைகளை மீண்டும் மாற்ற யுக்ரேன் முயற்சித்ததாக விமர்சித்தது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கும் ஆவணங்களில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கடந்த வாரம் கையெழுத்திட்டனர்
உண்மையில் ஆரம்ப ஒப்பந்தம் இந்த ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்திடப்படவிருந்தது. டிரம்ப், ஸெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட சூடான விவாதத்தைத் தொடர்ந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில், டிரம்பும் ஸெலென்ஸ்கியும் நேரில் சந்தித்துப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், யுக்ரேனில் போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை மாலை நியூஸ் நேஷன் நெட்வொர்க்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஒப்பந்தத்தை இறுதி செய்யவேண்டும் என வாடிகனில் தான் ஸெலென்ஸ்கியை சந்தித்தபோது அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.
“இரு நாடுகளும் கையெழுத்திடுவதற்கு தேவையான ஒப்பந்தத்தை உருவாக்குவது ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என ஸெலன்ஸ்கியிடம் நான் தெரிவித்தேன்,” என்றும், “ஏனென்றால் மிகப் பெரிய நாடான ரஷ்யா மிகவும் வலிமையானது, முன்னேறிச் செல்கிறது” என்றும் டிரம்ப் கூறினார்,
ரஷ்ய-யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய பல பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளுக்கான பலனை அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறும் என்றும் “உண்மையில் செய்த உதவிகள் இன்னும் அதிகமாக” இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.
“உலகின் பல இடங்களில் இல்லாத பல அரிய பொருட்கள் அவர்களிடம் உள்ளன, அது அவர்களிடம் உள்ள ஒரு பெரிய சொத்து.”
பூமியில் அரிதாக இருக்கும் வளங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் சீனாவுடன், வர்த்தகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கும் இந்த சமயத்தில் யுக்ரேனுடனான அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU