SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்’ (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.
முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன?
ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும்.
“இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன” என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் ‘சூப்பர்பக்’ (superbug) என அழைக்கப்படுகின்றன.
‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்’ தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட “கவலைக்குரிய” ஆய்வு என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், Getty Images
ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்தது என்ன?
இந்தியாவில் ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்டது. உயர்நிலை சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 99,027 மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்றும், அதனால் இந்த தரவுகள் சமூக மட்டத்தில் (community patterns) அதன் நிலையை பிரதிபலிக்காது எனவும் ஐசிஎம்ஆர் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள்:
- ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள தொற்றுகளில், கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியா தொற்று (72.1%) அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியா தொற்றும் (17.7%) அடுத்ததாக பூஞ்சை தொற்றும் (10.2%) உள்ளன.
- யுடிஐ (சிறுநீர் பாதை தொற்று) மற்றும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஃப்ளூரோக்வினோலோன் (Fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, யுடிஐ போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்போரின் (cephalosporin) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, செப்சிஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் கார்பாபெனெம் (carbapenems) எனும் ஆன்டிபயாடிக், பல்வேறு வித தொற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிபெராசிலின் – டாஸோபாக்டம் (piperacillin-tazobactam) எனும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக நோய்த்தொற்றுகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளன என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
- சிறுநீர்ப் பாதை தொற்று (யுடிஐ) போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக உள்ள இ.கோலை (Escherichia coli) பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அமிகசின் (Amikacin) போன்ற சில ஆன்டிபயாடிக் மருந்துகள் தொற்றை எதிர்த்து செயலாற்றுவதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- நிமோனியா போன்றவற்றுக்குக் காரணமான கிளெப்சியெல்லா நிமோனியே (Klebsiella pneumoniae) பாக்டீரியா, பிபெராசிலின் – டாஸோபாக்டம் (Piperacillin–tazobactam) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது.
- சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியா, கார்பாபெனெம் (Carbapenem) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது.
- அசினெடோபாக்டர் பௌமானி (acinetobacter baumannii) எனும் பாக்டீரியா மெரோபெனெம் (meropenem) ஆன்டிபயாடிக் மருந்துக்கு மிக அதிகளவில் (91%) எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளது.
- சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) எனும் டைஃபாய்டை ஏற்படுத்தவல்ல பாக்டீரியா செஃட்ரியாக்சோன் (Ceftriaxone- 98%), அஸித்ரோமைசின் (Azithromycin – 99.5%), டிஎம்பி-எஸ்எம்எக்ஸ் (TMP-SMX – 97.7%) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்திகொண்டவையாக உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
இதுமட்டுமின்றி, முந்தைய சில ஆய்வுகளும் இதுகுறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. “மருத்துவ ஆய்விதழான தி லான்செட், உலகளவில் 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகள் இதனால் நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை.” என குறிப்பிட்டுள்ளது. இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அந்த ஆய்வு கூறுகிறது.
இவ்வாறு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் தொற்றுகளுக்கு அன்றாடம் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அத்தொற்றுகள் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளன. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதை எப்படி புரிந்துகொள்வது? மருத்துவர்களிடம் பேசினோம்.
பட மூலாதாரம், Getty Images
ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியா எப்படி பெறுகிறது?
“பாக்டீரியாக்களை கிராம் நெகட்டிவ் மற்றும் கிராம் பாசிட்டிவ் என வகைப்படுத்துகிறோம். பாக்டீரியா தொற்றுக்களுக்குதான் பெரும்பாலும் நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவோம். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படவில்லையெனில் பாக்டீரியாக்கள் அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். அதாவது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உயிர் பிழைப்பதற்காக பாக்டீரியாக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு மருந்துகளுக்கு எதிரான சக்தியை பெறும்” என்று சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் விளக்கினார்.
பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கான காரணங்கள் என்ன?
“பாக்டீரியாக்கள் உருமாற்றம் அடைந்து பல்வேறு திரிபுகள் உருவாகும் போது அவை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறுகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் உபயோகிக்கும் போதோ அல்லது சரியான அளவில் பயன்படுத்தாத போதோ அவ்வாறு அவை மாறுகின்றன. சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் வேறு ஒன்றை மாற்றிக் கொடுத்தாலும் இது நிகழும்.” என கூறுகிறார், சென்னையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி.
பட மூலாதாரம், Getty Images
பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெற்றால் என்ன நடக்கும்?
“ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தி பாக்டீரியாக்களிடம் உருவாகிவிட்டால், அந்த மருந்து நோயாளிகளிடத்தில் வேலை செய்யாது.” என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.
“இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான தொற்றுகளுக்கு நாம் பயன்படுத்தும் பல ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காது. இதனால், நோயாளிகள் உயிரிழப்பதும் நிகழ்கின்றன. குறிப்பாக, புற்றுநோய், இதயநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கடினமான அறுவை சிகிச்சைகளை செய்து காப்பாற்றுகிறோம். ஆனால், பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெறுவதால், சாதாரண தொற்றுகளுக்கு ஆளாகியும் கூட அவர்கள் உயிரிழப்பதை பார்த்துள்ளோம்.” என்கிறார் மருத்துவர் விஜயலட்சுமி.
பாக்டீரியாக்கள் பலவும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால், மருத்துவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கும் திறன் வாய்ந்த மருந்துகள் நோயாளிகளிடையே செயலாற்றுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் எப்படி கவனமாக இருப்பது?
மருத்துவர்கள் சந்திரசேகர் மற்றும் விஜயலட்சுமியின் பரிந்துரைகள்
- பரிந்துரைக்கப்பட்டதை விடவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இடையில் அவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கவனத்துடன் பரிந்துரைக்க வேண்டும். சாதாரண சளி, காய்ச்சல் என்றாலே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை கல்ச்சர் பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும்.
- இந்தியாவில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மருந்தகங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC







