SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
2 மணி நேரங்களுக்கு முன்னர்
இடைக்கால ஐரோப்பாவில், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உயர்கல்வி பயின்ற பெண்ணைப் பற்றி ஒரு கதை பரவத் தொடங்கியது. பல்கலைக்கழகக் கல்வி பயில்வதற்காக அவர் ஆண் போல் உடையணிந்து ரோம் நகருக்குப் பயணித்தார். அங்கு அவர் திருச்சபையின் தரவரிசையில் உயர்ந்து பின்னர் 855 மற்றும் 857க்கு இடைப்பட்ட காலத்தில் போப்பாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஊர்வலத்தின்போது தெருவில் குழந்தையைப் பிரசவித்த பிறகு, அவர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரது போப் பதவி வியத்தகு முறையில் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டோ அல்லது இயற்கையான காரணத்தாலோ இறந்ததாக இருவேறு விதமாகச் சொல்லப்படுகிறது.
இடைக்கால நூல்களில், அயோனன்ஸ் ஆங்கிலிகஸ் அல்லது ஜான் தி இங்கிலிஷ்மேன் என்று அறியப்படும் போப் ஜோனின் கதை, பல நூற்றாண்டுகளாகக் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு பெரும்பாலான அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அது தொடர்ந்து சொல்லப்படுகிறது.

பெண்களை பழமையான பொறுப்புகளிலேயே வைத்திருக்க கத்தோலிக்க திருச்சபையால் அவரது கதை ஓர் எச்சரிக்கையாகப் பயன்படுத்தப்பட்டது. சீர்திருத்தத்திற்குப் பிறகு, கத்தோலிக்க மதத்தின் நியாயத்தன்மையையும் ரோமின் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த புராட்டஸ்டன்டுகள் இந்தக் கதையைப் பயன்படுத்தினர்.
அவரது கதை இன்று புனைகதைகள், நாடகம் மற்றும் திரைப்படங்களில் வாழ்கிறது.
ஆனால் போப் ஜோனின் புராணக்கதை எவ்வாறு உருவானது? அது ஏன் நீடிக்கிறது? கத்தோலிக்க திருச்சபையால் அது எவ்வாறு பார்க்கப்பட்டது?
போப் ஜோன் கதையின் தோற்றம்
அவர் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இந்தக் கதை முதன்முதலில் எழுதப்பட்டது. இருப்பினும் அது ஏற்கெனவே வாய்மொழியாகப் பரவி வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஜீன் டி மெயில்லி, போர்பனின் ஸ்டீபன், போலந்தின் மார்ட்டின் ஆகிய எழுத்தாளர்களின் மூன்று பண்டைய பதிப்புகள் உள்ளன. அவை மிகவும் ஒத்துப் போகின்றன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கூறுகளை இந்தக் கதைக்குச் சேர்க்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
அவர்களின் கூற்றுப்படி, ஜோனா ஜெர்மன் நகரமான மைன்ஸில் ஆங்கில பெற்றோரின் மகளாகப் பிறந்தார். ஆனால், அவரது பெற்றோரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.
அவர் இளமையாக இருந்தபோது, தனது காதலனுடன் வீட்டை விட்டு தப்பித்துச் சென்று ஓர் ஆணாக மாறுவேடமிட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழக கல்வியைப் பெறும் நோக்குடன் ஏதென்ஸுக்கு சென்றனர். அங்கு அவர் அந்தச் சூழலில் சிறந்து விளங்கினார். ஒரு முக்கியமான அறிஞராக கருதப்பட்டார்.
பிறகு அவர் அதேபோல ஆணாக உடையணிந்து ரோம் நகருக்குச் சென்றார். தன்னை ஜோன் என்று அழைத்துக்கொண்டு ஓர் ஆசிரியராகி, பிரபுக்கள் மற்றும் சமூகத்தில் முக்கியமான சீடர்களுக்கு இலக்கணம், தர்க்கம் மற்றும் சொல்லாட்சிக் கலையைக் கற்பித்தார்.
அவர் தனது கல்வித் திறமைக்காக மட்டுமின்றி, தனது ஒழுக்க நேர்மைக்காகவும் நற்பெயரைப் பெற்றிருந்தார். திருச்சபையின் அணிகளில் உயர்ந்து நிற்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்தார்.
“அந்தக் காலத்தில் மதகுருமார்களின் உடை ஓர் அங்கியைப் போன்றது. மேலும், ஒரு பெண்ணின் உடலை மறைப்பது மிகவும் எளிதாக இருந்திருக்கும்,” என்று பிரிட்டனில் உள்ள லிங்கன் பல்கலைக்கழகத்தில் இடைக்கால வரலாற்றில் கௌரவப் பேராசிரியராக இருக்கும் கேத்தரின் லூயிஸ் பிபிசியின் இன் அவர் டைம் என்ற நிகழ்ச்சியில் கூறினார்.
“அவர் ஓர் ஆணைப் போல் உடையணிந்திருப்பது அவசியம். இல்லையெனில் அவர் கல்வியைப் பெறவோ அல்லது மதகுருப் பணியை ஏற்கவோ முடியாது. ஏனெனில், பெண்கள் பாதிரியார் பதவிகளைப் பெறுவது தடை செய்யப்பட்டிருந்தது,” என்று கேத்தரின் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்கள் கூறிய கதையின்படி, அவர் ஒரு கார்டினலாக வளர்ந்தார். அதோடு 855இல் இறந்த பதினைந்தாவது லியோவின் வாரிசாக ஒருமனதாக போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் இரண்டு ஆண்டுகள், ஏழு மாதங்கள், நான்கு நாட்கள் போப் ஆண்டவராக இருந்தார். அவர் அந்தப் பதவியில் இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டிருப்பார் என்று கேத்தரின் லூயிஸ் கூறுகிறார். ஆனால், “உச்சபட்ச போப் ஆண்டவருக்கு அவசியமான பிரமச்சாரி வாழ்வு முறையை அவர் பின்பற்றியிருக்க மாட்டார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது காதலனுடன் உறவைத் தொடர்ந்ததாகவும், அதன் விளைவாக கர்ப்பமாகி, ஊர்வலத்தின்போது வியத்தகு முறையில் பிரசவித்ததாகவும், அதன் மூலம் அவரது உண்மையான அடையாளம் வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தத் தருணம் வரை, அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால், இந்த நிகழ்வால் அவர் ஒரு கொடூரமான மரண தண்டனைக்கு ஆளானார். ஒரு விவரிப்பின்படி, அவரது கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, குதிரையால் நகரத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டார். அதே நேரத்தில் ஆத்திரம் கொண்ட ஒரு கும்பலால் அவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
மற்ற பதிப்புகளில், “அவருக்கு திருச்சபையால் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. ஆனால் மனம் மாறி, ஒரு மடத்தில் ஓய்வு பெறுகிறார், அவளுடைய மகன் ஒரு பிஷப்பாக மாறுகிறார்” என்று விவரிக்கப்பட்டுள்ளது.
‘உண்மை நிலைக்கான ஓர் உவமையே ஜோன்’

பட மூலாதாரம், Getty Images
போப் ஜோனின் கதை ஒரு புனைகதை என்று பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இடைக்கால கதைசொல்லிகள்கூட அதை ஒரு வதந்தி என்று நிராகரிக்கின்றனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இடைக்கால மற்றும் மறுமலர்ச்சி ஆங்கிலப் பேராசிரியர் அந்தோணி பேல், இந்தக் கதையை விளக்குவதற்கு மற்றொரு வழி இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் அது கடுமையான வரலாற்று அர்த்தத்தில் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
“இது தார்மீக ரீதியாக உண்மையாக இருக்க வேண்டும். சமகால ஒழுக்கத்தைப் பற்றி நமக்குச் சொல்வது பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் பிபிசியின் இன் அவர் டைம் நிகழ்ச்சியில் கூறினார்.
“இந்தக் கதையே உண்மையைப் பற்றிய ஓர் உவமையாகப் படிக்கப்படலாம். ஜோன் தன்னை ஓர் ஆணாகக் காட்டிக் கொள்ளவும், ஆணாகக் கல்வி பயிலவும், ஒரு நல்ல போப்பாகவும் இருக்க முடியும் என்று இந்தக் கதை அறிவுறுத்துகிறது. ஆனால், எப்படி இருந்தாலும் அவர் ஒரு பெண்”
பெண் வெறுப்பின் அடையாளம்

பட மூலாதாரம், Getty Images
இந்தப் புராணக் கதை பல நூற்றாண்டுகளாகத் தீவிரம் பெற்றது. நூற்றுக்கணக்கான விரிவாக்கங்கள், அலங்காரங்கள் மற்றும் மிகைப்படுத்தலுடன் தீவிரமாகப் பேசப்பட்டது.
சில பதிப்புகள் 13ஆம் நூற்றாண்டின் நிலையைத் தக்க வைத்துக்கொள்கின்றன. ஆனால், பின்னர் எழுத்தாளர்கள் ஆபாசமான கூறுகளைச் சேர்த்து ஜோனை ஒரு கொடூரமான அல்லது தீய செல்வாக்கு கொண்டவராகக் காட்டி களங்கப்படுத்துகிறார்கள்.
இத்தாலிய கவிஞர் போக்காசியோ (1313-1375), இந்தக் கதையைத் தனது படைப்பான டி முலியரிபஸ் கிளாரிஸ் (பிரபலமான பெண்கள் பற்றி) என்ற தனது நூலில் சேர்த்துள்ளார். இது வரலாற்றிலும் புராணத்திலும் பேசப்படும் பெண்களின் வாழ்க்கை வரலாறுகளின் தொகுப்பு.
அவரது கதையில் இரண்டு பகுதிகள் உள்ளதாக ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் இடைக்கால ஆங்கில இலக்கியப் பேராசிரியரான லாரா கலாஸ் விளக்குகிறார். ஒன்று நேர்மறையானது. அதில் அவர் ஜோனின் புத்திசாலித்தனம் மற்றும் கலாசாரத்தைப் புகழ்கிறார். மற்றொரு பகுதியில், நம்ப முடியாத அளவுக்குப் பெண் வெறுப்பு காட்டப்பட்டு, அதில் அவர் ஜோனை ஒரு விசித்திரமானவர் என்று விவரிக்கிறார்.
“இந்த எழுத்தாளர் தனது வாசகர்களை மகிழ்விக்கத் தனது கதையில் மிகவும் ஆபாசமான விவரங்களைச் சேர்த்திருந்தார் என்று நான் நினைக்கிறேன்,” என்று கலாஸ் பிபிசியிடம் கூறீனார்.
“எழுத்தாளர் தனது வாசகர்களை மகிழ்விக்க தனது கதையின் மிகவும் ஆபாச விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது பகுதியில் அவருக்குக் கொந்தளிப்பான பாலியல் பசி இருப்பதாகக் காட்டுகிறது,” என்று கலாஸ் பிபிசியிடம் கூறினார்.
எழுத்தாளர் போக்காசியோ ஜோனை ஏவாளுடன் ஒப்பிட்டு, திருச்சபைக்கு அவமானத்தை ஏற்படுத்திய ஒரு தீய பெண்ணாக வகைப்படுத்துவதாகத் தெரிகிறது. ஆனால், அவரது காலத்திலேயே வாழ்ந்த பெட்ராச் ஒரு படி மேலே சென்று, ஜோனி செயல்கள் இயற்கைச் சமநிலையைத் தொந்தரவு செய்வதாகக் குறிப்பிட்டு வியத்தகு முறையில் எழுதினார் என்கிறார் கலாஸ்.
“ஜோனின் பாலினம் வெளிப்படும்போது, இத்தாலியின் தெருக்களில் மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு ரத்த மழை பெய்ததாக பெட்ராச் விவரிக்கிறார். பிரான்சில் ஆறு இறக்கைகள் மற்றும் சக்தி வாய்ந்த பற்களைக் கொண்ட ராட்சத நன்றுகள் தோன்றியதாகவும் அவர் எழுதினார்” என அவர் விவரித்தார்.
கத்தோலிக்கர்களுக்கு எதிராக புராட்டஸ்டன்ட்

பட மூலாதாரம், Getty Images
இந்த அசாதாரண விவரணைகளைக் கருத்தில் கொண்டு, திருச்சபையில் சிலர் இதை மிகவும் அபத்தமான கதை என்று நினைத்தார்கள். அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தார்கள். ஆனால் “கதைக்கு யாரும் உண்மையில் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை” என்று கேத்தரின் லூயிஸ் சுட்டிக்காட்டுகிறார்.
பின்னர், 16ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய கிறிஸ்தவம் துண்டு துண்டாகப் பிரிந்து, சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தது. அப்போது, கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டுகளுக்கும் இடையிலான கோட்பாட்டு விவாதங்களில் ஜோன் ஒரு சுவாரஸ்யமான பங்கைக் கொண்டிருந்தார்.
புராட்டஸ்டன்டுகள் போப்பின் அதிகாரத்தை மறுப்பதால், போப் ஆண்டவர் பதவியைச் செல்லாததாக்க ஒரு பெண் போப் இருந்தார் என்ற கருத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
முரண்பாடாக, இடைக்கால வரலாற்று ஆசிரியர்களின் வார்த்தைகளை ஒருபோதும் நம்பாத சில புராட்டஸ்டன்டுகள், ஜோனின் இருப்பு பற்றி அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று லூயிஸ் கூறுகிறார்.
“பிற்காலத்தில் இந்தக் கதையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதை முதலில் பொய்யாக்கியவர்கள் கத்தோலிக்கர்கள்தான்.”
மதகுருமார் பணியில் இருந்து பெண்களை விலக்குதல்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வால்டர் புரூட், ஜான் விக்ளிஃப் போன்ற சீர்திருத்தவாதிகள், கத்தோலிக்க திருச்சபை பெண்களைத் தவறாக நடத்துவதாக வாதிட்டனர்.
போப்பை “ஆண்டிகிறிஸ்ட்(கிறிஸ்துவுக்கு எதிரானவர்)” என்று அழைத்ததற்காக ஒரு மதவெறி விசாரணையின்போது, திருச்சபையில் பெண்களுக்கு ஒரு பெரிய பங்கை நியாயப்படுத்த, ஜோனின் உதாரணத்தைப் பயன்படுத்தினார் புரூட். நற்கருணையைப் புனிதப்படுத்த அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இது கத்தோலிக்க அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட ஒரு திட்டம். அதோடு, நவீன திருச்சபையில் வெறுப்பூட்டும் ஒன்றாக இன்றும் உள்ளது.
மேலும் இடைக்காலம் முதல், ஜோனின் புராணக்கதை பெண்கள் ஏன் திருச்சபைக்கு நியமிக்கப்படக்கூடாது, ஏன் திருச்சபையில் அவர்களின் பங்கு கடுமையாக அல்லது முழுமையாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்த ஒரு வழியாகப் பயன்படுத்தப்பட்டது.
இடைக்காலத்தில், பெண்கள் தங்கள் உடலியல் காரணமாக, ஆண்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். மேலும் சில கருத்துகளுக்கு அதிக எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் கருதப்பட்டனர் என்பதை பேராசிரியர் லாரா கலாஸ் எடுத்துரைத்தார்.
“அவர்களின் உடல்கள் அதிக மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதாகக் கருதப்பட்டன. மேலும் ஒழுக்கக்கேடான கருத்துகளுக்கு ஏற்புடையவர்களாகவும் இருப்பதாகவும் சொல்லப்பட்டன,” என்று கலாஸ் கூறினார். அதோடு, “இயற்கையானவை பற்றிய இந்த வகையான கருத்துகள், நடத்தை நெறிமுறைகள் மற்றும் திருச்சபை கட்டமைப்புகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்படத் தொடங்கின” என்றார்.
திருச்சபையில் பெண்களுக்கு எதிரான இந்த எச்சரிக்கையின் விளைவாக, ஒரு புதிய போப் ஆண்டவரின் பாலினத்தைச் சரிபார்க்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு நாற்காலி பற்றிய ஒரு வினோதமான கதையும் எழுந்தது.
பிரகடனத்திற்கு முன்பு, போப் ஒரு துளை கொண்ட ஒரு நாற்காலியில் அமர வேண்டும். ஒரு சிறிய மதகுரு தடவி, அவர் ஒரு ஆணாக இருக்கிறாரா என்று சரிபார்த்து “அவருக்கு விதைப்பைகள் உள்ளன” என்று கூச்சலிடுவார் என்று அந்தக் கதை கூறுகிறது.
இருப்பினும், அத்தகைய சடங்கு உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
நவீன காலத்தில் ஜோனா

பட மூலாதாரம், Getty Images
இன்றுவரை, ஜோன் குறித்த கதைகளின் எண்ணற்ற மறுகட்டமைப்புகள் நடந்துள்ளன.
கடந்த 1866ஆம் ஆண்டு கிரேக்க எழுத்தாளர் இம்மானுவேல் ரோய்ட்ஸ் எழுதிய 19ஆம் நூற்றாண்டின் புனைகதைகள் உள்ளன. அவை மார்க் ட்வைன் போன்ற எழுத்தாளர்களால் பாராட்டப்பட்டு 1954இல் லாரன்ஸ் டுரெல் ஆங்கிலத்தில் தி க்யூரியஸ் ஹிஸ்டரி ஆஃப் போப் ஜோன் என மொழிபெயர்க்கப்பட்டன.
பிரிட்டிஷ் எழுத்தாளர் கரோல் சர்ச்சிலின் டாப் கேர்ள்ஸ் (1982) நாடகம் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பல பெண்கள் அழைக்கப்பட்ட ஓர் இரவு உணவின்போது நடைபெறுகிறது. அவர்களில் ஜோனாவும் ஒருவர்.
அவர் சினிமாவிலும் குறிப்பிடப்படுகிறார். முதல் படம் பிரபல ஸ்வீடன் நடிகை லிவ் உல்மேன் முன்னணி வேடத்தில் நடித்த பிரிட்டிஷ் தயாரிப்பாகும். ஆனால் கதை ஜோனாவின் காதல் உறவுகளை மையமாகக் கொண்டது. இந்தப் படம் அதன் பாலியல் கண்ணோட்டத்திற்காக விமர்சிக்கப்பட்டது.
அமெரிக்க எழுத்தாளர் டோனா வூல்ஃபோக் கிராஸின் போப் ஜோன் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜெர்மன் தயாரிப்பு, டை பாப்ஸ்டின் (2009).
இது ஜோனின் மிகவும் நேர்மறையான பிரதிநிதித்துவம் மற்றும் கத்தோலிக்க எதிர்ப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளதாக பேராசிரியர் லாரா கலாஸ் கூறினார். அதோடு, “அவரது மகனின் பிறப்பு பேசப்படுகிறது. ஆனால் 13ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆசிரியர்கள் செய்தது போல் அது வெட்கக்கேடான முறையில் வழங்கப்படவில்லை.”
இந்த நவீன விளக்கங்கள் ஒரு பெண்ணிய தொனியைக் கொண்டுள்ளன. ஏனெனில் அவை ஆணாதிக்க உலகில் முன்னேற முயலும் பெண்களின் கருப்பொருளைக் குறிப்பிடுகின்றன என்று கலாஸ் குறிப்பிட்டார். “அவர்கள் ஜோனை ஒரு வகையான முன்னோடி அல்லது பாதிரியாருக்கான ஒரு முன்மாதிரியாகக் கூறினர்.”
பேராசிரியர் கலாஸ் 1985இல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பெண்ணிய எழுத்தாளர் ஜோன் மோரிஸின் புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். அதில் அவர் பெண்களை அர்ப்பணிப்பதை ஆதரிப்பார் மற்றும் போப் ஜோன் உண்மையில் இருந்தார் என்று முன்மொழிகிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU