SOURCE :- BBC NEWS

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

‘ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச ​​நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா’ என உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?” என்பது உள்பட 14 கேள்விகளையும் முன்வைத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில், குடியரசுத் தலைவர் கருத்து கேட்டு குறிப்பு அனுப்புவது அந்தத் தீர்ப்பை பாதிக்குமா? இந்த நகர்வு குறித்து தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

குடியரசுத் தலைவரின் ‘குறிப்பு’ என்றால் என்ன?

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசின், பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது ‘சட்டவிரோதம்’ எனக்கூறி, சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு தானாக குடியரசுத் தலைவருக்கும் பொருந்தியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு குறிப்பு அனுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் குறிப்பு என்பது அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் அனுப்பப்படுகிறது.

இந்தப் பிரிவின் கீழ், “எந்த சமயத்திலும், ஒரு சட்டம் தொடர்பான ஒரு கேள்வி எழுந்துள்ளதாகவோ அல்லது எழ வாய்ப்புள்ளதாகவோ குடியரசுத் தலைவருக்கு தோன்றினால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவது பொருத்தமானதாகவும் இருந்தால், அவர் அந்தக் கேள்வியை நீதிமன்றத்திற்குப் பரிசீலனைக்காக அனுப்பலாம்.”

“மேலும் உச்ச நீதிமன்றம், பொருத்தமான விசாரணைக்குப் பிறகு, அது குறித்த தனது கருத்தை குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கலாம்.”

குடியரசுத் தலைவர் முன்வைத்த 14 கேள்விகள்

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

1. பிரிவு 200-இன் கீழ் ஒரு மசோதா ஒப்புதலுக்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?

2. ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, ​​அமைச்சர்கள் குழுவால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?

3. இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

4. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?

5. அரசியலமைப்பு ரீதியாக காலக்கெடு இல்லாவிட்டாலும், சட்டப்பிரிவு 200-இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநர் பயன்படுத்துவதற்காக, நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?

6. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது மறுஆய்வுக்கு உட்பட்டதா?

7. பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், rajbhavan_tn

8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அல்லது வேறுவிதமாக ஒதுக்கி வைக்கும்போது, ​​பிரிவு 143-இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற கடமைப்பட்டுள்ளாரா?

9. கேள்விக்குரிய மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, பிரிவுகள் 200 மற்றும் 201இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பு வழங்க அனுமதிக்கப்படுகிறதா?

10. குடியரசுத் தலைவர்/ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களை, பிரிவு 142-ஐப் பயன்படுத்தும் நீதித்துறை உத்தரவின் மூலம் மாற்ற முடியுமா?

11. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

12. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் உள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?

13) அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவர்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா? முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?

14) பிரிவு 131-இன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?

தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

X பதிவை கடந்து செல்ல

X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் ‘குடியரசுத் தலைவர் குறிப்பை’ நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது.” என்றும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

“இது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சியே. சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளரான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக இக்குறிப்பு சவால் செய்கிறது.”

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், MKStalin/X

தனது பதிவில் 3 கேள்விகளையும் எழுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் எந்த ஆட்சேபனையும் இருக்க வேண்டும்?

மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் ‘தடையை’ சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா?

பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?

குடியரசுத் தலைவரின் குறிப்பும், அதில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும் மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு பாஜக ஆட்சி அல்லாத அனைத்து மாநிலங்களையும் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரில் நாம் நமது முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்குமா?

உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பு- மாநில மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

“குடியரசுத் தலைவரின் குறிப்பு என்பது எந்த வகையிலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாதிக்காது” என்கிறார் அரசமைப்புச்சட்ட நிபுணரும் மூத்த வழக்கறிஞருமான விஜயன்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், “136 மற்றும் 142 பிரிவுகளின் கீழ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்படி உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்புவது என்பது, மேல்முறையீடாகவோ அல்லது அந்தத் தீர்ப்பை மதிப்பாய்வு செய்வதற்கான கோரிக்கையாகவோ கருத முடியாது.

குடியரசுத் தலைவர் கருத்து மட்டுமே கேட்டுள்ளார். அதன்படி உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்தாலும், அது வெறும் கருத்தாக மட்டுமே இருக்கும், ஒரு சட்ட விதியாக (Binding precedent) அல்லது வேறொரு தீர்ப்பாக இருக்காது. எனவே இது எந்தவகையிலும் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை பாதிக்காது.” என்கிறார்.

இவ்வாறு ஒரு வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்புவது மிகவும் அரிதான விஷயம் எனக்கூறும் மூத்த வழக்கறிஞர் விஜயன், “இதற்கு பதிலாக உச்ச நீதிமன்றம் கூறப்போகும் கருத்து என்பது, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக இருக்கப்போவதில்லை.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “அப்படி குடியரசுத் தலைவர் குறிப்புகள் மூலம் தீர்ப்புகளை மாற்றலாம் என்றால், எத்தனையோ உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாறியிருக்கும் அல்லவா?” என கேள்வியெழுப்புகிறார்.

திமுகவுக்கு பின்னடைவா?

“நிச்சயமாக இந்த நகர்வு திமுகவுக்கு பின்னடைவாக இருக்காது, அதே சமயம் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படும்” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி.

தொடர்ந்து பேசிய அவர், “மாநில மசோதாக்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே குடியரசுத் தலைவரின் குறிப்பு வெளியாகியுள்ளது” என்கிறார்.

“ஆளுநர் தனது கடமையைச் செய்யாமல், தாமதப்படுத்தினார் என்பதுதான் திமுகவின் குற்றச்சாட்டாக இருந்தது. அதையே உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, அது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது என்று கூறியிருந்தது” என்பதைக் குறிப்பிடும் சிகாமணி,

“அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பிற்கு எதிராக குடியரசுத் தலைவர் முன்வைத்துள்ள கேள்விகள் என்பது மத்திய அரசின் கேள்விகளாகவே கருதப்படும். எனவே மாநில உரிமைகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திமுகவிற்கு இது சாதகமான ஒரு நகர்வே” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU