SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், X/V_Senthilbalaji
3 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், TNDIPR
கரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சருமான செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் பணி நியமனம் முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி என்ன?
அ.தி.மு.கவின் முக்கியப் பொறுப்பாளராக விளங்கிய செந்தில் பாலாஜி, 2011-ஆம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அமைச்சரவையில் அவருக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில் அவர், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான நியமனங்களுக்கு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2015-ஆம் ஆண்டில் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை தரவில்லையெனக் தேவசகாயம் என்பவர் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீதும் அவரது சகோதரர் அசோக் உள்பட வேறு நாற்பது பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்தது.
அதே ஆண்டு ஜூலை 27-ம் தேதி அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா.
இடையே ஜெயலலிதா இறந்துவிட, அவர் , டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருந்துவந்தார் செந்தில் பாலாஜி. ஆனால், விரைவிலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறி, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.
ஆனால் அதே ஆண்டில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பட மூலாதாரம், DMK/www.dmk.in
வழக்கு கடந்து வந்த பாதையும் கைதும்
செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு அவர் மீதான வழக்குகளை நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால் இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அன்று செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
அவருடைய மின்சாரத் துறை இலாகா, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டது. மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை எஸ் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.
9 மாதங்களாக அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். பிறகு அவர் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி அன்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். வந்த மூன்று நாட்களுக்குள் அவருடைய இலாகா அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு அமைச்சர் பதவியை உறுதி செய்தார் முதல் அமைச்சர் முக ஸ்டாலின்.

பட மூலாதாரம், Getty Images
ஜாமீனா அமைச்சர் பதவியா?
அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது’ எனக் கூறியது.
மேலும், ‘ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC