SOURCE :- INDIAN EXPRESS
சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் விஷால், நில நடுக்கம் வந்தால் கூட மறந்துடுவாங்க, ஆனால் எனது நடக்கும் உலகம் முழுவதும் பரவிவிட்டது என்று உருக்கமாக பேசியுள்ளார்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், கடைசியாக மார்க் ஆண்டனி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். அதன்பிறகு ஹரி இயக்கத்தில் நடித்த ரத்னம் படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதனிடையே விஷால் நடிப்பில், கடந்த 2013-ம் ஆண்டு தயாரான படம் மதகஜராஜா. காமெடி ஆக்ஷன் கதையுடன் தயாரான இந்த படத்தை சுந்தர்.சி இயக்கிய நிலையில், சந்தானம் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மதகஜராஜா படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ந் தேதி வெளியானது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பங்கேற்ற விஷால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பேசும்போது கை நடுக்கத்துடன் பேசியிருந்தார். இதனால் அவருக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழுந்த நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி விஷாலுக்கு மலேரியா காய்ச்சல் என்று கூறியிருந்தார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
விஷால், உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்து, பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், சில யூடியூப் சேனல்கள், விஷால் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டிருந்தது. இது தொடர்பான நடிகர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது உடல்நலம் தேறியுள்ள விஷால், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்,
அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற மதகஜராஜா திரைப்படத்தில் விழாவில் பங்கேற்ற, விஷால், ஒரு இடத்தில் நிலநடுக்கம் வந்தால், ஒரு நியூஸ் வரும், அடுத்த நாள் அதை மறந்துவிடுவார்கள். ஆனால் விஷால் நடுக்கம் உலகளவில் பரவி விட்டது. விஷால் நன்றாக இருக்க வேண்டும். அவர் மறுபடியும் மீண்டு வரவேண்டும், அவருக்கு என்ன பிரச்னை, என்று உலகளவில் பல பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பல எனக்காக கண்ணீர் விட்டிருக்கிறார்கள். நான் அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒன்றை உணர்ந்தேன். என்னை நேசித்தவர்கள், நேசிக்காதவர்கள், பிடிக்காதவர்கள், என பலரும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். கோவில் வாசலில் பூ விற்க்கும் அம்மா ஒருவர், துப்புரவு தொழிலாளி என பலர் என்னிடம் நலம் விசாரித்தார், நான் வீடு விடாக சென்று என்னை பிடிக்குமா என்று கேட்டால் கூட சரியான பதில் வந்திருக்காது.
எல்லோருக்கும் நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஆர்யா போன்ற ஒரு நண்பன் கிடைப்பது பாக்கியம். நான் எதோ புன்னியம் செய்திருக்கிறேன். அதனால் தான் அவன் எனக்கு நண்பனா கிடைத்திருக்கிறான். உண்மையில் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் வேட்டி சட்டை மட்டும் கட்டி விடுங்கள் என்று வலுக்கட்டாயமாக அந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று விஷால் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS