SOURCE :- BBC NEWS

அல்காட்ராஸ் சிறைச்சாலை, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவருடைய சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்று என்ற மோசமான பெயரை இந்த சிறை பெற்றிருந்தது.

1963ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டு அல்காட்ராஸ் தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.

பிபிசி தமிழ், வாட்சாப்

“இன்று நான், கணிசமாக விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட அல்காட்ராஸ் சிறைச்சாலையைத் திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என டிரம்ப் எழுதியுள்ளார்.

மேலும் அவர் இந்தச் சிறைச்சாலை அமெரிக்கா மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறைவைக்கும் என்றார்.

ஏற்கனவே சந்தேகத்திற்கு உரிய நபர்களை எல் சால்வடார் சிறைக்கு அனுப்பும் தன் கொள்கைக்காக நீதிமன்றங்களுடன் மோதி வருகிறார் டிரம்ப். கடந்த மார்சில் 200-க்கும் மேற்பட்ட வெனிசுவேலா குண்டர்கள் என கூறப்படும் நபர்களை அங்கு அனுப்பியிருந்தார். அதே போல் உள்ளூர் குற்றவாளிகளை வெளிநாட்டு சிறைகளுக்கு அனுப்புவது பற்றியும் டிரம்ப் பேசியிருந்தார்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அல்காட்ராஸ் முதலில் ஒரு கடற்படை பாதுகாப்பு கோட்டையாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு ராணுவ சிறைச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டது. 1930களில் நீதித்துறை இதைக் கட்டுப்பாட்டில் எடுத்து மத்திய சிறைச்சாலைகளில் உள்ள தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை இங்கே சிறைவைக்க ஆரம்பித்தது. இதன் மிகவும் பிரபலமான சிறைவாசிகள் அல் கபோன், மிக்கி கோஹன் மற்றும் ஜார்ஜ் “மெஷின் கன்” கெல்லி ஆவர்.

இங்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது பறவைகள் மீது ஆர்வத்தை வளர்த்து பின்னர் பறவையியல் துறையின் நிபுணரான ராபர்ட் ஸ்ட்ரோட் பற்றிய திரைப்படமான பர்ட்மேன் ஆப் அல்காட்ராஸ் 1962ஆம் ஆண்டு வெளியானது.

பர்ட் லான்காஸ்டர் நடித்த இந்த திரைப்படத்தின் மூலமும் இந்த சிறைச்சாலை பிரபலமானது.

பர்ட்மேன் ஆப் அல்காட்ராஸ்

பட மூலாதாரம், Getty Images

அதே போல் சீன் கானரி மற்றும் நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான தி ராக் இதை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டது. அல்காட்ராஸ் தீவிலிருந்து பணையக் கைதிகளை காப்பாற்றும் ஒரு பிரிட்டானிய விமானப் படை கேப்டன் மற்றும் எஃப்பிஐ வேதியியலார் பற்றிய திரைப்படம் தான் தி ராக்.

அமெரிக்க மத்திய சிறைத்துறை இணையதளத்தின்படி, இந்தச் சிறைசாலை தொடர்ந்து இயக்குவதற்கு அதிக செல்வானதால் மூடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவின் அமைவிடத்தால் மற்ற எந்த மத்திய சிறைச்சாலை விடவும் இதை இயக்குவதற்கு மூன்று மடங்கு அதிக செலவாகும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU