SOURCE :- BBC NEWS

ரயில்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்றைய (26/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

அரக்கோணம் – சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேட்டுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

“அரக்கோணம் – சென்னை ரயில் மாா்க்கத்தில் அரக்கோணம் – திருவள்ளூர் ரயில் நிலையங்களுக்கு இடையே திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மாற்றுப்பாதை பகுதிக்கான சிக்னல் வேலை செய்யாததால், ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த இணைப்பில் இருந்த பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டிருப்பதையும், போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனா். பணியாளர்கள் தண்டவாளங்களில் சோதனை நடத்தியபோது, மற்றொரு இடத்திலும் தண்டவாளத்தில் இதேபோல் பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டு போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மேலும், ”இதையடுத்து ரயில்வே நிலைய அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இரண்டு சம்பவங்களும் விரைவு ரயில்கள் செல்லும் இருப்புப் பாதையில் நடைபெற்றிருந்தது. இதனால், அந்த இரு இருப்புப் பாதைகளிலும் விரைவு ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புறநகர் ரயில்களுக்கான இரு தண்டவாளங்களில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு இருப்புப் பாதை பராமரிப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் இரு இடங்களையும் பாா்வையிட்டு பிஷ் பிளேட்டுகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, தண்டவாளம் சீரமைக்கப்பட்டது.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டிருப்பதில் இருந்து இது சதி வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இச்செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனித்தனியே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு மாதம் ரூ.200க்கு இணைய சேவை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம், TNDIPR

வீடுகளுக்கு மாதம் ரூ.200க்கு இணைய சேவை வழங்கப்படும் என, தமிழ்நாடு தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் முதல்படியாக இதுவரை ஏற்கெனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன” என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவில்கூட நினைக்காத வகையில் தண்டனை’: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவில்கூட நினைக்காத வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என, நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், “காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் இயற்கையாகவே அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்.

இதை செய்தவர்களையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

இனி இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய அவர்கள் கனவில்கூட நினைக்கக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவாக அதை செய்ய வேண்டும்” என கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல்

யானை

பட மூலாதாரம், Getty Images

சிறப்பு உளவு மற்றும் விசாரணை அமைப்பான எஸ்.ஐ.ஐ.பி(SIIB)-யை சேர்ந்த அதிகாரிகள், கடந்த புதன்கிழமை ஏழு பேர் கொண்ட கும்பலிடமிருந்து 25 கிலோ எடை கொண்ட இரு தந்தங்களை பறிமுதல் செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை, கே.கே. நகரில் உள்ள மினி ஹாலில் இருந்து இதை பறிமுதல் செய்துள்ளனர்.

அச்செய்தியில், “முதலில் கிளப் ஒன்றில்தான் இந்த ஏழு பேரும் தந்தங்களுடன் சந்திப்பதாக இருந்த நிலையில், பின்னர் மினி ஹாலுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ளனர். அப்போதும், அதிகாரிகள் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து தந்தங்களை பறிமுதல் செய்துள்ளது. அந்த ஏழு பேரும் புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் ” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர் யாரும் தப்பிக்க முடியாது’

 அருண் ஹேமச்சந்திர

பட மூலாதாரம், ANI

ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாரும் இம்முறை தப்பிக்க முடியாது என, இலங்கை வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளதாக, வீரகேசரி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு களுதாவளை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கான காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளின் அடிப்படையில்தான் கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை எதிர்த்தரப்பினர் அரசியல் பழிவாங்கல் என யோசிக்கின்றார்கள். எதிர்க்கட்சியினர் இதுவரை காலமும் அவர்கள் ஊழல்களில் ஈடுபட்டிருந்தால் அதனை அவர்களாகவே ஒப்புக்கொள்ள வேண்டுமாறு நாங்கள் கூறுகின்றோம். இல்லாவிட்டால் இனிவரும் காலங்களிலாவது எந்த ஒரு ஊழல் மோசடியிலும் ஈடுபட வேண்டாம் என நாங்கள் தெரிவிக்கின்றோம்.

கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் எந்தவித அரசியல் தடைகளும் இல்லை. நாங்கள் எந்தவித விசாரணைகளிலும் கைதுகளிலும் எந்தவித தலையீடுகளையும் மேற்கொள்வதில்லை.

ஆனால், ஊழல் மோசடியில் ஈடுபட்டு படுகொலைகளில் ஈடுபட்டு ஆட் கடத்தல்களில் ஈடுபட்ட யாரும் இம்முறை தப்பிக்க முடியாது அரசாங்கம் அந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது.

கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. இந்த ஊழல்வாதிகளுக்கு இந்த மோசடிக்காரர்களுக்கும் ஆள்கடத்தல்காரர்களுக்கும் படுகொலை செய்தவர்களுக்கும் வாக்களிப்பதற்கு மக்கள் இருக்கின்றார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தினால் அவர்கள் வாக்களிப்பதற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

மக்களுக்கு நாம் கூறிக் கொள்வதெல்லாம் தயவுசெய்து மீண்டும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்” என தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU