SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
1 மே 2025, 06:49 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது.
திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார்.
அவர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கான விளம்பரத்தைப் பார்த்து, திருவண்ணாமலையில் இருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022ஆம் ஆண்டில் இணைந்தார். 2023இல் படிப்பை முடித்து தீட்சையும் பெற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வரும் எனக் காத்திருக்கிறார்.
“எப்போதாவது புரோகிதத்திற்கு அழைப்பார்கள். அங்கு செல்வேன். என் தந்தையார் செயின் பாலீஷ் போடும் கடை வைத்திருக்கிறார். மீதி நேரத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார். தான் படிப்பை முடித்தவுடன் எந்தக் கோவிலில் பணி செய்ய விருப்பம் போன்ற தகவல்களையெல்லாம் அதிகாரிகள் வாங்கிச் சென்றதாகக் குறிப்பிடும் அவர், அதற்குப் பிறகு அது தொடர்பாக ஏதும் நடக்கவில்லை என்கிறார்.

அர்ச்சகர் நியமனத்தில் ஏற்படும் தாமதங்கள்
கோகுல்நாத்தாவது படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் 2007 – 2008ஆம் ஆண்டில் துவங்கிய முதல் பயிற்சி வகுப்பில் தனது அர்ச்சகர் படிப்பை முடித்தவர்.
இப்போது அவர் ராசிபுரத்திலேயே உள்ள சிறிய கோவில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். புரோகிதம் செய்யும் வாய்ப்பு வந்தால், அதற்கும் சென்று வருகிறார். “2007-2008இல் முடித்தவர்களில் 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் சிலர் இறந்துவிட்டனர். படித்து முடித்தவர்களில் 50 சதவிகிதம் பேர் புரோகிதம் போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வருகின்றனர். பூணூல் எல்லாம் அணிந்து தீட்சை பெற்ற பிறகு, இதை விட்டுவிட்டுப் போக முடியவில்லை” என்கிறார் விஜயகுமார்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் பயிற்சிப் பள்ளிகளில் தங்கள் படிப்பை முடித்து, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்த இருவரைப் போல 200க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள்களுக்கு பூஜை செய்யச் செல்வதற்கான பாதையின் வழியை வழக்குகள் மறித்து நிற்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து சில பரிந்துரைகளை அளித்தது.
பயிற்சி முடித்தும் வேலைக்காக காத்திருக்கும் அர்ச்சகர்கள்

அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அர்ச்சகராக்கும் நோக்கத்தில், 2007ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.
அதில் திருவல்லிக்கேணி, திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ கோவில்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மீதமுள்ள நான்கு இடங்களில் சைவ கோவில்களுக்கான அர்ச்சகர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
கடந்த 2007 – 2008ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்தப் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டபோது, மொத்தமாக 240 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் நடுவிலேயே விலகிவிட, 207 பேர் பயிற்சியை மொத்தமாக முடித்து 2008இல் தீட்சை பெற்றனர். இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, தடை ஆணையைப் பெற்றது. இதனால், இந்த மாணவர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என்ற கருத்து நிலவியதால், பணி நியமனம் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அர்ச்சகர் நியமனமும் சட்டப் போராட்டங்களும்

இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளை வரையறை செய்யும் விதிகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டது.
அந்தப் புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இரு சிறிய கோவில்களில் இருவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பணிவாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், 2021இல் புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி 28 பேருக்குப் பணி வாய்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் இந்த நியமனங்களை எதிர்த்து மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து புதிய நியமனங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதும், மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நடத்தத் துவங்கியது தமிழ்நாடு அரசு. 2022-23இல் 94 பேரும் 2023 – 24இல் 111 பேரும் அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர். 2024 – 2025இல் 95 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்தந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்ட இழுபறி

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்பதைப் போலத் தோன்றினாலும் உண்மையில் அது வெற்றியல்ல என்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். “அதற்குக் காரணம், ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதனால், ஆகம கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை இந்தத் தீர்ப்பால் ஏற்பட்டது” என்கிறார் அவர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், சில வைதீக அமைப்புகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. “இந்த வழக்கில் அவர்கள் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தால்கூட அர்ச்சகர்களை அரசு நியமிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்” என்கிறார் வாஞ்சிநாதன்.
அடுத்ததாக, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. சுகவனேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப அந்தக் கோவிலின் செயல் அலுவலர் கடந்த 2018இல் அறிவிப்பாணை வெளியிட்டார்.
ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோவிலில் பரம்பரை அர்ச்சகராகப் பணியாற்றி வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், “ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு சாதி தடையாக இருக்காது” என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images
மேலும், திருச்சி வயலூர் கோவிலில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின் கீழ் இரு அர்ச்சகர்களை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த நியமனங்கள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அர்ச்சகர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகி, அந்தத் தீர்ப்பிற்குத் தடையாணை பெறப்பட்டுள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இப்படி அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாகப் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பயிற்சி முடித்தவர்களின் காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது.
“நாங்கள் அரசை நம்பிப் படித்தோம். இதுவரை வேலை கோரி மனு அளிப்பதைத் தவிர எந்தப் போராட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டதில்லை. எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வழங்கப்படும் வரை எங்களுக்கு ஏதாவது ஒரு உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் எங்களுக்கு அதுவொரு சிறிய ஆறுதலாகவேனும் இருக்கும்” என்கிறார் விஜயகுமார்.
இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்க இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு ஆகியோரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இத்துறையின் கூடுதல் தலைமைச் செயலரான கே. மணிவாசனிடம் இது குறித்துக் கேட்டபோது இது தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தால்தான் இந்த விவகாரத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். புதிய நியமனங்களை மேற்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது.
ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை எதிர்கொள்கிறோம்” என்கிறார் கே. மணிவாசன். இடைப்பட்ட காலத்தில் அந்த மாணவர்கள் உதவித்தொகை கோருவது குறித்துக் கேட்டபோது, “அதில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். என்ன நடக்கிறதென பார்க்கலாம்” என்று மட்டும் பதிலளித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC